முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

தோழர்கள்

அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (பகுதி-4)
 عبد الله ابن عباس

க்கா நகரில் ஒரு தெருவில், கசகசவென்று மக்கள் கூட்டம். இலவச வினியோகம் என்று அறிவிக்கப்பட்டால் பொங்கி வழியுமே அப்படியொரு கூட்டம். தெருவெங்கும் நிரம்பி வழிந்த மக்களால், அவ்வழியே கடந்து செல்ல வேண்டிய பாதசாரிகளுக்குக்கூட வழி கிடைக்கவில்லை. அந்தத் தெருவில்தான் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுவின் வீடு. அவரைச் சந்திக்கத்தான் அத்தனை கூட்டமும்.

இப்னு அப்பாஸின் மாணவர் ஒருவர் உள்ளே சென்று, ‘பெருங் கூட்டமொன்று உங்களைச் சந்திக்கக் காத்திருக்கிறது’ என்று நிலைமையைத் தெரிவித்தார். ‘தண்ணீர் எடுத்து வாருங்கள்’ என்றார் அந்த மாணவரிடம். தண்ணீர் வந்தது. ஒளூச் செய்தார். அமர்ந்து கொண்டார். பிறகு அந்த மாணவரிடம் கூறினார். “குர்ஆனைப் பற்றியும் அதன் எழுத்துகளை உச்சரித்து ஓதுவது பற்றியும் கேள்வி கேட்க விரும்புபவர்களை உள்ளே வரச் சொல்லவும்.”

வெளியே சென்று அறிவித்தார் அம்மாணவர். பெருந் திரளாய் ஒரு கூட்டம் உள்ளே நுழைய வீடு நிரம்பி வழிந்தது. அவர்கள் ஒவ்வொருவரின் ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவான விளக்கமும் பதிலும் அளித்தார் இப்னு அப்பாஸ். பிறகு அவர்களிடம், “உங்களுடைய சகோதரர்களுக்கு இடமளியுங்கள்” என்றதும் அவர்கள் வெளியேறினர்.

அந்த மாணவரிடம் கூறினார். “குர்ஆனுக்கு விளக்கம் பெற விரும்புபவர்களை உள்ளே வரச் சொல்லவும்”

அடுத்த கூட்டம் வீட்டை நிரப்பியது. ஒவ்வொருவரின் கேள்விகளுக்கும் பதில், விளக்கம் என்று விவரித்தார் இப்னு அப்பாஸ். இப்படியாக, இஸ்லாமியச் சட்டம், ஹராம்-ஹலால் தொடர்புள்ள கேள்விகள், வாரிசுரிமை விளக்கங்கள், அரபு மொழி, கவிதை, சொல்லிலக்கணம் என்று பகுதி, பகுதியாக மக்கள் நுழைந்து அவ்வீடெங்கும் கல்வி மழை.

இப்படியான சிறப்புத் தகுதிகள் அமைந்திருந்தும் வாத, விவாதங்களைத் தமது அறிவுத்திறனைப் பறைசாற்றும் யுத்தங்களாய் அவர் கருதியதில்லை. எதிர்த் தரப்பை வெட்டிச் சாய்த்து வீழ்த்த நினைத்ததில்லை. அவை உண்மையை அறியவும் உணரவும் கூடிய நேர்வழியாகவே கருதி அவர் செயல்பட்டிருக்கிறார். யாரைக் குறித்தும் எவ்விதமான வெறுப்போ, சினமோ, காழ்ப்புணரர்ச்சியோ அவரிடம் இருந்ததில்லை.

இவ்விதம் பலதரப்பட்ட குழுக்கள் ஒரே நாளில் வந்து குழுமுவதைச் சமாளிக்க இப்னு அப்பாஸ் திட்டம் வகுத்தார். ஒருநாள் ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்த வகுப்பு நடைபெறும். அதன்படி ஒருநாள் குர்ஆன் விளக்க வகுப்பு, அடுத்த நாள் மார்க்கச் சட்டம், மற்றொரு நாள் பண்டைய வரலாறு, அடுத்து நபியவர்களின் படையெடுப்பு என்று வகுப்புகள் பிரிக்கப்பட்டன. இப்னு அப்பாஸின் இல்லம் மக்காவின் பல்கலைக்கழகம் ஆகிப்போனது.

இஸ்லாமியக் கல்வியறிவைப் பயிலும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க, தம்மை முழுமூச்சுடன் ஈடுபடுத்திக் கொண்டாலும் பொது மக்களும் தம்மிடமிருந்து பயன்பெற உரிமை பெற்றுள்ளார்கள் என்பதை இப்னு அப்பாஸ் மறந்துவிடவில்லை. அவர்களுக்குப் பயன்தரும் சொற்பொழிவுகள் நேரம் குறிக்கப்பட்டுத் தனியாக நடைபெற்று வந்தன. அத்தகைய சொற்பொழிவு ஒன்றில் -

“உங்களுள் பாவம் புரிபவர், அதனால் பெற்றுவிடும் தற்காலிகப் பயனை நினைத்துப் பாதுகாப்பாய் உணர வேண்டாம். ஏனெனில் பாவத்துடன் இணைந்து சென்றுவிட்ட விஷயமானது பாவத்தைவிட மோசமானது. அது என்னவெனில், நீங்கள் குற்றம் புரியும்போது உங்களுக்குச் சான்றாய்த் திகழும் வானவர்கள்முன் வெட்கமற்ற நிலையில் இருந்தீர்களே அது பாவத்தைவிட கொடியதாகும். பாவம் புரியும்போது, அல்லாஹ்வின் தண்டனையை மறந்து சிரித்துக் களித்தீர்களே, அது பாவத்தைவிட மோசமானதாகும். பாவம் புரிய வாய்ப்பு கிடைத்தால் அதிலுள்ளதைக் கண்டு உங்களுக்கு உவகை ஏற்பட்டதே, அது பாவத்தைவிட மோசமாகும்."

“மேலும் வேறு எது பாவத்தைவிட மோசமானது என்பது உங்களுக்குத் தெரியுமா? பாவச் செயலைச் செய்யும்போது நாம் கண்டுபிடிக்கப்பட்டால் நமது பெருமைக்கும் புகழுக்கும் இழுக்கு ஏற்பட்டுவிடுமே என்பதற்காக மட்டும் கலக்கமுற்றுவிட்டு அல்லாஹ் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே என்ற அச்சம் இல்லாமல் இருந்தீர்களே, அது!“

எத்தகு எளிய உயரிய அறிவுரை? சிந்தனை மழுங்காமல் உணரும் பேறு நமக்கு வாய்க்க வேண்டும்.

அறிவு, அதனுடன் சேர்ந்த நாவன்மை அமைவது இறைவனின் கொடை.

அவற்றை அவன் வழியில் திறம்படச் செயல்படுத்த முடிவது அவனின் வரம். அவையெல்லாம் இப்னு அப்பாஸுக்கு அமைந்திருந்தன. மஸ்ரூக் இப்னுல் அஜ்தா என்பவர் இப்னு அப்பாஸைப் பற்றித் தெரிவித்த செய்தி ஒன்று உண்டு. “அவரது தோற்றம், மிகவும் அழகிய தோற்றம்; அவரது பேச்சு நாவன்மை மிக்கது; அவரது உரையாடல் அறிவாற்றல் மிக்கது”

ஷகீக் என்பவர் இப்னு அப்பாஸைப் பற்றிக் குறிப்பிடும்போது, “ஹஜ்ஜின்போது இப்னு அப்பாஸ், மக்களிடம் சொற்பொழிவாற்றினார். சூரா அந்-நூரை ஓதி, அதற்கான விளக்கமும் கூறினார். அதைச் செவியுற்ற அங்கிருந்த முதியவர் ஒருவர், அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஒருவரிடமிருந்து இத்தகு வார்த்தைகள் வெளிவருவதை நான் இதுவரை கேட்டதில்லை. துருக்கியர்கள் இதைக் கேட்டாலே போதுமே, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்களே” என்று வியந்தார்.

அதைப்போல் தவூஸ் என்பவர், “அறிவுத் திறனில் சிறந்தோங்கிய 70, 80 நபித் தோழர்களுடன் நான் அமர்ந்திருக்கிறேன். அவர்களுள் எவரும் இப்னு அப்பாஸின் கருத்துடன் முரண்பட்டதில்லை. ‘நீர் சொன்னது உண்மை’ அல்லது ‘விஷயம் நீர் சொன்னதைப் போன்றதுதான்’ என்றே கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்” என்று சான்றுரைத்தார்.

இப்படியான சிறப்புத் தகுதிகள் அமைந்திருந்தும் வாத, விவாதங்களைத் தமது அறிவுத்திறனைப் பறைசாற்றும் யுத்தங்களாய் அவர் கருதியதில்லை. எதிர்த் தரப்பை வெட்டிச் சாய்த்து வீழ்த்த நினைத்ததில்லை. அவை உண்மையை அறியவும் உணரவும் கூடிய நேர்வழியாகவே கருதி அவர் செயல்பட்டிருக்கிறார். யாரைக் குறித்தும் எவ்விதமான வெறுப்போ, சினமோ, காழ்ப்புணரர்ச்சியோ அவரிடம் இருந்ததில்லை.

மாறாக,

“அல்லாஹ்வின் ஒரு வசனத்தைப் பற்றிய முக்கியத்துவத்தை நான் உணர்ந்தவுடனேயே, நான் எந்தளவு உணர்ந்தேனோ, புரிந்துகொண்டேனோ அந்தளவு மக்களெல்லாம் அதை உணரவேண்டுமே என்று விழைவேன். இஸ்லாமிய ஆட்சியாளர் ஒருவர் நேர்மையுடனும் நடுநிலையுடனும் ஆட்சி புரிகிறார் என்று அறியவந்தால் - என் சார்பான வழக்கு ஏதும் அவரிடம் இல்லாதபோதும் - அவருக்காக நான் மகிழ்வடைந்து, அவர் பொருட்டு இறைவனிடம் இறைஞ்சுவேன். முஸ்லிம்களின் பகுதியில் மழை பொழிகிறது என்று அறியவந்தால் – எனது கால்நடைகள் அந்த நிலத்தில் மேயாவிட்டாலும் - அது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்” என்று கூறியுள்ளார் இப்னு அப்பாஸ்.

எவ்வளவு உன்னதம்? அண்டை வீட்டுக்காரர் புதுச் செருப்பு வாங்கினாலே பொறாமையில் மூழ்கும் மனோநிலைதான் இன்று நம்மில் பலரிடம்.

இப்னு அப்பாஸ் பஸ்ரா நகரின் ஆளுநராக இருந்தபோது அவரைக் கூர்ந்து கவனித்து அறிந்த ஒருவர் கூறியுள்ள தகவல் நமக்கும் பயன்மிக்கது.

“இப்னு அப்பாஸ் மூன்று விஷயங்களை எடுத்துக் கொள்வார். மூன்று விஷயங்களை விட்டுவிடுவார். அவர் யாரிடம் உரையாடுகிறாரோ அவரது நெஞ்சத்தைத் தம்பால் கவர்ந்து எடுத்துக் கொள்வார். அவரிடம் உரையாடுபவரை உன்னிப்பாகக் கூர்ந்து கவனித்து விஷயங்களை எடுத்துக் கொள்வார். இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் எது எளிதானதோ அதை எடுத்துக் கொள்வார். வீணான சர்ச்சைகளில் மூழ்குவதை விட்டுவிடுவார். தீயொழுக்கம் உள்ளவர்களுடன் செல்வதைத் தவிர்த்து விடுவார். எது மன்னிப்புக் கேட்க வைக்குமோ அத்தகைய செயலைச் செய்வதை விட்டுவிடுவார்.”

அவரது தாராள குணமும் விருந்தோம்பலும் பிரசித்தமாகவே இருந்திருக்கின்றன . “உணவு, பானம், பழங்கள், கல்வி ஞானம் ஆகியன இப்னு அப்பாஸின் இல்லத்தில் நிறைந்திருந்ததைப்போல் மற்ற வீடுகளில் இருக்கக் கண்டதில்லை” என்று மக்கள் தெரிவித்துள்ள தகவல்களும் உண்டு.

மூத்த தோழர்களிடம் அன்பும் கருணையும் மதிப்பும் மிகைத்திருந்தார் இப்னு அப்பாஸ் என்று துவக்கத்திலேயே பார்த்தோமில்லையா? பஸ்ராவுக்குச் சென்றிருந்த அபூஅய்யூப் அல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு அப்பொழுது அங்கு ஆளுநராக இருந்த இப்னு அப்பாஸின் இல்லத்திற்கு அவரைச் சந்திக்கச் சென்றார். கடன் சுமை இருந்திருக்கிறது அபூஅய்யூபுக்கு. இருகை விரித்து அவரை அன்புடன் வரவேற்ற இப்னு அப்பாஸ், “தாங்கள் அல்லாஹ்வின் தூதருக்கு என்ன உபகாரம் செய்தீர்களோ, அதை நான் உங்களுக்குச் செய்வேன்” என்று அபூஅய்யூப் தங்கிக்கொள்ள தமது முழு வீட்டையும் காலி செய்து தந்துவிட்டார்.

அவரது கடன் சுமை அறிந்து, “தங்களுக்கு எவ்வளவு கடன் உள்ளது?” எனக் கேட்டார்.

“இருபதாயிரம்” என்றார் அபூஅய்யூப்.

“அவ்வளவுதானே, இந்தாருங்கள்” என்று - தீனாரோ, திர்ஹமோ - நாற்பதாயிரம் ரொக்கத்தை தம்மிடமிருந்து எடுத்து அளித்தார். மட்டுமின்றி, இருபது அடிமைகள் மற்றும் சில பல பொருட்கள் என்று அன்பளிப்பை அள்ளி அள்ளித் தந்தார் இப்னு அப்பாஸ்.

சொல் ஒன்று; செயல் வேறு என்று வாழாத இறை அச்ச வாழ்க்கை அவருடையது. இப்னு மலீக்கா கூறியுள்ளார் – “இப்னு அப்பாஸுடன் மக்காவிலிருந்து மதீனா வரை பயணம் சென்றேன். வழியில் இளைப்பாறத் தங்கும்போது இரவின் பாதியைத் தொழுகையில் கழிப்பார். இரண்டு இரண்டு ரக்அத்களாகத் தொழுவார். குர்ஆனை ஒவ்வொரு எழுத்தும் உச்சரித்து நிதானமாக ஓதுவார். அதிகம் அழுவார்; விம்முவார். ஓர் இரவு காஃப் எனும் சூராவின் 19ஆவது வசனமான “மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது (அப்போது அவனிடம்) எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)” என்பதை ஓதிக்கொண்டிருந்தவர், விம்மியழ ஆரம்பித்துவிட்டார். அதே வசனத்தை மீண்டும் ஓதுவதும், விம்முவதுமாக வைகறை நேரமே நெருங்கிவிட்டது. பொலிவான அவரது முகத்தில் -- கன்னத்தில் -- கோடு இருக்கும். அது அவரது கண்ணீர்த் தடம்.”

இறுதிக் காலத்தில் அவரது கண்பார்வை பறிபோனது. தமது 71ஆவது வயதில் தாயிஃப் நகரில் மரணமடைந்தார் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ். அவருக்கான ஜனாஸாத் தொழுகையை அலீ ரலியல்லாஹு அன்ஹுவின் மைந்தர் முஹம்மது இப்னுல் ஹனஃபிய்யா முன்நின்று நடத்தினார். தமது இரங்கல் பேச்சில் அவர் குறிப்பிட்டது –

“இன்று நம் உம்மாவின் அறிஞர் இறந்துவிட்டார்”.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

Comments   

ABDUL AZEEZ
0 #1 ABDUL AZEEZ 2014-11-05 13:58
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர்களே...

// குர்ஆனை ஒவ்வொரு எழுத்தும் உச்சரித்து நிதானமாக ஓதுவார். அதிகம் அழுவார்; விம்முவார். ஓர் இரவு காஃப் எனும் சூராவின் 19ஆவது வசனமான “மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது (அப்போது அவனிடம்) எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயே ா அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)” என்பதை ஓதிக்கொண்டிருந் தவர், விம்மியழ ஆரம்பித்துவிட்டார்.//

இந்த அம்சம் நம்மில் இருக்கவேண்டும் என்று பிரார்திக்கிரேன்.

மா சலாம்.
அப்துல் அஜீஸ்
Quote | Report to administrator
மு முஹம்மத்
0 #2 மு முஹம்மத் 2014-11-07 01:49
அல்ஹம்துலில்லாஹ

அருமையான வரிகள் அனைவரும் தமது உள்ளத்தில் பதித்து எந்நேரமும் கடைபிடிக்க வேண்டிய எல்லாக் காலத்திற்கும் தேவையான பண்புகள்.


// இப்படியான சிறப்புத் தகுதிகள் அமைந்திருந்தும் வாத, விவாதங்களைத் தமது அறிவுத்திறனைப் பறைசாற்றும் யுத்தங்களாய் அவர் கருதியதில்லை. எதிர்த் தரப்பை வெட்டிச் சாய்த்து வீழ்த்த நினைத்ததில்லை. அவை உண்மையை அறியவும் உணரவும் கூடிய நேர்வழியாகவே கருதி அவர் செயல்பட்டிருக்க ிறார். யாரைக் குறித்தும் எவ்விதமான வெறுப்போ, சினமோ, காழ்ப்புணரர்ச்ச ியோ அவரிடம் இருந்ததில்லை. //
Quote | Report to administrator
நாகை எஸ்.எம்.ஆரிப்
0 #3 நாகை எஸ்.எம்.ஆரிப் 2014-11-15 18:48
அல்ஹம்துலில்லாஹ ். அவசியமாக அறிய வேண்டிய கட்டுரை. அந்த உம்மாவின் அறிஞர் வீட்டு வாசலில் நின்றது போன்ற உணர்வை உருவாக்கும் வகையில் அமைந்திருந்தது.
Quote | Report to administrator
HAMEED ARIFF
0 #4 HAMEED ARIFF 2015-05-11 13:09
அருமையான பதிவு, ஒவ்வொரு முஸ்லிமும் முக்கியம் தெரிந்துகொள்லவென்டியவை.

இது பொல இஸ்லாமியர்கல் கன்ட போர் பற்றி தொளிவான பதிவு தேவை
Quote | Report to administrator
AHMAD
0 #5 AHMAD 2015-07-25 14:25
allaah Bro. Noorudhin avarkalukku arulpalippaanaa ka, avarai nervaliyaiyum adaiyacheivanak a.
Quote | Report to administrator
நூருத்தீன்.
0 #6 நூருத்தீன். 2015-07-28 04:26
Quoting AHMAD:
allaah Bro. Noorudhin avarkalukku arulpalippaanaaka, avarai nervaliyaiyum adaiyacheivanaka.

ஆமீன்.
அல்லாஹ்விடம் தங்களுக்கும் அதையே இறைஞ்சுகிறேன்.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்