முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

தோழர்கள்

உமைர் பின் ஸஅத்

( عمير بن سعد இறுதிப் பகுதி)

கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் கடிதம் கிடைத்ததும், ஹிம்ஸின் ஆளுநர் பதவியை இறக்கி அங்கேயே வைத்துவிட்டு, உடனே மூட்டை-முடிச்சைக்கட்டிக் கொண்டு ஸிரியாவிலிருந்து மதீனாவிற்குப் புறப்பட்டார் ஆளுநர் – அதுவும் கால்நடையாக.

உமரை வந்து உமைர் சந்திக்க, அவரது தோற்றத்தைப் பார்த்து அதிர்ந்து, விசாரித்தார் கலீஃபா.

 

 

“நடந்தா வந்தீர்?”

“ஆம் அமீருல் மூஃமினீன் அவர்களே”

“நீர் ஓர் ஆளுநர். பயணிப்பதற்குப் பிராணி ஏதும் அவர்கள் வழங்கவில்லையா?”

“அவர்களும் தரவில்லை; நானும் கேட்கவில்லை.”

முக்கிய விஷயத்திற்கு வந்தார் உமர். “அரசாங்கக் கருவூலத்திற்குச் சேரவேண்டிய பணம் எங்கே?”

“நான் எதுவும் கொண்டு வரவில்லை” என்றார் உமைர் இப்னு ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு.

நபியவர்களின் மறைவிற்குப் பிறகு கலீஃபாக்களின் ஆட்சியில் பாரசீகமும் பைஸாந்தியமும் முஸ்லிம்கள் வசமாகிவர, கைப்பற்றிய நாடுகளைக் காக்க வேண்டுமல்லவா? நகரங்களில் பாதுகாப்புப் படை அரண்களை நிறுவ ஆரம்பித்திருந்தார் உமர். அந்நகரங்களில் படைவீரர்களுக்கான குடியிருப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு முகாமிலும் குதிரைத் தொழுவம்; அவற்றில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட குதிரைகள் போர்த் தளவாட வசதிகளுடன் தயார் நிலையில் நின்றன. எத்தகு அவசர நிலையிலும் தளபதிகள் உடனே போர்க் களத்திற்கு விரைந்து செல்ல அந்த ஏற்பாடு.

முஸ்லிம்கள் கைப்பற்றிய நாடுகளுள் ஸிரியா ஒரு முக்கியமான நாடு. அந்நாட்டில் மட்டுமே 36 ஆயிரம் குதிரை வீரர்கள் ஒரே நேரத்தில் கிளம்பிச் செல்லும் அளவிற்கு ஏற்பாடுகள் அமைந்திருந்தன. படை அரண்கள் ஒவ்வொன்றிலும் இக்குதிரைகள் மேய்வதற்கென்றே பெரும் நிலப்பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குதிரையின் தொடையிலும் “ஜெய்ஷ் ஃபீ ஸபீலில்லாஹ் - இறைப்பாதையில் அறப்போராளிக் குழு” என்று அடையாளமிடப்பட்டிருந்தது.

ஹிம்ஸ் பகுதியில் இவ்விதம் அமைக்கப்பட்டிருந்த படை அரணை நிர்வகிக்க முக்கியமான தோழர்களை அடுத்தடுத்த நிலையில் நியமித்திருந்தார் உமர். அபூஉபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ். அவருக்கு அடுத்து உபாதா இப்னு ஸாமித், அய்யாத் இப்னு ஃகனம், ஸஅத் இப்னு ஆமிர் இப்னு ஹுதைம், உமைர் இப்னு ஸஅத், அப்துல்லாஹ் இப்னு கரத். அதேபோல் ஃகின்னாஸிரீன் நகருக்கு காலித் இப்னுல் வலீத். சில காலம் இங்கும் காலிதுக்கு அடுத்து உமைர் இப்னு ஸஅத் நியமிக்கப்பட்டிருந்தார். ரலியல்லாஹு அன்ஹும். இத்தகைய முக்கியப் பொறுப்பு தம்மை வந்தடைந்தபோது உமைர் இப்னு ஸஅத் ஒரு வாலிபர். இள வயதிலேயே அத்தகைய திறமையும் பெருமையும் அவருக்கு அமைந்திருந்தன. வெறும் திறமை மட்டுமல்ல. சிறந்த போர் வீரர் அவர்.

கலீஃபா உமரின் ஆட்சியின்போது பற்பல போர்கள் நிகழ்ந்ததை முந்தைய தோழர்களின் வரலாற்றில் அவ்வப்போது பார்த்து வந்தோம். அவ்விதம் ஒரு போரில் சீஸேரிய்யாவைக் கைப்பற்ற முஸ்லிம்கள் முற்றுகையிட்டிருந்தனர். முஸ்லிம் படைகளின் வலப் பிரிவில் உபாதா இப்னு ஸாமித் ரலியல்லாஹு அன்ஹு. அவருடைய தலைமையில் உமைர் இப்னு ஸஅத். முற்றுகை நீடித்து, வெற்றி தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் தம் தோழர்களை ஊக்குவித்து உரையாற்றினார் உபாதா இப்னு ஸாமித். இறுதியில், ‘உயிர்த் தியாகம் புரிய வேண்டும் என்று மனமார விரும்புங்கள். நான் முன்னணியில் நிற்பேன். அல்லாஹ் எனக்கு வெற்றி அளித்தால் இவ்விடத்திற்குத் திரும்புவேன்; நான் திரும்பாவிட்டால் அவன் என்னை உயிர்த் தியாகி ஆக்கியிருக்கவேண்டும் என எண்ணிக் கொள்ளுங்கள்.’

முஸ்லிம்களுக்கும் பைஸாந்தியர்களுக்கும் இடையே களத்தில் ஆக்ரோஷ மோதல் துவங்கியது. அவர்களை நோக்கி விரைந்தார் உபாதா. அந்தப் படையில் இடம்பெற்றிருந்தார் உமைர் இப்னு ஸஅத். உபாதா விரைவதைக் கண்ட உமைர், ‘இதோ பாருங்கள் நம் படைத் தலைவரின் துணிவை. அவரைப் பின்பற்றுங்கள்’ என்று தம் பங்கிற்கு ஊக்குவித்து தாமும் பாய, படையணியில் புத்துணர்வு தோன்றிப் பரவியது. ஒரு வழியாக பைஸாந்தியர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

உமர் பயணம் மேற்கொண்டு ஆளுநர்களைச் சந்திப்பதும் நிர்வாகத்தை மேற்பார்வை இடுவதும் உண்டு. ஒருமுறை ஸிரியாவிற்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்தார் உமைர் இப்னு ஸஅத். “அமீருல் மூஃமினீன்! நமக்கும் பைஸாந்தியர்களுக்கும் இடையே அரப்ஸுஸ் என்றோர் ஊர் உள்ளது. அந்நகரிலுள்ள மக்கள் நம்முடைய பலவீன அம்சங்களை எதிரிகளுக்குத் தெரிவித்துவிடுகின்றனர். ஆனால் எதிரிகளைப் பற்றி நமக்கு எதுவும் தெரிவிப்பதில்லை.”

போரில் முஸ்லிம்களைப் பெரும் ஆபத்திற்கு உள்ளாக்கினர் அரப்ஸுஸ் மக்கள். “நீங்கள் அம்மக்களை அடையும்போது அவர்களுக்கு நிபந்தனை விதித்து வாய்ப்பு அளியுங்கள். ஓர் ஆட்டிற்கு இரண்டு ஆடுகள்; ஓர் ஓட்டகத்திற்கு இரண்டு ஒட்டகங்கள் என அவர்களிடம் உள்ள ஒவ்வொரு பிராணிக்கும் இரண்டிரண்டு அளிப்போம். அதைப்பெற்றுக்கொண்டு அவர்கள் அவ்வூரிலிருந்து வெளியேறிவிட வேண்டும். இந்நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் நாம் வாக்களித்தை அவர்களுக்கு அளித்து அவர்கள் வெளியேறிதும் அரப்ஸுஸை அழித்துவிடுங்கள். இதற்கு அவர்கள் மறுத்தால் அவர்களை எச்சரித்துவிட்டு, அவர்களுக்கு ஓர் ஆண்டுகாலம் அவகாசம். அதற்குள் அவர்கள் திருந்தாவிடில் அவர்களுக்கு ஏதும் பகரம் வழங்காமல், அவ்வூரை அழித்துவிடுங்கள்” கலீஃபாவிடமிருந்து கட்டளை பிறந்தது.

உமைர் இப்னு ஸஅத் அவ்வூர்வாசிகளிடம் வந்து அதைத் தெரிவித்தார். அம்மக்களோ, ‘ம்ஹும் போகமாட்டோம்’ என்று வாய்ப்பையும் தவறவிட்டார்கள். ‘எதிரிகளுக்கு உளவு சொல்வதையும் நிறுத்த மாட்டோம்’ என்று அழிச்சாட்டியத்தைத் தொடர்ந்தார்கள். உமைர் இப்னு ஸஅத், அம்மக்களுக்கு ஓர் ஆண்டு அவகாசம் அளித்துவிட்டு, பிறகு அவ்வூரைக் கைப்பற்றி அழித்தார்.

இவ்விதமாகப் போரும் களமும், வாளும் வீரமும் என்று இயங்கிக்கொண்டிருந்தார் உமைர் இப்னு ஸஅத். அல்-ஜஸீரா எனும் ஸிரியாவின் கிழக்குப் பகுதியில் முஸ்லிம் படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரட்ட முனையில் இருந்தவருக்கு கலீஃபா உமரிடமிருந்து தகவல் வந்தது.

‘ஹிம்ஸிற்குச் சென்று ஆளுநராகப் பொறுப்பேற்று மக்களை வழிநடத்தவும்.’

ஹிம்ஸ் மக்களிடம் மகாக் கெட்டப் பழக்கம் ஒன்று இருந்தது. யாரை ஆளுநராக நியமித்தாலும் சரி, அவர்மீது புகார் கூறுவதும் அதிருப்தியுறுவதும் அவர்களுக்கு வாடிக்கை. 'இவரிடம் இது சரியில்லை, அது சரியில்லை' என்று ஏதாவது உப்புச்சப்பில்லாத காரணங்கள்கூறி கலீஃபாவுக்குப் புகார்ப் பட்டியல் அனுப்பி ஆளுநரை மாற்றக் கோரிக்கை வைக்கப்படும். கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு, தம் ஆளுநர்களை குருட்டாம் போக்கில் தேர்ந்தெடுப்பவர் அல்லர். ஆளுநர் தேர்வுக்கென அவர் உருவாக்கி வைத்திருந்த விதிமுறைகள் மிகக் கடுமையானவை. தவிரவும் ஆளுநர் பொறுப்பில் அவர் நியமித்தவர்களும் மிகவும் சிறப்பு வாய்ந்த நபித்தோழர்களையே. அத்தகு தரமானவர்களின் தலைமையையே சரியில்லை என்றார்கள் ஹிம்ஸ் மக்கள். இதை அம்மக்களின் அகம்பாவம் என்பதா, விவரங்கெட்டவர்கள் என்று கைச்சேதப்படுவதா?

சற்று ஆழ்ந்து சிந்தித்தால் நாமெல்லாம்கூட அந்த ஹிம்ஸ் மக்களைப் போன்ற சாயலில் உள்ளதை உணரலாம். சிறந்த இஸ்லாமிய ஆட்சியாளர் வேண்டும் என்ற பேராவல் நமக்கு இருக்கிறதே ஒழிய, நாம் இறைவனுக்கு அஞ்சிய சிறந்த இஸ்லாமியக் குடிமக்களாக இருப்பதற்கான எவ்விதத் தகுதியையும் ஒழுக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வதில்லை. அந்த முதல் தலைமுறை கலீஃபாக்கள்போல் நமக்கு ஆட்சியாளர்கள் வேண்டும் என்று விரும்பும் நாம், குடிமக்களுக்கான இலக்கணமாய்த் தோழர்களைப் பார்ப்பதில்லையே! கட்டுப்பாடற்ற நவீன நாகரிகக் கவர்ச்சியில் மயங்கி அதைத்தானே முன்மாதிரி என நம் மனம் நாடுகிறது. மெய் மாற்றம் எப்படி நிகழும்? இறைவனின் உதவி எப்படி வந்து சேரும்?

புகார்களில் உண்மை இல்லை என்பதை உமர் ரலியல்லாஹு அன்ஹு ஆய்ந்து கண்டறிந்தாலும் அம்மக்களின் தாக்கீதுகளை அலட்சியப்படுத்துவதில்லை. சிறந்த ஆளுநர்களை மாற்றி மாற்றி நியமித்தார். அப்படி ஒரு தருணத்தில்தான் உமைர் இப்னு ஸஅதுக்கு ஹிம்ஸின் ஆளுநர் வாய்ப்பு வந்து அமைந்தது. ஆளுநர் பதவி என்றதும் உமைருக்கு அதில் சற்றும் விருப்பமேயில்லை. ஹிம்ஸ் மக்களின் அரசியல் அத்தயக்கத்திற்கு காரணமல்ல. இது வேறு. இறைவனின் பாதையில் களம் காண வேண்டும். போரிட வேண்டும். அடைந்தால் வெற்றி. இல்லையேல் உயிர் அவனுக்குத் தியாகம். இவையே அவரது புத்தி முழுவதையும் ஆக்கிரமித்திருந்த எண்ணங்கள். எனினும் கலீஃபாவின் ஆணையை மீற முடியாது என்ற காரணத்தால் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஹிம்ஸ் வந்தடைந்தார் உமைர் இப்னு ஸஅத்.

வந்து சேர்ந்ததும் மக்களைத் தொழுகைக்கு வரும்படி பள்ளிவாசலுக்கு அழைத்தார். வந்தார்கள் மக்கள். தொழுதனர் அனைவரும். முடிந்ததும் எழுந்து நின்று மக்களிடம் உரையாற்றினர் உமைர். இறைவனுக்கு நன்றியும் புகழும் உரைத்தபின்,

“மக்களே! இஸ்லாம் வலிமையான வாயில்கொண்ட ஓர் உறுதியான கோட்டை. இந்தக் கோட்டை நீதியால் கட்டப்பட்டிருக்கிறது; சத்தியம் அதன் வாயில். கோட்டை இடிக்கப்பட்டு அதன் வாயில் நொறுக்கப்பட்டால், இம்மார்க்கத்தின் புனிதத்தைக் காப்பாற்ற எந்த வழியுமில்லை. ஆட்சியாளர் சக்தியுள்ளவராய்த் திகழும்வரை இஸ்லாம் தாக்குதலுக்கு உட்படாது. ஆட்சியாளரின் வலிமை மக்களைச் சாட்டையால் கட்டுப்படுத்துவதும் அவர்களை வாளால் மிரட்டிப் பணியவைப்பதும் அன்று. மாறாய், மக்கள் மத்தியில் நீதியை நிலைநாட்டி, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதே வலிமை.”

அவ்வளவுதான் உரை. சுற்றி வளைத்துப் பேசும் நெடிய பிரசங்கம் இல்லை. ஆட்சியாளனுக்கு மக்களிடமிருந்து என்ன தேவை; மக்களுக்கு ஆட்சியாளன் என்ன செய்ய வேண்டும் என்று சுருக்கமான பேச்சு. தம் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டார் ஆளுநர் உமைர் இப்னு ஸஅத்.

அடுத்த ஓர் ஆண்டிற்கு அவரிடமிருந்து கலீஃபாவிற்குக் கடிதமும் இல்லை; சேகரித்த ஸகாத் வரியிலிருந்து அரசின் கருவூலமான பைத்துல்மாலுக்குப் பங்கும் செல்லவில்லை. உமருக்குக் கவலை ஏற்பட்டுவிட்டது. என்னதான் நடக்கிறது ஹிம்ஸில்? உமர் ரலியல்லாஹு அன்ஹுவுக்கு ஐயம் துளிர்விட ஆரம்பித்தது.

‘உலகக் கவர்ச்சிக்கு இரையாகிவிட்டாரா உமைர்?’

‘இருக்க முடியாதே. சிறந்தவரைத்தானே தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்தோம்.’

‘எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும் நபியவர்களைத் தவிர உலகத் தடுமாற்றத்திலிருந்து முழு பாதுகாப்புப் பெற்றவர் எவர் இருக்கிறார்.’

மாறி மாறி சிந்தனைகள். ஒருமுடிவுடன் தம் உதவியாளரை அழைத்தார். “ஹிம்ஸிலுள்ள நம் ஆளுநருக்குக் கடிதம் எழுதுங்கள். ‘அமீருல் மூஃமினீனின் இக்கடிதம் கிடைத்ததும் உடனே புறப்பட்டு வரவும். வரும்பொழுது முஸ்லிம்களிடமிருந்து திரட்டிய வரிப்பணத்தையும் கொண்டு வரவும்’” என்று வாசகத்தையும் விவரித்தார்.

கடிதம் உமைரை அடைந்தது. ஹிம்ஸின் ஆளுநர் பதவியை இறக்கி அங்கேயே வைத்துவிட்டு, மூட்டை-முடிச்சைக்கட்டிக் கொண்டு அவர் புறப்பட்டார். அப்படியென்ன பெரிய மூட்டை, முடிச்சு? பயணத்திற்குத் தேவையான உணவு, உண்ண ஒரு பாத்திரம், தண்ணீர் அள்ளிக் கை-கால் கழுவ, ஒளு செய்ய ஒரு சாடி. அவ்வளவுதான். எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு, கையில் ஈட்டியை ஏந்திக்கொண்டு, கால்நடையாக மதீனாவை நோக்கி நடைப் பயணம் துவங்கியது. ஹிம்ஸிற்கும் மதீனாவிற்குமான தொலைவு தோராயமாக 1200 கி.மீ. நடந்தார் உமைர் இப்னு ஸஅத், ரலியல்லாஹு அன்ஹு!

ஒருவழியாக மதீனா வந்து சேர்ந்தபோது உமைரின் தோற்றம் முகம் வெளுத்து, தேகம் மெலிந்து, முடி நீளமாய் வளர்ந்து பயண வேதனை அவர்மேல் படர்ந்து கிடந்தது. அவரைப் பார்த்து அதிர்ந்துபோன உமர், “உமக்கு என்னாயிற்று உமைர்?” என்று விசாரித்தார்.

“ஒன்றும் பிரச்சினையில்லையே! அல்லாஹ்வின் கருணையால் நன்றாகத்தானே இருக்கிறேன். இவ்வுலகிற்குத் தேவையான அனைத்தும் என்னிடம் உள்ளன. அவை எனது கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன.”

அவருக்குத் தேவையான அனைத்தும் எவை? மூட்டையில் இருந்த சிறிதளவு உணவும் இரண்டு பாத்திரங்களும்!

“உம்முடன் என்ன எடுத்து வந்திருக்கிறீர்?” இதர உடைமைகளையெல்லாம் தனி மூட்டையாகக் கொண்டு வந்திருப்பாரோ என்ற எண்ணம் உமருக்கு.

“அமீருல் மூஃமினீன் அவர்களே! உடைமைகள் அடங்கிய சிறு மூட்டை. உணவு உண்ண, தண்ணீர் அள்ளிக் குளிக்க, துணி அலச ஒரு பாத்திரம். ஒளுச் செய்ய, நீர் அருந்த ஒரு பாத்திரம் ஆகிய இவையே எனது உடைமைகள். இவை போதும் எனக்கு. மற்றவை இவ்வுலக வாழ்க்கைக்கு அனாவசியம். அவை எனக்குத் தேவையுமில்லை. மக்களுக்கும் அத்தகைய அனாவசியத் தேவைகள் இருக்கக்கூடாது.”

“நடந்தா வந்தீர்?” என்றார் உமர்.

“ஆம் அமீருல் மூஃமினீன்”

“ஆளுநர் நீர் பயணித்து வர அவர்கள் பிராணி ஏதும் வழங்கவில்லையா?”

“அவர்களும் தரவில்லை. நானும் கேட்கவில்லை.”

அடுத்து முக்கிய விஷயத்திற்கு வந்தார் உமர். “அரசாங்கக் கருவூலத்திற்குச் சேரவேண்டிய பணம் எங்கே?”

“நான் எதுவும் கொண்டு வரவில்லை.”

”ஏன்?”

நிதானமாக பதிலளித்தார் உமைர். “நான் ஹிம்ஸை அடைந்ததுமே, அந்நகரின் மக்களுள் மிக நேர்மையானவர்களை அழைத்தேன். வரியைச் சேகரம் செய்யும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தேன். அவர்களிடம் பணமும் பொருளும் சேகரமானதும் அந்நகரில் மிகவும் தேவையுடையவர்கள், வறியவர்கள் யார், யார், உதவிகள் எங்கெல்லாம் தேவைப்படுகின்றன என்று ஆலோசனை கேட்பேன். தேவையானவர்களுக்கும் வறியவர்களுக்கும் அவை உடனே பகிர்ந்தளிக்கப்படும்.”

தம் நம்பிக்கையும் தேர்வும் வீண்போகவில்லை என்பதை அறிந்ததும் மகிழ்ந்தார் உமர்! உதவியாளரை அழைத்து “ஹிம்ஸின் ஆளுநராக இவர் நீடிக்க புதிய ஒப்பந்தம் எழுதுங்கள்” என்றார்.

“தேவையே இல்லை” என்று நிராகரித்தார் உமைர். “பதவி எனக்கு விருப்பமற்ற ஒன்று. அமீருல் மூஃமினீன்! தங்களுக்கும் தங்களுக்குப் பின்வரக்கூடியவர்களுக்கும் இனி நான் அரசாங்கப் பணி புரியவே மாட்டேன்” என்று அழுத்தமாய்க் கூறிவிட்டார்.

“என்னுடைய உறவினர்கள் வசிக்கும் கிராமம் மதீனாவிற்கு வெளியே அமைந்துள்ளது. நான் அங்குச் சென்று வாழ விரும்புகிறேன். அனுமதி அளியுங்கள்.” அனுமதித்தார் உமர். உமைரின் வாழ்க்கை அக்கிராமத்திற்குக் குடிபெயர்ந்தது.

சிலகாலம் கழிந்திருக்கும். உமைர் இப்னு ஸஅதின் நலம் அறிய விரும்பினார் உமர். நம்பகமான தம் நண்பர்களுள் ஒருவரான ஹாரித் என்பவரை அழைத்து, “உமைர் வசிக்கும் ஊருக்குச் செல்லவும். நீர் ஒரு பயணி என்று கூறி அவருடன் தங்கவும். அவர் சொகுசாய் வாழ்கிறார் என்று தெரிந்தால் ஏதும் பேசாமல் என்னிடம் திரும்புங்கள். ஆனால் அவர் வறுமையில் இருந்தால், இந்தாருங்கள் தீனார், அவருக்கு அளியுங்கள்” என்று ஒரு பையில் நூறு தீனார்களை அளித்தார்.

உமைரின் ஊருக்கு வந்தார் ஹாரித். அவரது வீட்டை விசாரித்து அறிந்து, சென்று சந்தித்தார்.

“அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.”

“வஅலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.“ வந்திருப்பவர் பயணி எனத் தெரிந்தது.


“நீர் எங்கிருந்து வருகிறீர்?” என்று விசாரித்தார் உமைர்.

“மதீனாவிலிருந்து.”

“தாங்கள் கிளம்பும்போது அங்கு முஸ்லிம்களின் நிலை என்ன?”

“அனைவரும் நலமுடன் உள்ளனர்.”

“அமீருல் மூஃமினீன் நலமா?”

“அவரும் நலமே. தம் பணியை மிக நேர்மையாய் நிறைவேற்றுகிறார்.”

“அனைத்துச் சட்டங்களையும், குற்றவாளிகளுக்கு அளிக்கும் தண்டனைகளையும் முறையே நிறைவேற்றுகின்றாரா?”

“சந்தேகமே வேண்டாம். தம்முடைய மகன் குற்றம் செய்தாலும் கலீஃபா தண்டிக்கத் தவறுவதில்லை"

அதைக் கேட்டு, “யா அல்லாஹ்! உன்மீது கொண்ட நேசத்தினாலேயே பாசம் பாராமல் உமர் நீதி செலுத்துகிறார். அவருக்கு நீ உதவி புரிவாயாக.” என்று இறைஞ்சினார் உமைர்.

உமைரின் வீட்டில் மூன்று நாள் விருந்தினராகத் தங்கினார் ஹாரித். ஒவ்வொரு நாள் மாலையும் விருந்தினருக்கு உணவளித்தார் உமைர். உணவு என்றால் வாற்கோதுமை ரொட்டி. அவ்வளவுதான். மற்றபடி இறைச்சி, குழம்பு என்று எதுவும் இல்லை.

மூன்றாம் நாள். அவ்வூரைச் சேர்ந்த ஒருவர் ஹாரித்திடம் உரையாடும்போது, “நீர் உமைருக்கும் அவருடைய மனைவிக்கும் பெரும் சிரமம் அளித்துவிட்டீர் தெரியுமா? அவர்கள் தினமும் உண்ணும் உணவு அந்த ரொட்டி மட்டுமே. அதையும் விருந்தினரான உமக்குத் தந்துவிட்டு அவர்கள் தங்களின் பசியைப் பொறுத்துக் கொண்டுள்ளனர். நீர் மேலும் சிலநாள் இவ்வூரில் தங்க வேண்டியிருந்தால் தயவுசெய்து என் வீட்டிற்கு வந்து விடுவீராக” என்று அழைப்பு விடுத்தார்.

ஹாரிதுக்கு உமைரின் நிலை நன்கு புரிந்துபோனது. தம்மிடம் அளிக்கப்பட்டிருந்த தீனார்கள் அடங்கிய பையை உமைரிடம் அளித்தார்.

“எதற்கு இது?” என்று கேட்டார் உமைர்.

“அமீருல் மூஃமினீன் இதைத் தங்களிடம் அளிக்கும்படிச் சொல்லித் தந்தார்.”

“இதை அவரிடமே திருப்பித் தந்துவிடுங்கள். என் சார்பாய் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ தெரிவியுங்கள். உமைருக்கு இதன் தேவை இல்லை என்று தெரிவித்துவிடுங்கள்.”

உள்ளிருந்து இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த உமைரின் மனைவி குறுக்கிட்டார்.

“அதைப் பெற்றுக்கொள்ளுங்கள் உமைர். உமக்குத் தேவையெனில் நீங்கள் பயன்படுத்தலாம். இல்லையெனில் தேவையுள்ள வறியவர்கள் இவ்வூரில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அளிக்கலாம்.”

இதைச் செவியுற்ற ஹாரித் பணப் பையை அங்கேயே வைத்துவிட்டுக் கிளம்பிவிட்டார். அந்த தீனார்களை சிறு பைகளில் பங்கிட்டுப் பிரித்தார் உமைர். ஏழைகளுக்கும், ஜிஹாதுக்குச் சென்று உயிர்த் தியாகி ஆகிப்போனவர்களின் பிள்ளைகளுக்கும் அதைப் பகிர்ந்தளித்துவிட்டு, பிறகுதான் இரவுத் தூக்கமே.

மதீனா திரும்பிய ஹாரித்திடம் விசாரித்தார் உமர். “அங்கு என்ன கண்டுவந்தீர் ஹாரித்?”

“அமீருல் மூஃமினீன். உமைர் மிகவும் வறுமையில், கடின வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்துவருகிறார்.”

“அவரிடம் பணம் அளித்தீரா?”

“ஆம்.”

“அதை அவர் என்ன செய்தார்?”

“எனக்குத் தெரியாது. ஆனால் அதிலிருந்து தமக்கென ஒரு திர்ஹமைக்கூட அவர் எடுத்திருக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.”

உமைருக்குக் கடிதம் எழுதினார் உமர். “இக் கடிதம் கிடைத்து, படித்து முடித்ததும் உடனே வந்து என்னைச் சந்திக்கவும்.”

மதீனாவுக்கு வந்து கலீஃபா உமரைச் சந்தித்தார் உமைர் இப்னு ஸஅத். முகமன்கூறி வரவேற்று தம் அருகே அவரை அமர்த்திக் கொண்டார் உமர்.

“பணத்தை என்ன செய்தீர் உமைர்?”

“அமீருல் மூஃமினீன்! அதைத் தாங்கள் எனக்கென அளித்துவிட்டபின் அதைப்பற்றி தங்களுக்கென்ன கவலை?”

“அதை நீர் என்ன செய்தீர் என்பதை நான் அறிய விரும்புகிறேன் உமைர்” என்று வற்புறுத்தினார் உமர்.

“செல்வமோ, சந்ததியோ எனக்கு யாதொரு உதவியும் புரிய இயலாத நாள் ஒன்று வருமே, அப்பொழுது அந்தப் பணம் எனக்கு உதவட்டும் என்று ஏற்பாடு செய்துவைத்துவிட்டேன்” என்றார் உமைர்.

கண்கள் கலங்கிப்போனார் உமர். “தமக்கெனத் தேவைகள் இருந்தும் தம்மைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிப்பார்களே அத்தகையவர்களில் நீர் ஒருவர் என்று நான் சாட்சியம் பகர்கிறேன் உமைர்.”

ஒட்டகம் சுமக்கும் பொதியளவு உணவுப் பொருட்களும், இரண்டு மேலங்கியும் உமைருக்கு அளிக்கும்படி கட்டளையிட்டார் உமர்.

“அமீருல் மூஃமினீன்! எங்களுக்கு இந்த உணவின் தேவை இல்லை” என்று அதையும் மறுத்தார் உமைர். “நான் கிளம்பும்போது என் குடும்பத்தினருக்காக இரண்டு ஸாஉ வாற்கோதுமையை அளித்து வந்திருக்கிறேன். அதை நாங்கள் உண்டு முடிக்கும்போது, அல்லாஹ் எங்களுக்கு மேற்கொண்டு் படி அளப்பான். ஆனால் இந்த இரண்டு அங்கி… அதை மட்டும் என் மனைவிக்காக எடுத்துக் கொள்கிறேன். ஏனெனில் அவளது உடை மிகவும் கிழிந்து அவளது உடலை முழுமையாகப் போர்த்தும் நிலையிலும் அது இல்லை.”

இதை என்னவென்று சொல்வது? செல்வச் செழிப்பில் தேவைக்கு மீறி ரகரகமாய், விதவிதமாய் அடுக்கி வைத்து, நாகரிகம் என்ற பெயரில் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு திரியும் நாம் இதை எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறோம்?

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு வெகு சில காலத்திற்குள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார் உமைர் இப்னு ஸஅத். அந்த மரணச்செய்தி தெரியவந்ததும் உமரின் முகம் சோகத்தால் மாறிப்போனது. உள வேதனையுடன் கூறினார் உமர். “உமைர் இப்னு ஸஅத் போன்றவர்கள் எனது நிர்வாகத்திற்கு வேண்டும் என்பதே என் விருப்பம். முஸ்லிம்களின் நிர்வாகப் பணிகளுக்கு இத்தகையோரின் உதவியே எனக்கு அதிகம் தேவை.”

எளிதில் விவரித்துவிட முடியாத எளிய வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார் உமைர் இப்னு ஸஅத்.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

<தோழர்கள் முகப்பு | தோழர்கள் - 50>

Comments   

தாஜுதீன்
+1 #1 தாஜுதீன் 2013-01-24 15:22
அஸ்ஸலாமு அலைக்கும்,

பொதுவாக சத்தியமார்க்கம் .காம் தோழர்கள், தோழியர்கள் தொடர்கள் படித்தால் கண்ணீர் வராமல் இருந்ததில்லை.. ஆனால் உமைர் பின் ஸஅத் (ரழி) அவர்கள் பற்றிய இந்த பதிவின் ஒவ்வொரு வரியையும் படிக்கும் போது வந்த கண்ணீரை நிறுத்த முடியவில்லை.

உண்மை தான், எளிதில் விவரித்துவிட முடியாத எளிய வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார் உமைர் இப்னு ஸஅத். ரலியல்லாஹு அன்ஹு!

சகோதரர் நூருத்தீன் மற்றும் சத்தியமார்க்கம் .காம் குழுவினருக்கு ஜஸக்கல்லாஹ் ஹைரன்..
Quote | Report to administrator
நூருத்தீன்.
0 #2 நூருத்தீன். 2013-01-26 03:06
வஅலைக்கும் ஸலாம்.

இத்தொடரை வாசித்து, தங்களது மன ஓட்டங்களை பதிவு செய்துவரும் சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி. அல்லாஹ் நமது பிழை பொறுத்தருள்வானா க.
Quote | Report to administrator
Syed
0 #3 Syed 2013-02-09 13:26
அல்ஹம்துலில்லா, மிகவும் அருமை. அல்லா இவர்களைப் போல் நாமும் வாழ துணை புரிவானாக
Quote | Report to administrator
இராஜகிரியார்
0 #4 இராஜகிரியார் 2013-02-12 20:04
அஸ்ஸலாமு அலைக்கும்.
கண்களில் வடிந்த கண்ணீரை தவிர பின்னுாட்டத்திற ்கு வார்த்தைகள் ஏதுமில்லை. அல்லாஹ் சத்திய சஹாபாக்கள் மற்றும் நம் அனைவர் மீதும் அருள் புரிவானாக!!!
Quote | Report to administrator
abdhul subahaan
+1 #5 abdhul subahaan 2013-03-05 09:10
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ் தங்களின் பனிகளை மேலும் தொடர அருள் புறிவானாக. அல்ஹம்துலில்லாஹ ், மிகவும் அருமயான
படைப்புகள். நான் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வசிக்கிறேன். தங்களின் அனுமதி கிடைக்குமென்றால்
இந்த ஆக்கங்களை மலயாள மொழியில் எனது தளத்தில் வெளியிட விரும்புகிரேன். இன்ஷா அல்லாஹ், தங்களின்
அன்பான பதிலை எதிர்பார்க்கிரே ன்.
Quote | Report to administrator
Iqbal
+1 #6 Iqbal 2014-01-15 12:59
மார்க்கத்திற்கா க உயிரைக் கொடுப்பது ஒரு உயரிய நிலை.! அதற்குரிய சந்தர்ப்பம் வரும்போது எத்தனை பேர் தயாராவார்கள் என்பது அப்போதுதான் தெரிய வரும்.! ஆனால் எளிய வாழ்க்கையை வாழ்வதை நடைமுறையிலேயே நம்மால் செய்ய முடிந்தாலும் அதை எந்த அளவுக்கு நம்மால் செய்ய முடியும் என்பது கேள்விக்குறியே.!

சஹாபாக்கள் மறுமைக்காகவே வாழ்ந்தவர்கள்.! அவர்களது ஈமானின் நிலை உன்னதமானது.! இஸ்லாத்தின் வரலாறுகளை தெரிந்து கொள்வது நமது ஈமானை அதிகரித்துக்கொள ்ள நிச்சயம் உதவும்.! வரலாறுகள் நமக்குத் தெரிந்தால் சஹாபாக்களைக் குறித்து எந்தவித விமர்சனங்களையும ் செய்ய நாம் தகுதியற்றவர்கள் என்பதை நாமே உணர்ந்துக் கொள்வோம்.!

மிகச் சிறந்த பணியை மேற்கொண்டுள்ள சகோதரர் நூர்தீன் அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிய துஆ செய்கிறேன்.!
Quote | Report to administrator
நூருத்தீன்.
0 #7 நூருத்தீன். 2014-01-17 07:21
சகோ. இக்பால், கருத்துகளுக்கும ் அன்பான துஆவிற்கும் நன்றி.
Quote | Report to administrator
abdul rahiman haneef
0 #8 abdul rahiman haneef 2014-01-17 12:21
அஸ்ஸலாமுஅலைக்கும்,
சகோ. இக்பால், சொல்வது மிகச்சிறந்த கருத்து, எளிய வாழ்க்கை முறையை நம்மால் ஏன் கடைபிடிக்க இயலாது? நாம் அல்லாஹ்வின் அடிமை என்ற எண்ணம் இல்லாமல், நான்குபேர்க்காக என்று வெற்று பகட்டில் வாழ்வதை விட்டு, இஸ்லாம் சொன்ன எளிமையான வாழ்க்கைமுறையை பின்பற்றுவோம், சஹாபாக்களின் வரலாறுகளை ஏதோ தெரிந்து கொண்டோம் என்ற மட்டில் நிறுத்தாமல், அவர்கள் அனைவரும் ரசூல் (செ) அவர்களை பின் பற்றி எப்படி வாழ்ந்தார்களோ அதன்படி நாமும் வாழ்வோம். நூர்தீன் அவர்களுக்கு நன்றி. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தௌபீக் நல்குவானகட்டும் . ஆமீன்.
Quote | Report to administrator
Iqbal
+1 #9 Iqbal 2014-01-18 00:23
சகோதரர் அப்துல் ரஹ்மான் ஹனீப் அவர்களுக்கு நன்றி.!

எளிய வாழ்க்கையை நம்மால் வாழ முடியும்.! அதற்கேற்ப நமது மனம் பக்குவப்பட வேண்டும்.! ஈமான் வலுப்பெற்றால்தா ன் மனம் பக்குவமடையும்.!
அதற்குரிய முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.!

ஒருவருக்கொருவர் மார்க்க சம்பந்தமாக கலந்தாலோசிப்பதே ஈமான் வலுப்பெற உதவும்.!

இன்ஷா அல்லாஹ் நமது முயற்சிகளைத் தொடங்குவோம்.! வெற்றியை அளிக்க அல்லாஹ் போதுமானவன்.!
Quote | Report to administrator
abdul rahiman haneef
0 #10 abdul rahiman haneef 2014-01-18 11:39
இன்ஷா அல்லாஹ், தொடர்பில் இருப்போம், ஒற்றுமையும்,நற் சிந்தனையும்,ஈமா ன் வலுபடுத்தும், எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்