முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

தோழர்கள்

ஸல்மான் அல்-ஃபாரிஸி

سلمان الفارسي‎

பகுதி - 1

 

 

தனது பண்ணையில் பேரீச்சமரத்தின் அடியில் அமர்ந்திருந்தான் யூதன் ஒருவன். அவனை நோக்கி வேகவேகமாக வந்தான் அவனுடைய உறவினன். பரபரப்பு, முகத்தில் ஏகக் கோபம்! அமர்ந்திருந்தவனிடம், “பனூ ஃகைலா கோத்திரத்தினரை அல்லாஹ் அழிப்பானாக,” என்றான். மதீனாவின் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு கோத்திரத்தினரையும் 'பனூ ஃகைலா' என்று குறிப்பிடுவது யூதர்களின் வழக்கம்.

 

நிமிர்ந்து பார்த்தவனிடம், “மக்காவிலிருந்து ஒருவர் புலம்பெயர்ந்து வந்திருக்கிறாராம்; தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்கிறாராம்; குபாவில் தங்கியிருக்கிறாராம். புத்திகெட்டுப்போன இவர்களும் அவரை வரவேற்க அங்குக் குழுமியிருக்கிறார்கள்” என்றான் உறவினன்.

இத்தனை நாளும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிச் செய்திமேல் செய்தியாக அறிந்திருந்தார்கள் மதீனத்து யூதர்கள். அப்படிக் கேள்விப்பட்ட நாள்முதலாக நபியவர்களின்மேல் வெறுப்பு வளர்த்திருந்தார்கள் - காத்திருந்த தங்கள் இனத்தில் தோன்றாத நபி, பனீ இஸ்மாயீல் இனத்தில் அவதரித்துவிட்டாரே என்று. அது ஒருபுறம் என்றால் தங்களது தந்திரத்தால் கட்டிப்போட்டு அடித்துக்கொண்டு உருண்டு புரள வைத்திருந்த அவ்ஸ், கஸ்ரஜ் மக்கள் மத்தியில் வரலாறு காணாத மாற்றம் ஏற்பட்டுப்போய், ‘சகோதரா’ என்கிறார்கள்; அன்பாய்க் கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள்; என்ன கொடுமை இது? அவ்வளவுதானா? காலங் காலமாக பிரித்தாண்டு வந்த நரித்தன ஆட்சி முடிவுக்கே வந்துவிட்டதா?’ என்ற அப்பட்ட வயிற்றெரிச்சல் மற்றொருபுறம்.

இது அத்தனைக்கும் காரணமானவர் இதோ யத்ரிபின் வெளிவாசல்வரை வந்துவிட்டார் என்றால்? அவ்ஸ், கஸ்ரஜ் மக்களைச் சபித்தான் செய்தி சொல்ல வந்த யூதன்.

அப்பொழுது அந்த மரத்தின்மேல் அமர்ந்து அதை வெட்டிச் சீவிச் செப்பனிட்டுக் கொண்டிருந்தார் அமர்ந்திருந்த யூதனின் அடிமை. வந்தவன் சொன்ன செய்தி அவர் காதிலும் தெளிவாய் விழுந்தது. அடுத்த நொடி அவரது உடம்பெல்லாம் சூடாகி நடுங்க ஆரம்பித்துவிட்டது. உவமையெல்லாம் இல்லை. மெய்யான நடுக்கம்! நடுங்கிய நடுக்கத்தில் எங்கே ‘தொப்’பென்று தாம் தம் எசமானன் தலையிலேயே விழுந்துவிடுவோமா என்று பயந்துபோய், சமாளித்துக்கொண்டு அவசர அவசரமாக மரத்திலிருந்து இறங்கிவிட்டார் அவர். செய்தியின் தாக்கமும் ஆச்சரியமும் மகிழ்வும் கலந்துபோய் அதை மீண்டும் ஊர்ஜிதம் செய்துகொள்ள, செய்தி சொன்னவனிடம், “இப்பொழுது நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார்.

‘பொளேர்’ என்று அடிமைக்கு அடி விழுந்தது. எசமானன்தான் அடித்தான். அவனைப் பொருத்தவரை செய்தியே சோகச்செய்தி. இதில் அடிமையின் துடுக்குத்தனம் வேறா?

“என்ன ஆச்சு உனக்கு? திரும்பிப்போய் ஒழுங்கு மரியாதையாய் உன் வேலையைப் பார்” என்று கத்தினான்.

அடிபட்ட இடத்தைத் தடவிக்கொண்டே, “ஒன்றுமில்லை. ஆவலாய் இருந்தது. அறிந்துகொள்ளவே கேட்டேன்,” என்று அங்கிருந்து அகன்றவர், ‘ஆஹா! எத்தனை ஆண்டுக் காத்திருப்பு இது. இதோ கண்ணுக்கு எட்டும் தொலைவில் நிசம்’ என்று மாலை நேரத்துக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்.

அதற்குள் நாம் நீண்ட ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று வந்துவிடுவோம். அப்படியே மூச்சை இழுத்துவிட்டு, ஆசுவாசப் படுத்திக்கொள்வது நல்லது. நீண்ட நெடிய பயணமும் செய்ய வேண்டியுள்ளது.

oOo


இஸ்ஃபஹான்!

ஈரான் நாட்டில் அதன் மையப்பகுதியில் அமைந்துள்ள முக்கியமான மாநிலம். இன்று ஈரான் என்று அழைக்கப்படும் நாடு அக்காலத்தில் பாரசீக சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதி. இந்த இஸ்ஃபஹான் மாநிலத்தில் ஜய்யான் என்றொரு கிராமம். அந்தக் கிராமத்தில் இஸ்பஹான் நகரின் திஹ்கான் வசித்து வந்தார். திஹ்கான் என்றால் நகரின் தலைவர் அல்லது மேயர் போன்ற பெரிய பொறுப்புக்குரியவர். நிறையச் செல்வம்; அந்தஸ்து வசதியுடன் வாழ்ந்து வந்தார் திஹ்கான். இவருக்கு ஸல்மான் என்றொரு மகன். பேர் சொல்லப் பிள்ளை பிறந்துவிட்டான் என்று அந்த மகன் மீது அவருக்கு ஏகப்பட்ட பிரியம், சொல்லி மாளாத பாசம். மிகையில்லை. தம் மகனை ஒரு கன்னிப்பெண்ணைப் போல் வீட்டில் வைத்துப் பொத்திப் பொத்தி வளர்க்க ஆரம்பித்தார் தந்தை. மகனுக்கு வெளியுலகம் தெரியாமல் வீடே உலகமாகிப் போனது.

பாரசீகர்களின் கடவுள் நெருப்பு. அப்படித்தான் நம்பி அதை வணங்கிக்கொண்டிருந்தார்கள் அம்மக்கள். திஹ்கான் வீட்டிலும் தனித்துவச் சிறப்புடன் நெருப்பு தெய்வம் ஒன்றிருந்தது. அந்தத் தீயை அணையா விளக்காகப் பாதுகாக்க, ‘மகனே உன் பொறுப்பு’ என்று அந்த தெய்வத்தைப் பராமரிக்கும் முக்கியப்பணியைத் தந்துவிட்டார் திஹ்கான். எந்நேரமும் அந்தத் தீ எரிந்து கொண்டே இருக்க வேண்டும். ஸல்மானும் பக்தி சிரத்தையாய் அந்தப் பணியைச் செய்துவந்தார்.

செல்வ வசதி படைத்திருந்த திஹ்கானுக்குப் பெரிய பண்ணை நிலம் இருந்தது. அதில் நல்ல விளைச்சல். அதைப் பராமரித்து வருவாய் ஈட்டிக்கொண்டிருந்தார் அவர். ஒருநாள் அவரால் பண்ணைக்குச் செல்ல முடியாத சூழ்நிலை. என்ன செய்யலாம் என்று யோசித்தவர் ஸல்மானை அழைத்து, “மகனே இன்று நான் ஒரு முக்கிய வேலையைக் கவனிக்க வேண்டியுள்ளது. நீ பண்ணைக்குச் சென்று அங்குள்ள காரியத்தை முடித்துவிட்டு வா” என்று விபரமெல்லாம் சொல்லி அனுப்பிவைத்தார்.

முக்கியமாய் மற்றொன்றையும் சொன்னார். “சென்ற வேலையை முடித்துவிட்டு உடனே திரும்பிவிடு. என்னை இங்கே காக்க வைத்துவிடாதே. நிலம், சொத்து, சுகம் அனைத்தையும்விட நீதான் எனக்கு மிக முக்கியம்.”

பொறுப்பாய்த் தலையை ஆட்டிவிட்டுக் கிளம்பினார் ஸல்மான். வீட்டிலேயே அடைந்து கிடந்தவருக்கு அந்த வாய்ப்பு புது சுவாசம் அளிக்க, சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்தவாறே பண்ணையை நோக்கி நடக்க, திசை மாறப்போகும் அவரது வாழ்க்கைப் பயணத்தின் முன்னுரை அவருக்கே தெரியாமல் துவங்கியது. வழியில் அவரது கண்களில் பட்டது ஒரு கட்டடம். ‘இது என்ன வித்தியாசமாக இருக்கிறதே’ என்று ஆர்வமுடன் அதை நெருங்கியவருக்கு, அது ஒரு கிறித்தவத் தேவாலயம் என்று தெரிய வந்தது. அப்படி ஒரு மதம் இருப்பதோ, அதற்காக ஆலயம் இருப்பதோ எதுவுமே தெரியாமல் வளர்ந்து வந்தவர் ஸல்மான். அதனால் எக்கச்சக்க ஆர்வம். அப்பொழுது ஆலயத்தில் உள்ளே பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருக்க, அது இதுவரை அவர் அறிந்திராத ஓசை. உள்ளே நுழைந்தார் ஸல்மான்.

கிறித்தவர்களின் வழிபாட்டையும் பிரார்த்தனையும் உன்னிப்பாய்க் கவனித்தவருக்கு இனந்தெரியா ஈர்ப்பு. பிரமித்தவர், “சத்தியமாக இந்த மதம் நம் மதத்தைவிடச் சிறப்பாக இருக்கிறது,” என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

அங்கு இருந்தவர்களிடம் ஆர்வமுடன், “இந்த மதம் எங்கிருந்து வந்தது?”

“அஷ்-ஷாம் பகுதியிலிருந்து” என்று பதில் கிடைத்தது. ஷாம் என்பது இன்றைய ஸிரியாவின் பகுதி.
பண்ணை மறந்து போனது; வந்த காரியம் மறந்து போனது. மாலைவரை அங்கேயே அமர்ந்து கொட்டக் கொட்ட வேடிக்கை பார்த்துவிட்டு, இரவு நேரத்தில்தான் வீட்டிற்குத் திரும்பினார் ஸல்மான். அங்கோ, சென்ற மகன் திரும்பி வரவில்லையே என்று நாலாபுறமும் ஆட்களை அனுப்பிவிட்டு, நிலைகொள்ளாமல் தவித்துப்போய் நின்றிருந்தார் தந்தை. மகனைக் கண்டவுடன்தான் ‘அப்பாடா’ என்று அவருக்கு மூச்சே வந்தது.

“மகனே எங்கே சென்றாய்? கிளம்பும்போதே சொல்லித்தானே அனுப்பினேன். பாதை தவறிவிட்டாயா?” கவலையுடனும் அக்கறையுடனும் விசாரித்தார் தந்தை.

மெய் சொன்னார் மகன். “தந்தையே, கிறித்தவ ஆலயம் ஒன்றைக் கண்டேன். அங்கே மக்கள் வழிபடுவதைக் கண்டேன். அது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அங்கேயே இருந்து அவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். சென்ற வேலை மறந்துபோய் இருட்டிய பிறகுதான் கிளம்பினேன்.”
மகனைக் கண்டதும் வந்த நிம்மதி அவனது பதிலைக்கேட்டுத் தொலைந்துபோனது. திகிலடைந்துபோனார் தந்தை! ‘என்ன காரியம் செய்துவிட்டு வந்து நிற்கிறான் இவன்?’

“மகனே! அவர்களது மதத்தில் எந்தப் பிரயோசனமும் இல்லை. உன் மதமே உயர்வானது. நம் மூதாதையர்களின் இந்த மதம்தான் எல்லா மதங்களிலும் சிறப்பானது.”


இளங்கன்று; பயமோ பின்விளைவோ அறியாது பதில் பேசினார். “ம்ஹும்! சத்தியமாகச் சொல்கிறேன். அவர்களது மதம் நம்முடைய மதத்தைவிடச் சிறந்தது.”

‘ஆஹா! ஒரே நாளில் இப்படிப் புத்தி பேதலித்துப் போய்விட்டானே என் மகன்’ என்று இடிந்துபோனவர், உடனே ஒரு காரியம் செய்தார். வீட்டின் அறையொன்றில் ஸல்மானைத் தள்ளி, கால்களைச் சங்கிலியால் கட்டி, அறையை இழுத்துப் பூட்டினார். வீட்டிலே பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட பிள்ளை, இப்பொழுது வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டார். ஆனால் தீயை இறைவனாய் வழிபட்டு வளர்ந்த ஸல்மானுக்குள் மெய் இறைஞானம் தேடவேண்டும் என்ற புதுத் தீ பற்றிக்கொண்டது. எப்படியோ, யார் மூலமோ கிறித்தவர்களுக்குச் செய்தி சொல்லி அனுப்பினார். “ஸிரியாவைச் சேர்ந்த யாரேனும் இவ்வூருக்கு வந்தால் எனக்குத் தகவல் அனுப்புங்களேன்.” இந்த மதம் அங்கிருந்து வந்தது என்றுதானே கிறித்தவர்கள் சொன்னார்கள். அங்கேயே சென்று பாடம் பயில்வோம் என்று அவர் மனத்துள் முடிவு.

அதற்கு நெடுநாள் காத்திருக்க வேண்டிய தேவையின்றி ஸிரியாவிலிருந்து வர்த்தகர்களின் குழுவொன்று அங்கு வந்து சேர்ந்தது. அந்தத் தகவலை ஸல்மானுக்கு அனுப்பி வைத்தனர் கிறித்தவர்கள். அதுவரை வீட்டிலேயே சமர்த்துப் பிள்ளையாகக் காத்திருந்தவர், ‘அறிவுத் தேடலுக்கும் உண்டோ தடுக்கும் தாழ்’ என்று விலங்கை உடைத்து விடுவித்துக்கொண்டு வீட்டை விட்டு நழுவினார். அந்த வர்த்தகர்களுடன் பேசி, யார் கண்ணிலும் படாமல் அவர்களுடன் ஸிரியாவுக்குக் கிளம்பினார் ஸல்மான்.

இறைஞானத் தேடல் துவங்கியது.

ஸிரியாவை அடைந்ததும் அங்கு இருந்தவர்களிடம் அவர் கேட்ட முதல் கேள்வி, “இங்கு உங்கள் மதத்தின் பெரிய குரு யார்?”

“அவர் இந்த ஊர் ஆலயத்தின் தலைமைகுரு,” என்று பதில் கிடைத்தது. கற்கும் கல்வி ஞானம் தலைசிறந்தவரிடமிருந்து கிடைக்க வேண்டும் என்ற இயல்பான ஆர்வம் அமைந்திருந்தது சூட்டிகையான ஸல்மானிடம்.

அவரிடம் சென்றார் ஸல்மான். சுற்றி வளைக்கவில்லை. “நான் கிறித்தவனாக வேண்டும். உங்களுடைய சீடனாக இணைந்து இறை ஊழியம் செய்ய விரும்புகிறேன். உங்களிடம் இறை கல்வி கற்று இறை வழிபாடு புரிவதே எனது குறிக்கோள்,” என்று நேரே விஷயத்திற்கு வந்தார். “வா உள்ளே!” என்று அரவணைத்து ஏற்றுக்கொண்டார் அந்த தலைமைக் குரு. அவரின் சீடனாக ஆலயத்தில் சேவை புரிவதும், கற்பதுமாகப் புது வாழ்க்கை துவங்கியது. ஆனால் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி!

நாம் இப்பொழுதெல்லாம் அடிக்கடிக் கேள்விப்படுகிறோமே போலிச் சாமியார்கள் - அவர்களைப்போல் அந்த குரு மிக மோசமான ஒரு கள்ளப் பேர்வழி. ‘தானமளியுங்கள்; தர்மம் புரியுங்கள். இறைவனின் மகத்தான நற்கூலி உங்களுக்குக் கிடைக்கும்’ என்று அவர் நாள்தோறும் புரியும் உபதேசம் கேட்டு, அந்த ஊர் மக்களும் அவரிடம் அள்ளி அள்ளித் தந்து கொண்டிருந்தனர். அவை அனைத்தையும் மூட்டைக் கட்டி, ஏழை, எளியவருக்கு எதுவும் ஈயாமல் தெளிவான புத்தியுடன் சுருட்டிக்கொண்டிருந்தார் அந்தத் தலைமை குரு. இதையெல்லாம் பார்த்து, ‘அட கிராதகா! இவ்வளவுதானா நீ?’ என்றாகிவிட்டது ஸல்மானுக்கு. அவரை மிகத் தீவிரமாய் வெறுக்கத் துவங்கினார் அவர். அதைத்தவிர அவரால் அப்பொழுது ஏதும் செய்ய இயலாத நிலை.

இப்படிச் சேர்த்துச் சேர்த்து வைத்ததையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு ஒருநாள் இறந்துபோனார் அந்த குரு. சோகமும் பக்தியும் மரியாதையுமாய் அவரை அடக்கம் செய்ய வந்தனர் கிறித்தவர்கள். அந்த நேரத்தில் சரியாக அவர்களிடம் உண்மையைப் போட்டு உடைத்தார் ஸல்மான். “மக்களே! நீங்கள் மட்டற்ற மரியாதை வைத்திருந்த இவர் ஒரு மோசடிக்காரர். உங்களையெல்லாம் தானமளிக்கும்படி ஊக்கப்படுத்தி, நீங்கள் அள்ளி அளித்தீர்களே செல்வம் அவற்றையெல்லாம் ஏழைகளுக்குத் தராமல் தமக்கென எடுத்துக்கொண்டு உங்களை ஏமாற்றி வாழ்ந்தார் இவர்.”
“உனக்கு எப்படித் தெரியும்?”

”இங்கே வாருங்கள்,” என்று அவர்களை அழைத்துச்சென்று அதைப் புதைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டிவிட்டார் ஸல்மான். தோண்டிப் பார்த்தவர்களுக்குப் புதையல் கிடைத்தது. ஒன்றல்ல, இரண்டல்ல, ஏழு கொள்கலம் நிறையத் தங்கமும் வெள்ளியும் நிறைந்து கிடந்தன. அதிர்ந்து போனார்கள் மக்கள். அதிர்ச்சி கடுங்கோபமாக மாறியது. ‘கொல்லுடா அவனை’ என்றும் சொல்ல முடியாது. இறந்துவிட்டான். அதனால், “இந்த மோசடிக்காரனை அடக்கம் செய்யக்கூடாது. தூக்கு பிணத்தை,” என்று அதைச் சிலுவையில் அறைந்து ஆத்திரம் குறையும்வரை கல்லால் அடித்துத் தீர்த்தார்கள் மக்கள்.

எல்லாம் அடங்கிச் சிலநாள் கழிந்ததும் புதியதொரு மதகுரு தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொழுது அவரிடம் சீடனாக இணைந்து கொண்டார் ஸல்மான்.

இறைஞானத் தேடல் தொடர்ந்தது.

இங்கு ஒரு விஷயம் மிக முக்கியமாய்க் கவனிக்க வேண்டியுள்ளது. தூய மார்க்கம் தேடிவந்து, அக் காலகட்டத்தில் மீதமிருந்த இறை மார்க்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார் இள வயதினரான ஸல்மான். வழிகாட்டி அழைத்துச் செல்ல வேண்டிய தலைமை குருவோ அப்பட்டமான அயோக்கியன் என்று அறிய வந்ததும், அந்தத் தனி நபரையும் அவனது ஒழுக்கக்கேட்டையும்தான் அவர் வெறுத்தாரே தவிர, கள்ளகுரு செய்த மோசடிகளுக்கு அவர் பின்பற்றிய மார்க்கம் பொறுப்பேற்காது என்பதை அறிந்து உணரும் புத்திசாலித்தனம் இருந்தது ஸல்மானுக்கு. ஆனால் இன்று பலருக்கும் இஸ்லாத்தையும் தனி நபர் ஒழுக்கத்தையும் இணைத்துக் குழப்பிக் கொள்ளும் பேதைமை நிறைய மிச்சமிருக்கிறது.

புதிய மதகுரு மிகவும் இறையச்சமுள்ள கடுமையான துறவி. மறுமை வாழ்வே இலக்கு; இரவும் பகலும் இடைவிடாது இறை வழிபாடு; என்று வாழ்பவராக இருந்தார் அவர். ஸல்மானுக்கு அவர் மீது எக்கச்சக்க அன்பும் பாசமும் ஏற்பட்டு விட்டது. அவரிடம் நீண்ட காலம் தங்கியிருந்தார். முதுமை அந்த மதகுருவை மெதுமெதுவே ஆட்கொள்ள, ஒருநாள் இறுதித் தருணத்தை அடைந்தார் அவர். கவலையுடன் அவரைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார் ஸல்மான். அடுத்து என்ன செய்வது யாரிடம் செல்வது என்ற கவலை.

“தலைமை குருவே! அல்லாஹ்வின் ஆணைப்படி இறுதித் தருணம் தங்களை நெருங்கி விட்டது. உங்களிடம் கொண்டிருந்த அன்பும் ஈடுபாடும்போல் எனக்கு எவரிடமும் இருந்ததில்லை. தங்களுக்குப் பிறகு நான் யாரிடம் செல்வது? யாரைத் தாங்கள் பரிந்துரைப்பீர்கள்?”

“மகனே! என்னைப்போல் வாழ்பவர் இக்காலத்தில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை ஒரே ஒருவரைத் தவிர. அவர் மோஸுல்  எனும் ஊரில் வசிக்கிறார். வழி பிறழாமல், மாறாமல் நேரான இறைவழியில் வாழ்பவர் அவர். அவரிடம் செல்.”

மதகுருவின் மூச்சு அடங்கியது. அழுதுவிட்டு, வருத்தப்பட்டுவிட்டு, நல்லடக்கம் முடிந்ததும், ‘மோஸுலுக்கு எப்படிப் போகணும்?’ என்று வழிகேட்டுக் கிளம்பினார் ஸல்மான். மோஸுல் இராக்கில் உள்ள நகரம். ஸிரியாவிலிருந்து ஏறத்தாழ எழுநூறு கி.மீ. தொலைவு!
இறைஞானத் தேடல் தொடர்ந்தது.

மோஸுலை அடைந்தவர் தாம் நாடி வந்த மதகுருவைத் தேடிப்பிடித்தார். தம் கதையை நிதானமாக எடுத்துச் சொல்லி, “இறந்துபோன குரு, தங்களைப் பரிந்துரைத்தார். தூய இறை வழிமுறைப்படி வாழ்பவர் நீங்கள் என்று குறிப்பிட்டார். மறுக்காமல் என்னைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
“சரி வா,” என்று அரவணைத்துக் கொண்டார் அவர். இவரும் இறந்து போன முன்னவவரைப் போலவே பக்தியிலும் ஒழுக்கத்திலும் சிறப்பானவர். இறை வழிபாடும் இறை பாடமும் பயில ஆரம்பித்தார் ஸல்மான். இறை விதி - இதுவும் நீண்ட காலம் தொடரவில்லை. இந்தப் பாதிரியும் வாழ்வின் கடைசித் தருணத்தை அடைந்தார்.

மரணப் படுக்கையில் இருந்தவரிடம், “உங்களுக்கு அல்லாஹ் நிர்ணயித்த நேரம் வந்துவிட்டது. என் கதையை அறிந்தவர் தாங்கள். அடுத்து நான் யாரிடம் செல்வது என்று தயவு செய்து பரிந்துரையுங்கள்,” என்று கவலையுடன் நின்றார் ஸல்மான்.

“மகனே! எனக்குத் தெரிந்து எங்களைப்போல் வாழ்பவர் ஒருவர்தான் இருக்கிறார். நுஸைபீன் என்ற ஊரில் வசிக்கிறார் அவர்,” என்று சொல்லிவிட்டு இறந்துபோனார் மோஸுல் மதகுரு. அவரை நல்லடக்கம் செய்துவிட்டு, மூட்டையைக் கட்டிக்கொண்டு நுஸைபீனை நோக்கிக் கிளம்பினார் ஸல்மான்.

இறைஞானத் தேடல் தொடர்ந்தது.

அரபியில் நுஸைபீன் என்றும் அராமிக்கில் நிஸீபீஸ் என்றும் அழைக்கப்படும் நகர் துருக்கியில் உள்ளது. மோஸுல் நகரிலிருந்து சுமார் இருநூறு கி.மீ. தூரம். அங்கு வந்து சேர்ந்தார் ஸல்மான். தாம் தேடி வந்த மதகுருவைக் கண்டுபிடித்து, தம்மைப் பற்றி முழுக்கதையையும் சொன்னார். மோஸுலில் இருந்த பாதிரி இவரைப் பரிந்துரைத்ததைப் பற்றிச் சொல்லி, “என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.

அன்பாய் ஸல்மானைச் சேர்த்துக் கொண்டார் அவரும். முந்தைய இருவரைப் போல், தூய இறை பக்தியிலும் வழிபாட்டிலும் இவரும் மிகச் சிறந்தவர். ஸல்மானுக்கும் மிக்க மகிழ்ச்சி. ஆனால் -
ஸல்மான்தாம் இளையவரே தவிர அவர் தேடி அடைந்த கிறித்தவப் பாதிரிகள் அனைவரும் மிகவும் வயது முதிர்ந்தவர்கள். சில காலம் கழிந்ததும் இந்தப் பாதிரியும் மரணப் படுக்கையில் விழுந்தார். மனந்தளரா ஸல்மான் அடுத்து இவரிடமும் தம்முடைய வழக்கமான கேள்வியைக் கேட்டார்.

“எனக்குத் தெரிந்து தூய இறைவழிபாட்டில் வாழ்பவர் ஒருவர்தான் இருக்கிறார். அவர் இருப்பது ரோமாபுரியில் உள்ள அம்மூரியா என்ற ஊரில்." இறந்து போனார் பாதிரி.

இறைஞானத் தேடல் தொடர்ந்தது.

அம்மூரியா வந்து சேர்ந்த ஸல்மான், பாதிரியைச் சந்தித்தார். இவரிடமும் துவக்கத்திலிருந்து தம் கதையைச் சொன்னார். சேர்த்துக் கொண்டார் பாதிரி. இந்தப் பாதிரியும் முந்தைய மூவரைப்போல் பக்தி சிரத்தையாய், இறை மார்க்கத்தைத் தூய வடிவில் பின்பற்றுபவராய் இருந்தார். ஸல்மானின் இறைக் கல்வியும் இறை வழிபாடும் தொடர்ந்தன. இம்முறை கூடவே மற்றொரு பணியும் செய்தார் ஸல்மான. கிடைத்த அவகாசத்தில் சிறு தொழில் புரிந்து, பணம் ஈட்ட, அதில் ஓரளவு பணசெல்வமும் அதைக்கொண்டு சில கால்நடைகளும் அவருக்குச் சேர்ந்தன. முந்தையவர்களைப் போலவே இந்தப் பாதிரியும் இருந்தார் என்று பார்த்தோமல்லவா? அவர்களைப் போலவே இவரும் முதியவர். சில காலம் கடந்ததும் இவரையும் கடைசித் தருணம் நெருங்கியது.

அடுத்து என்ன?

தமது வழக்கமான கேள்வியை அவரிடம் முன்வைத்தார் ஸல்மான். ஆனால் இம்முறை இந்தப் பாதிரியின் பதில் வழக்கம்போல் துவங்கி வித்தியாசமாய் முடிந்தது.
அது?

தொடரும், இன்ஷா அல்லாஹ்...

< தோழர்கள் முகப்பு | தோழர்கள் - 46 ஸல்மான் அல்-ஃபாரிஸி (سلمان الفارسي‎) பகுதி-2 >

Comments   

V. Mohamed Ibrahim
0 #1 V. Mohamed Ibrahim 2012-04-22 11:44
ALHAMTHULLIALH, I WILL EXPECT MORE FROM YOU. PLEASE SEND
Quote | Report to administrator
Khalid
+1 #2 Khalid 2012-04-23 10:12
அஸ்ஸலாமு அழைக்கும்.
நல்ல அருமையான,உணர்ச் சி பூர்வமான நபி (ஸல்) அவர்களின் தோழர்களின் வரலாறு தொகுப்பு....வேண ்டுகோள் நபி (ஸல்) தோழர்களின் வரலாறு தொகுப்பில் ஆதர நூல் விபரம் இணைத்தால் நல்லது..இது ஒரு கதையோ அல்லது கற்பனையோ அல்ல...படித்து பாதுகாக்க வேண்டிய விஷயம்.ஆதர நூற்கள் இணைக்கும் படி கேட்டு கொள்கிறேன்.
Quote | Report to administrator
நூருத்தீன்.
0 #3 நூருத்தீன். 2012-04-23 10:25
சகோ. காலித்.

வஅலைக்கும் ஸலாம்.

தோழர்கள் தொடருக்கு உதவும் நூல்களின் பட்டியலை கீழ்காணும் சுட்டியில் காணலாம்.

satyamargam.com/.../...

தங்களது அன்பிற்கு நன்றி.

அன்புடன்,
-நூருத்தீன்
Quote | Report to administrator
Khalid
0 #4 Khalid 2012-04-24 10:57
அஸ்ஸலாமு அழைக்கும்.

தாங்கள் பதிலுக்கு நன்றி...ஜசகல்லா ஹ் க்ஹைர்...அல்லாஹ ் உதவி புரிவானாக....மே ன்மேலும் பல வலராற்று சிறப்பு மிக்க நபி (ஸல்) தோழர்கள் வாழ்க்கை வரலாறு இடம்பெற.
Quote | Report to administrator
AHSAN AKBAR
0 #5 AHSAN AKBAR 2012-04-26 05:07
Please we are waiting for the remaining story, please release it as soon as possible
Quote | Report to administrator
KADAR BASHA
0 #6 KADAR BASHA 2012-06-16 13:08
Assalamu Alaikkum

masha allah Very informative ...
Quote | Report to administrator
n.shafir jamil
0 #7 n.shafir jamil 2012-10-30 08:53
masha allah . good information
Quote | Report to administrator
ziyaul haq
0 #8 ziyaul haq 2013-02-01 01:17
veri use jajakalla hairan kasira
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்