முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

தோழர்கள்

அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ

أبو العاص بن الربيع‎

ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு, ஜமாதுல் ஆகிர் மாதம்.  ஸைத் இப்னு ஹாரிதா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஸைத் இப்னு ஹாரிதாவின் தலைமையின்கீழ் 170 பேர் கொண்ட படைக்குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டது.

 

எதற்கு?

சேர்த்து வைத்த செல்வம், குடியிருந்த இல்லம், கூடிக்குலாவிய சொந்தம் என மக்காவிலிருந்த அத்தனையையும் துறந்து புலம்பெயர்ந்து வந்து ஆறு ஆண்டுகள் கடந்தபின்னும் அத்துணைத் தொலைவிலிருந்து புறப்பட்டு மதீனாவரை வந்து, முஸ்லிம்கள்மீது ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்த்தப்படும் போர்களால் முஸ்லிம்களின் நிம்மதியைக் குரைஷிகளால் குலைக்க முடிகிறதென்றால் ... அவர்களிடம் செழித்துக் குலுங்கும் செல்வ வளம்தானே! அதை மட்டுப்படுத்த வேண்டும்.  ஸாரியா உருவானது. "சிரியாவிலிருந்து மக்காவிற்குத் திரும்பும் குரைஷிகளின் வணிகக் கூட்டத்தைக் கண்டால் அவர்களை வழிமறித்து முறியடியுங்கள். அவர்களது பொருட்களைக் கைப்பற்றுங்கள்" கட்டளையொன்று இடப்பட்டது!

கிளம்பிச் சென்ற அந்தப் படையினர், சிரியா-மக்கா பாதையில் காத்திருக்க ஆரம்பித்தனர். பெரும் வணிகக் குழுவொன்று வெற்றிகரமாய் சிரியாவில் ஏற்றுமதி வியாபாரம் முடித்து, நூறு ஒட்டகங்கள், நூற்று எழுபது சேவகர்கள் என்று கொழுத்த பொருட்செல்வத்துடன் நகர்ந்து வந்து கொண்டிருந்தது - வழியில் காத்திருக்கும் ஆபத்தை அறியாமல். சரியான தருணத்தில் எத்தகைய முன்னறிவிப்பும் இன்றித் திடீரென அவர்களைத் தாக்கியது முஸ்லிம்களின் படை. களத்தில் புகுந்து முஸ்லிம் வீரர்கள் தாக்குதல் தொடுக்க, போருக்கெல்லாம் தயாராக இல்லாத அவர்கள் விரைவில் சரணடைந்தனர். அத்தனை செல்வத்துடனுடம் அவர்களை முஸ்லிம்கள் கைப்பற்ற, ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார்.

மதீனா நகரம். மறுநாள் வைகறை நேரம். வழக்கம்போல் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டது. நபிகள் நாயகம் பள்ளியை அடைந்தார்கள். இகாமத் சொல்லப்பட்டு, தோழர்கள் வரிசையாய் அணிவகுத்து நிற்க நபியவர்கள் தொழுகையைத் துவங்கினார்கள்.

"அல்லாஹு அக்பர்!" முதல் தக்பீர் சொல்லப்பட்டுத் தொழுகை ஆரம்பமாக, அந்நேரம் பின்புறம் பெண்கள் பகுதியிலிருந்து அந்தக் குரல் ஒலித்தது.

"அனைவரும் கேட்டுக் கொள்ளுங்கள்! நான் முஹம்மதின் மகள் ஸைனப். அபுல் ஆஸ் பின் அர்ரபீஉக்குப் பாதுகாப்பு அளிப்பதாய் நான் வாக்குறுதி அளித்துவிட்டேன். அதை ஏற்றுக் கொண்டு நிறைவேற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்"

ஆச்சரியகரமான அச்செய்தி நபியவர்களையும் மற்றவர்களையும் எட்டி இலேசான அதிர்வு படர, தொழுகை தொடர்ந்தது!

* * * * *

அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ மக்காவிலுள்ள அப்துஷ் ஷம்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்தவர். செல்வந்தக் குடும்பம், உயர்குலம் என்ற பின்புலம்.

நபியவர்களின் முதல் மனைவி கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவின் சகோதரி ஹாலா பின்த் குவைலிதின் மகன்தான் அபுல் ஆஸ். தன் சகோதரியின் மகனைத் தம் சொந்த மகனாகவே பாவித்தார் அன்னை கதீஜா. மிகுந்த பாசம், அக்கறை, கனிவு. பின்னர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கதீஜாவின் கணவராய் அமைய, அந்த அத்தனையும் நபியவர்களிடமிருந்தும் அபுல் ஆஸிற்குக் கிடைத்தது.

முஹம்மது நபி, அன்னை கதீஜா தம்பதியருக்கு ஸைனப், ருகைய்யா, உம்மு குல்தூம், ஃபாத்திமா ஆகியோர் பெண்மக்கள். இவர்களுள் ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா மூத்த மகள். வளர்ந்து வாலிப வயதை அடைந்த ஸைனபை மணமுடிக்க மக்காவிலுள்ள தலைவர்களின் மகன்களுக்கு ஏகப்பட்ட ஆர்வம், பலத்த போட்டி. முஹம்மது நபியின் வம்சாவழியும் சரி, கதீஜா பின்த் குவைலித் அவர்களின் வம்சாவழியும் சரி, மிகவும் பெருமை வாய்ந்தது. அத்தகைய குலத்தில் தோன்றிய அழகிய, நற்குணமுள்ள பெண்ணை மணப்பதில் போட்டியில்லாமல் எப்படி?

ஆனால் அந்த வாய்ப்பு கதீஜாவின் சகோதரி மகன் அபுல் ஆஸிற்குக் கிடைத்தது. பெருந்தன்மை, மரியாதை, வீரம், வாய்மை ஆகிய அனைத்தும் ஒருங்கே நிறைந்தவர் அபுல் ஆஸ். துணிவு, விசுவாசம், தன்முனைப்பு எல்லாம் மிக அதிகம். இப்படியொரு அருமையான மாப்பிள்ளை சொந்தத்திலேயே இருக்க வெளியில் எதற்கு என்று அவரையே தன் மருமகனாக்கிக் கொண்டனர் நபிகள் நாயகம்-கதீஜா தம்பதியினர்.

அபுல் ஆஸ்-ஸைனபின் இல்லற வாழ்க்கை சிறப்பாய்த் துவங்கியது. ஆனந்தமாய்த் தொடர்ந்தது.

சில ஆண்டுகள் கழிந்திருக்கும். நல்லதொரு இரவில் மக்காவிலுள்ள மலைக்குகைக்குக்கு வானவர் தலைவர் வந்து செய்தி அறிவிக்க, அது மெல்ல நகருக்குள் பரவியது.

"ஒரே இறைவனாம், வேறொன்றும் இல்லையாம்! இவர் அந்த இறைவனின் தூதராம்" என்று நபித்துவ செய்தி மக்காவின் வீதிகளிலும் வீடுகளிலும் பெரும் பேச்சாகிப் போனது. முதலில் தன் வீட்டாரிடம்தான் அந்த ஏகத்துவச் செய்தியை அறிவித்தார்கள் முஹம்மது நபியவர்கள். அதை அப்படியே, உடனே ஏற்றுக் கொண்டார் அவரின் மனைவி கதீஜா ரலியல்லாஹு அன்ஹா. அவர்களின் மகள்கள் ஸைனப், ருகைய்யா, உம்மு குல்தூம், ஃபாத்திமா - ரலியல்லாஹு அன்ஹுன்ன - அவர்களுக்கும் ஏதும் பிரச்சனை இருக்கவில்லை. அனைவரும் ஏற்றுக் கொண்டனர். முழுக்க முற்றிலும் தங்களின் தலைவனை அறிந்திருந்தது அந்தக் குடும்பம்.

இந்தச் செய்தியை நபியவர்களின் மூத்த மருமகன் அபுல் ஆஸினால் மட்டும் ஜீரணிக்க இயலவில்லை. காலங்காலமாய் வழிபட்டுவரும் மூதாதையர்களின் சமயத்தையும் சிலைகளையும் சம்பிரதாயங்களையும் உடனே அவரால் தூக்கி எறிய முடியவில்லை.

தன் மாமனார் முஹம்மது அவர்களின்மேல் அளப்பரிய மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் இருந்ததுதான். அவர்களது நேர்மை வாக்குச்சுத்தம் ஆகியனவற்றில் குறையென்று எதுவுமே சொல்ல முடியாதுதான். அப்பழுக்கு இல்லாத உத்தமர் என்பதும் நிதர்சனமான உண்மையே. ஆனால் அவை அத்தனையையும் மீறி அபுல் ஆஸிற்குத் தனது குலவழக்கம் பெரிதாய்த் தோன்றியது. அதைவிட்டு வெளிவர அவரது மனம் ஒப்பவில்லை.

இறைச்செய்தி வந்து இறங்க இறங்க, மக்காவில் இஸ்லாத்தின் மீளெழுச்சிப் பிரச்சாரம் தீவிரமடைய ஆரம்பித்தது. குரைஷிகளால் முஸ்லிம்களுக்கு ஓயாத குடைச்சல், துன்புறுத்தல் என்று நாளுக்குநாள் போராட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஆனால் இஸ்லாமிய வீரியம் குறைவதாயில்லை. அன்றிலிருந்து வரலாற்றைச் சற்றுக் கவனித்தால் பிரச்சனைகளும் சோதனைகளும் அதிகரிக்கும்போதுதான் இஸ்லாம் மேலும் வலுவடைந்து பரவலடைவதை அறிய முடியும். அது இறைவிதி போலும். அடுத்து என்ன செய்யலாம் என்று குரைஷிகள் ஒன்று கூடித் திட்டமிட்டார்கள்.

"நம் மகன்கள் அவரின் மகள்களைத் திருமணம் புரிந்து கொண்டு இல்லறம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முஹம்மது உத்தமர்தான். ஆனால் நமக்கு விரோதியாகிவிட்டார். அப்புறம் என்ன சம்பந்தம் வேண்டியிருக்கிறது? இவருடையப் பிரச்சார வேகத்தை மட்டுப்படுத்தி தடுக்கவேண்டுமென்றால் அவருக்குக் குடும்பக் கவலையை அதிகப்படுத்த வேண்டும். நம் மகன்கள் அவருடைய மகள்களை விவாகரத்து செய்யட்டும். தன் மகள்களின் எதிர்காலம் பற்றிய கவலை அவருக்கு ஏற்படும். அது அவரைத் திசை திருப்பிவிடும்"

ஏதாவது செய்து முஹம்மது நபியைத் தண்டிக்க வேண்டும், அவர் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆத்திரம் மட்டுமே அவர்களுக்கு மேலோங்கியிருந்தது. "சபாஷ்! இது உருப்படியான யோசனை" என்று குதித்து எழுந்தது அக்குழு.

நபியவர்களின் சிற்றப்பனும் இஸ்லாத்தின் கொடிய விரோதியுமான அபூலஹபிற்கு உத்பா, உதைபா என்று இரு மகன்கள். அவர்கள் இருவருக்கும் முறையே நபியவர்களின் மகள்கள் ருக்கையா, உம்மு குல்தூம் ஆகியோர் மணமுடித்து வைக்கப்பட்டிருந்தனர். அதில் உம்மு குல்தூம் மிகவும் இளவயதுடையவராதலால் உதைபாவுடன் சேர்த்து வைக்கப்படாமல் பெற்றோர் இல்லத்தில் வசித்து வந்தார்.

அபூலஹபின் மகன்களிடம் தங்களது திட்டத்தைத் தெரிவித்தது அக்குழு. அதை ஏற்பதில் அவர்களுக்குத் துளியும் சங்கடம் இருக்கவில்லை. "நல்ல யோசனை சொன்னீர்கள். அப்படியே செய்வோம்" என்று அபூலஹபின் நல்லாசியுடன் பெருமகிழ்ச்சியாய் அத்திருமணங்கள் முறிக்கப்பட்டன.

உத்பாவிற்கு ஸயீத் இப்னுல் ஆஸ் என்பவன் தன் மகளை "இந்தா என் மகள்" என்று மணமுடித்துக் கொடுத்தான். அடுத்து அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ இடம் சென்றது அக்குழு.

"அபுல் ஆஸ்! நமது பிரச்சனைகளெல்லாம் உனக்குத் தெரியும். உன் மாமனார் ஆரம்பித்துள்ளாரே பிரச்சாரம், அது மக்காவின் நிம்மதியையே குலைத்துவிட்டது. அவருக்குப் பாடம் புகட்டி அவரைத் தடுத்து நிறுத்த நாங்கள் எளிதான திட்டம் வைத்திருக்கிறோம். உன் மனைவி முஹம்மதுவின் மூத்த மகள். அவரை விவாகரத்து செய்துவிடு. பயப்படாதே, அதற்குப் பதிலாய் குரைஷிகளிலேயே மிகச் சிறந்த வேறு தலைவரின் மகள் யார் வேண்டுமென்று கைகாட்டு, எந்த அழகி வேண்டுமென்று சொல், உடனே உனக்கு மணமுடித்து வைக்கிறோம்"

அதிர்ந்துவிட்டார் அபுல் ஆஸ்! அவருக்குத் தன் மனைவியின் மீது அளவற்ற பாசமும் நேசமும் இருந்தது. 'மாமனார் நிகழ்த்திவரும் இஸ்லாமியப் பிரச்சாரம் எனக்கு உவப்பில்லைதான். அதற்காக?'

"அதெல்லாம் முடியாது! சத்தியமாக முடியாது! விவாகரத்து என்ற பேச்சிற்கே இடமில்லை. உலகிலுள்ள எந்தப் பேரழகியை நீங்கள் எனக்குப் பகரமாகத் தருவதாக இருந்தாலும் சரியே, இதெல்லாம் நடக்காது" என்று மிகத் திட்டவட்டமாக அந்தக் குரைஷிகளிடம் தெரிவித்துவிட்டார் அபுல் ஆஸ்.

ருகைய்யா மட்டும் தாய் வீடு திரும்பினார். ஆனால் இந்த நிகழ்வு நபியவர்களுக்கு வருத்தத்திற்குப் பதிலாய் நிம்மதியையே அளித்தது. பலதெய்வ உருவ வழிபாடு நிகழ்த்துபவர்களிடம் தம் மகள்கள் மனைவியராக இருப்பதில் நபியவர்களுக்குச் சங்கடம் இருந்து கொண்டேயிருந்தது. அத்தருணத்தில் அத்தகைய திருணம முறிவு பற்றிய சட்டமும் இறங்கியிருக்கவில்லை. நபியவர்களும் மகள்களிடம் கணவர்களைப் பிரிந்து வந்துவிடுமாறு வற்புறுத்த இயலாத நிலையில் இருந்தார்கள். இந்நிலையில் குரைஷியரின் திட்டம் முஹம்மது நபிக்கு சாதகமாக ஆகிப்போனது. இதைப்போல் அபுல் ஆஸும் ஸைனபை விவாகரத்து செய்துவிட்டால் நல்லதுதான் என்ற விருப்பம் அவர்களுக்குத் தோன்றியது.

காலம் நகர்ந்து கொண்டிருந்தது. மக்காவில் இருந்து கொண்டு அதற்குமேல் ஏதும் தாங்கமுடியாது என்ற நிலைமை ஏற்பட, ஹிஜ்ரத் நிகழ்ந்தது. வரலாற்றின் விறுவிறுப்பான அடுத்த பாகம் மதீனாவில் துவங்கியது.

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு போருக்குக் கிளம்பி வந்தது குரைஷியர் படை. பத்ரில் முதல் யுத்தம் நிகழ்ந்தது. அந்த யுத்தமே தனிப்பல அத்தியாயங்கள் அடங்கிய மாபெரும் நிகழ்வு. நாம் சுருக்கமாய் அதை ஆங்காங்கே தொட்டுக் கடந்து செல்வோம்.

குரைஷிக் குலத்தின் முக்கியத் தலைவர்கள் படையெடுப்பில் கிளம்பி வந்திருந்தார்கள். ஒவ்வொரு குலத்திலிருந்தும் பெருந்தலைகள் கலந்து கொண்டதால் அபுல் ஆஸிற்கு அந்தக் கட்டாயம் ஏற்பட்டது.  ஏனெனில் அவரது குலக் குழுவிற்கு அவர் தலைமைப் பொறுப்பில் இருந்ததார். தனிப்பட்ட முறையில் அவருக்கு முஸ்லிம்கள்மேல் விரோதமில்லை என்றாலும் உடன்பாட்டிற்குக் கட்டுப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  வேறுவழியில்லை, கலந்து கொண்டார்.

இறுதியில் பத்ருப் போர் குரைஷிகளுக்குப் படுதோல்வியில் முடிந்தது. ஆயிரக்கணக்கான எதிரிகளை, சில நூறு வீரர்கள் அடங்கிய முஸ்லிம் படை சுருட்டி வீசியது. சில முக்கியக் குரைஷித் தலைவர்கள் கொல்லப்பட்டனர். பலர் சிறைபிடிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்டவர்களில் முக்கியமான குலக்குழுவின் தலைவர் ஒருவர் இருந்தார் - அபுல் ஆஸ்.

முதல் போர், முழு வெற்றி. அப்பொழுது போரில் சிறைபிடிக்கப்பெற்ற கைதிகள் பற்றிய சட்டம் வெளியாகி இருக்கவில்லை. முஹம்மது நபி, தோழர்களுடன் கலந்து ஆலோசித்தபின் முடிவாகியது, 'பிணையத் தொகை பெற்றுக் கைதிகளை விடுவிக்கலாம்' கைதியின் வசதி, அந்தஸ்து, செல்வாக்கு ஆகியனவற்றைப் பொருத்து ஆயிரம் திர்ஹத்திலிருந்து நாலாயிரம் திர்ஹம்வரை பிணையத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.

அதற்குப் பகரமாய் மற்றொரு சலுகையையும் நபியவர்கள் அறிவித்தார்கள். கைதிகளில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களிடம், "நீ முஸ்லிம்களின் பிள்ளைகளுக்கு எழுத, படிக்கக் கற்றுத் தந்தால் போதும். உனக்கு பிணையத் தொகை விலக்கு" என்று தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம் சமூகம் கல்வியில் சிறக்க வேண்டுமென்ற அபரிமிதமான அக்கறை இருந்தது நபியவர்களுக்கு. "ஓதுவீர்!" என்ற இறை அறிவிப்பில் துவங்கிய மார்க்கமல்லவா? அதனால் கல்வி என்பதெல்லாம் இச்சமூகத்திற்குப் பொழுது போக்கு அம்சமல்ல. அதை நாம் முழுதும் உணர வேண்டியது அவசியம், மிக அவசியம்.

மக்காவிலிருந்து அவரவரும் தத்தமது கணவன், மகன், தகப்பன் என்று போரில் பிடிக்கப்பெற்றவர்களை விடுவிக்க பணத்துடன் மதீனாவிற்கு ஆளனுப்பிக் கொண்டிருந்தனர். ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா மக்காவில் இருந்தார். தம் கணவர் பிடிபட்ட செய்தி அவருக்கும் கிடைத்தது. கணவரை விடுவிக்க பணமும் கழுத்து ஆபரணம் ஒன்றையும் கொடுத்தனுப்பினார். அது, அன்னை கதீஜா தம் மகளுக்குத் திருமணத்தின்போது பரிசளித்த நகை.

தாயின் சீதனம் தந்தையை வந்தடைந்தது. அந்த நகையைக் கண்ட தூதுவர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முகத்தில் சோகமும் வேதனையும் படர்ந்தன. தன்னுடைய முதல் மனைவியின் மீதும் மகளின் மீதும் அபாரப் பாசம் கொண்டிருந்தவர்கள் அவர்கள். தம் அளவிலாப் பாசத்திற்குரிய மனைவியின் கழுத்தை அலங்கரித்திருந்த அதே கழுத்தணி, பிணைய மீட்புத் தொகையாக வந்தது அவர்களுக்கு மிகுந்த நெகிழ்ச்சியை அளித்தது!

தம் தோழர்களை நோக்கித் திரும்பி, "ஸைனப் தம் கணவன் அபுல் ஆஸை மீட்க இந்தப் பணமும் நகையும் கொடுத்து அனுப்பியுள்ளார். இந்த மீட்புத் தொகையைப் பெறாமல் அவரை விடுவிப்பதில் உங்களில் எல்லாருக்கும் உவப்பிருந்தால் நீங்கள் அப்படிச் செய்யலாம்"

"விடுவியுங்கள் அவரை" என்று ஒரு கட்டளை இட்டிருந்தாலே சிரமேற்கொண்டு செய்திருப்பார்கள் தோழர்கள். ஆனால் நபியவர்கள் எவருடைய உரிமையையும் மீற முன்வந்ததே இல்லை, அது தமக்கான தேவையாய் இருந்த போதிலும்கூட. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

"அப்படியே செய்கிறோம் அல்லாஹ்வின் தூதரே, தாங்கள் மனம் வருந்த வேண்டாம்" என்றவர்கள் உடனே அபுல் ஆஸை அழைத்து "உங்களுக்கு விடுதலை. நீங்கள் மக்காவிற்குப் போகலாம்" என்று அறிவித்துவிட்டார்கள். விடுதலையானார் அபுல் ஆஸ்.

அவர் மக்காவிற்குக் கிளம்பும்முன் அவரைத் தனியாக அழைத்துப் பேசினார்கள் நபியவர்கள். என்ன உரையாடினார்கள் என்பதைப் பற்றி நேரடியான குறிப்புகள் இல்லை. எனினும் அது என்னவாயிருக்கும் என்பதை அடுத்து நடந்த நிகழ்வுகள் புலப்படுத்தின.

ஸைத் இப்னு ஹாரிதாவையும் மற்றொரு அன்ஸாரித் தோழரையும் அழைத்து முக்கியப் பணியொன்று அளித்தார்கள் முஹம்மது நபி. "யாஜாஜ் சென்று நீங்கள் இருவரும் காத்திருக்கவும். என் மகள் ஸைனப் வருவார். அவரைப் பத்திரமாக மதீனா அழைத்து வரவும்" யாஜாஜ் என்பது மக்காவிலிருந்து சுமார் எட்டு மைல் தொலைவில் இருக்கும் ஓர் ஊர். தோழர்கள் அங்குச் சென்று காத்திருக்க, அபுல் ஆஸ் ஸைனப் ரலியல்லாஹு அன்ஹாவை மக்காவிலிருந்து அங்கு இட்டுச் சென்று விட்டுவிட வேண்டும் என்று ஏற்பாடாகியிருந்தது.

பத்ருப் போர் முடிந்து ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு மக்கா வந்தடைந்தார் அபுல் ஆஸ். பயணக் களைப்பையெல்லாம் குளித்து முடித்துத் தீர்த்திருக்க வேண்டும். பிறகு ஸைனபிடம் நடந்ததை விவரித்து, "பயணத்திற்குத் தயாராகு. உன்னை அழைத்துச் செல்ல உன் தந்தையின் தோழர்கள் நகருக்கு வெளியே காத்திருக்கின்றனர்"

கணவனைப் பிரிந்து தந்தையைச் சென்று அடைய உடனே தயாராக ஆரம்பித்தார் ஸைனப். இஸ்லாத்தில் உறவுகளுக்கு மிகச் சிறந்த உரிமை உண்டுதான். அதற்கான சட்டங்களும் இலக்கணங்களும் விவரிக்கப்பட்டும் இருக்கின்றன.  ஆனால் அவையெல்லாம் இறைவனையும் அவனுடைய தூதரையும் தாண்டி அமைவதில்லை. படைத்தவனுக்கே சகல உரிமை. படைக்கப்பட்டவர்களுக்கு அதன் பிறகே இதர உரிமை என்பது அடிப்படை விதி. அதை முழு முற்றிலும் உணர்ந்திருந்த முதல் தலைமுறை அவர்கள்.

தன் மனைவியின் பயணத்திற்குரிய ஏற்பாடுகளையும் உதவிகளையும் கவனிக்க ஆரம்பித்தார் அபுல் ஆஸ். இதனிடையே மற்றொரு சுவையான நிகழ்வொன்று நடந்தது! முந்தைய அத்தியாயங்களில் படித்தோமே ஹிந்த் பின் உத்பா, நினைவிருக்கிறதா? அவருக்கு ஏதோ ஓர் உள்ளுணர்வு, மனதிற்குள் குறுகுறுப்பு. ஸைனபை யதேச்சையாய்ச் சந்தித்த அவர், "என்ன ... மதீனா செல்லும் ஏற்பாடுகள் எல்லாம் முடிந்துவிட்டதா, தயாரா?" என்றார். ஸைனப் தன் பயண ஏற்பாடுகளை இரகசியமாய் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஹிந்த் இப்படிக் கேட்டால்? அதுவும் பத்ருப் போரில் தன் தந்தை, சகோதரன், தந்தையின் சகோதரன் ஆகியோரை இழந்திருந்தவர் அவர்.

"இது சரியில்லையே, எனது நோக்கம், திட்டம் இதையெல்லாம் தெரிந்து கொள்ளத்தான் இப்படிக் கேட்டிருக்க வேண்டும். பின் என்ன? மூட்டை முடிச்சுகளை ஒட்டகத்தில் ஏற்றிவைத்து ஹிந்த் கையசைத்து வழியனுப்பி வைப்பாரா?" என்றெல்லாம் ஸைனப் மனதில் எண்ணம் ஓடியிருக்க வேண்டும்.

"இல்லையே!" என்றார் ஸைனப்.

ஆனால் ஹிந்த் விடவில்லை. "உனக்கு எந்த உதவி வேண்டுமானாலும் சொல், தயங்கவே வேண்டாம். நான் செய்து தருகிறேன். மதீனா நீண்ட தூரப் பயணம். அது உனக்கு எளிதாய் அமையவே நான் விரும்புகிறேன். பெண்கள் நமக்குள் இருக்கும் நட்பு தனி; ஆண்களுடைய பகைமையும் குரோதமும் தனி. எனவே அதையும் இதையும் முடிச்சுப் போட்டு நீ துன்பத்துக்குள்ளாகாதே!"

அத்தகைய கனிவான தேனொழுகும் வார்த்தைகளைக் கேட்ட ஸைனப் "நம்பிவிடலாமா" என்றுகூட நினைத்தார். "சொல்லிவிடலாமா?"ஆனால் முன்னெச்சரிக்கை முந்திக் கொண்டது. "நிச்சயமாக அப்படியான திட்டம் ஏதுமில்லை ஹிந்த்" என்று மறுத்துவிட்டார் ஸைனப்.

ஒட்டகம், பயணத்திற்குத் தேவையான இதரப் பொருட்கள் அனைத்தும் தயாராயின. தன் சகோதரன் அம்ரு பின் அர்ரபீஉவை அழைத்தார் அபுல் ஆஸ். "ஸைனபை மதீனா அழைத்துச் செல்ல நகருக்கு வெளியே என் மாமனாரின் தோழர்கள் காத்திருக்கிறார்கள். நீ அவர்களிடம் பத்திரமாய் இவரை ஒப்படைத்துத் திரும்பவும்" என்று அனுப்பி வைத்தார்.

அம்ரு பின் அர்ரபீஉ மிகத் தேர்ந்த வில்வித்தை வீரர். குறிதவறாது அம்பெய்தும் அவரது திறன் மக்கா மக்கள் மத்தியில் பிரசித்தம்.  தனது வில்லையும் அம்பையும் எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டார் அம்ரு. ஸைனபை ஒட்டகத்தில் ஏறிக் கொள்ளச் சொன்னார். பட்டப்பகல் நேரமது. "கிளம்புங்கள்" என்று ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டார்.

ஸைனப் மதீனா செல்லப் போகிறார் என்று நிச்சயமற்ற செய்தி பரவிக் கொண்டிருந்தது. இந்நிலையில் பட்டப்பகலில் தங்கள் கண்ணெதிரே அது நடைபெறுவதைக் கண்டு திகைத்துவிட்டனர் குரைஷிகள்! கோபமும் அவமானமும் தலைக்கேறிக் குதித்தார்கள். பத்ருப் போரில் கேவலமான முறையில் தோற்றுத் திரும்பி, அதன் காயம் யாருக்கும் ஆறாமல் அனைவரும் தத்தளித்துக் கொண்டிருந்த நேரம் அது. அதற்குக் காரணம் முஹம்மது. இப்பொழுது அவரின் மகள் படுஉரிமையுடன் மதீனா கிளம்பிச் செல்வதென்பது தங்களது கையாலாகத்தனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் செயலாய் அவர்களுக்கு வலித்தது. எனவே பெரியதொரு கூட்டம் ஒட்டகம், குதிரை என்று அவர்களை துரத்திச் சென்றது.

தூ-துவா (Thu Tuwa) என்ற பகுதியில் அவர்களை எட்டிவிட்டனர். அவர்களில் ஹப்பார் இப்னு அல்-அஸ்வத் என்பவன்தான் முதலில் அவர்களை எட்டினான். தனது ஈட்டியைக் குறிபார்த்து எறிந்தான். அது நேராய் ஸைனப் அமர்ந்திருந்த் ஒட்டகத்தின் அம்பாரியைச் சென்று தாக்கியது. அப்போது சூலியாக இருந்தார் ஸைனப். அந்த அதிர்ச்சியில் கருச்சிதைவுற்று விட்டது. மற்றொரு குறிப்பு ஹப்பார், ஸைனபின் ஒட்டகத்தை மிரட்டி விரட்ட அதனால் அம்பாரியிலிருந்து தடுமாறி விழுந்த ஸைனபிற்கு கருச்சிதைவுற்று விட்டதாகக் குறிப்பிடுகிறது.

தங்களைக் குரைஷிகள் பின்தொடர்ந்து எட்டிவிட்டதைக் கண்ட அம்ரு பின் அர்ரபீஉ சுதாரித்துக் கொண்டார். உடனே தனது அம்புகளை தரையில் பரப்பிப் போட்டார் அவர். ஓர் அம்பை எடுத்து வில்லில் பூட்டி அறைகூவல் விட்டார், "இதோ பாருங்கள் மக்களே! சத்தியமாகச் சொல்கிறேன், யாராவது இவரை நெருங்கினீர்கள், இந்த அம்பு உங்கள் கழுத்தில் நுழைந்து பிடறியில் வெளிவரும்" ஒரு குழுவிற்கு எதிராய், தனியாளாய் வில் ஏந்தி நின்றிருந்தார் அம்ரு.

அது வீண்மிரட்டல் இல்லை என்பது குரைஷிகளுக்குத் தெரியும். மேற்கொண்டு எத்தகைய அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் நிச்சயம் சில குரைஷிகள் கொல்லப்படுவர் என்பது மட்டும் திடமாய்த் தெரிந்தது. எனவே சற்றுப் பின்வாங்கினர். இருந்தாலும் அவரை அப்படியே விட்டுவிட அவர்களும் தயாராயில்லை. அக்கூட்டத்தில் இருந்த அபூஸுஃப்யான்தான் அந்த நேரத்தில் சமயோசிதமாய் நிலைமையைச் சமாளித்தார்.

"மகனே! கொஞ்சம் நிதானமாகு, பேசுவோம்" என்று அம்ருவை நெருங்கினார். பிறகு தாழ்ந்த குரலில் பேசினார். "தவறான ஒரு வழியை நீ தேர்ந்தெடுத்துவிட்டாய் அம்ரு. இப்படிப் பட்டப்பகலில் எங்கள் எல்லோர் முன்னிலையிலும் நீ ஸைனபை அழைத்துச் செல்வது எங்களுக்கெல்லாம் சவால் விடுவது போலவல்லவா இருக்கிறது? அரேபியாவில் சகலரும் பத்ரில் நமக்கு ஏற்பட்ட அவமானத் தோல்வியை அறிந்துள்ளனர். அதை நமக்கு அளித்தது இவருடைய தந்தை முஹம்மது. இப்பொழுது அவரின் மகளை எங்கள் முன்னிலையில் நீ வெளியேற்றி அழைத்துச் சென்றால் அனைத்துக் கோத்திரத்தினரும் நம்மைப் படுகோழைகள் என்றே முத்திரை குத்திவிடுவார்களே! நமது குரைஷிக் குலச் செல்வாக்கும் மதிப்பும் காற்றில் பறந்துவிடுமே! அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருடைய கணவரிடம் விட்டுவிடு. ஓரிரு நாட்கள் கழியட்டும். நாம் இத்திட்டத்தை முறியடித்துவிட்டோம் என்று மக்கள் எல்லாரும் நம்பிவிடுவார்கள். பிறகு இரவோடு இரவாக யார் கண்ணிலும் படாமல் நீ ரகசியமாய் இவரை இவரின் தந்தையிடம் அனுப்பி வைத்துவிடு. ஏனெனில் இந்தப் பெண்ணை இவரின் தந்தையிடமிருந்து பிரித்துவைப்பதில் நமக்குப் பெரிய லாபம் ஏதுமில்லை"

குரைஷிகளின் அந்த அவலநிலை அம்ருக்குப் புரிந்தது. மாற்றுத் திட்டம் சரியெனப் பட்டது. ஸைனபை அழைத்துக்கொண்டு மக்கா திரும்பினார்.

இந்த நிகழ்வின் இரைச்சல் எல்லாம் அடங்கியதும் ஒருநாள் இரவு யார் கண்ணிலும் படாமல் ரகசியமாக அழைத்துச் சென்று யாஜாஜில் காத்திருந்த நபித் தோழர்களிடம் ஸைனபை ஒப்படைத்தார் அம்ரு. பத்திரமாய் அவரை மதீனாவிற்கு இட்டுச் சென்றனர் அவர்கள்.

ஸைனபைத் துரத்திச் சென்றவர்களைப் பிற்பாடு ஒருசமயம் ஹிந்த் சந்திக்க நேர்ந்தது. ஏகவசனத்தில் திட்டித் தீர்த்தார். "அமைதியான காலங்களில் - ஒரு பெண்ணிடம் - உங்கள் துணிவையும் வீரத்தையும் காட்டுஙகள். அதுவே போரென்றால் மாதவிடாயில் பலவீனமுற்ற பெண்களைப்போல் பம்மிவிடுஙகள்"

* * * * *

தன்னுடைய மருமகன் மீது ஏதோ ஒரு நம்பிக்கை நபியவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். அவரைப்போல் குணாதிசயம் கொண்ட நல்லவர் இஸ்லாத்தை நிராகரித்தவராகவே வாழ்க்கையைத் தொடர முடியாது என்பதை அவர்கள் யூகித்திருக்க வேண்டும் - அதனால்தானோ என்னவோ மதீனா திரும்பிய ஸைனபிற்கு மறுமணம் நிகழ்த்தாமல் வைத்திருந்தார்கள். ஸைனபும் தம் கணவர் அபுல் ஆஸ்மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்.

அங்கு மக்காவில் அபுல் ஆஸ் தனது தொழிலில் மூழ்கி வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். மக்காவிலிருந்த குரைஷிக் குலத்தினருக்கு வயல், தோட்டம், துரவு என்பதெல்லாம் இல்லை. அவர்களது பொருளாதாரம் வணிகம் மட்டுமே. குளிர்காலத்தில் யமன் நாட்டிற்கும் கோடைக் காலத்தில் சிரியாவிற்கும் வணிகக் கூட்டம் செல்லும். இங்கிருந்து பொருட்களை அங்குக் கொண்டு சென்று விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். பிறகு அங்கிருந்து பொருட்களைக் கொள்முதல் செய்து இங்குக் கொண்டு வந்து விற்பார்கள். மேலும் லாபம் கிடைக்கும். நவீன பாணியில் சொன்னால் ஏற்றுமதி-இறக்குமதி. பெரும் செல்வந்தர்கள் சுயமாய் அத்தொழில் செய்வார்கள். உதவி புரிய சம்பளத்திற்கும் கூலிக்கும் ஆட்கள், அடிமைகள் உண்டு. சிறு வியாபாரிகளாய் இருப்பவர்கள், திறமையான வணிக இளைஞர்களிடம் பொருள் ஒப்படைத்து பொறுப்பையும் ஒப்படைத்தால் அவற்றை விற்று லாபத்துடன் கொண்டு வந்து ஒப்படைப்பார்கள், அல்லது அவர்கள் வேண்டுகோள்படி அங்கிருந்து பொருள் வாங்கி வந்து அளிப்பார்கள். குரைஷிகளுக்குத் தங்களது வணிகத் தொழிலின்மேல் அபாரப் பிரியம் இருந்தது. வர்த்தகம் அவர்களுக்குப் பெருமை, செல்வம் எல்லாம் அளித்துக் கொண்டிருந்தது. குறைவே இல்லாமல் பெருகிக் கொண்டே வந்த பெருமையும் செல்வமும் ஸாரியாவினால் சடாரெனச் சரியப் போவதை குரைஷிகள் அப்போது அறிந்திருக்கவில்லை.

அபுல் ஆஸும் ஒரு சிறந்த வணிகர். சில சமயம் நூறு ஒட்டகங்கள் இருநூறு ஆட்கள் என்று அவரது வர்த்தகக்குழு பயணம் செய்யும். குரைஷியர் மத்தியிலும் அவருக்கு நற்பெயர் இருந்தது.  சிறுதொழில் வர்த்தகர்கள் அவரிடம் பணம் அளித்து முதலீடு செய்திருப்பார்கள். அந்த அளவு அவரது நாணயம், கூர்மதியின்மேல் நம்பிக்கை.

மதீனாவில் அரசியல் மாற்றங்கள் விறுவிறுவென நிகழ்ந்து கொண்டிருந்தன. இஸ்லாம் மேலும் மேலும் வலுவடைந்துக் கொண்டிருந்தது. அப்பொழுது முஸ்லிம்கள் ஒரு யுக்தியைக் கையாண்டனர். சிறுசிறு படையெடுப்புகள் பல அவ்வப்போது நிகழ்த்தப்பட்டன. அரபு மொழியில் அவை, ஸாரியா என அழைக்கப்படும். அவற்றிற்குப் பற்பல காரணங்கள் இருந்தன. அவற்றுள் முக்கியமான ஒன்று குரைஷியரின் வணிகக் கூட்டத்தைக் குறிபார்த்து நிகழ்த்தப்பெறும் படையெடுப்பு. அதன் நோக்கம் தெளிவானது. குரைஷியரின் பொருளாதார மேலான்மையை முறியடிப்பது. ஒருவகையில் பொருளாதார முற்றுகை.

முஸ்லிம்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்த பிறகும் குரைஷியரின் பிரச்சனை அடங்குவதாய் இல்லை. படையெடுத்து வந்து இஸ்லாத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்க முயன்று கொண்டிருந்தார்கள். அதற்கெல்லாம் அவர்களுக்கு வலுவாய் உதவியது அவர்களது வணிகப் பொருளாதாரம். அதன் தெம்பில்தானே வாலாட்டுகிறார்கள்? அதை நறுக்கினால்? மக்காவிலிருந்து சிரியாவிற்குச் செல்லும் வழியில்தான் மதீனா அமைந்திருந்தது. எனவே குரைஷியரின் வலுவைத் தகர்க்க மிகவும் சமயோசிதமாய் வெற்றிகரமாய்ச் செயல்படுத்தப்பட்ட திட்டம் - ஆபரேஷன் ஸாரியா.

இப்படியான அரசியல் சூழ்நிலையில் கோடைக்காலம் ஒன்றில் தனது வணிகக் கூட்டத்துடன் சிரியாவிற்குக் கிளம்பினார் அபுல் ஆஸ். சென்ற வேலை நலமே முடிந்து நூறு ஒட்டகம், நூற்று எழுபது சேவகர்கள் என்று அவரது குழு திரும்பிக் கொண்டிருந்தது. வழியில் காத்திருக்கும் ஆபத்தை அறியாமல் நகர்ந்து வந்து கொண்டிருந்தது. சரியான தருணத்தில் எத்தகைய முன்னறிவிப்பும் இன்றி, திடீரென அவர்களைத் தாக்கியது முஸ்லிம்களின் படை. களத்தில் புகுந்து முஸ்லிம் வீரர்கள் தாக்குதல் தொடுக்க, போருக்கெல்லாம் தயாராக இல்லாத அவர்கள் விரைவில் சரணடைந்தனர். அத்தனை செல்வத்துடனுடன் அவர்களை முஸ்லிம்கள் கைப்பற்ற, அபுல் ஆஸ் மட்டும் தப்பி ஓடிவிட்டார்.

முஸ்லிம்களிடமிருந்து தப்பிவந்து உட்கார்ந்தவர் ஆற அமர யோசித்தார். பெரும் இக்கட்டில் தான் மாட்டியுள்ளது புரிந்தது. தன் பொருள் தொலைந்த துக்கத்தைவிட மக்காவிலுள்ள குரைஷிகள் பலரது பொருட்களை இழந்திருந்தது அவருக்குப் பெரும் துக்கமாய்த் தோன்றியது. "வந்தார்கள், அனைத்தையும் கைப்பற்றிச் சென்றார்கள், நான் மட்டும் சமயோசிதமாய்த் தப்பித்துவிட்டேன்" என்று மக்காவுக்குச் சென்று பதில் கூறினால், "நல்லவேளை உயிர் பிழைத்தாயே" என்றெல்லாம் அவர்கள் உச்சி முகரப் போவதில்லை. எனக்கும் நபியவர்களுக்கும் உள்ள உறவினை முடிச்சுப் போட்டு, "இதில் ஏதோ சூட்சமம் உள்ளது. நீ எங்களது பொருட்களைச் சரியான வகையில் காப்பாற்றவில்லை" என்றுதான் தூற்றுவார்கள். இத்தனைநாள் பாதுகாத்துவந்த நாணயம் அடிபட்டுப் போகும். அவப்பேறு ஏற்படும். என்ன சொன்னாலும் அவர்கள் நம்பப் போவதில்லை. வேறு வழியிருக்கிறதா என்று மாய்ந்து மறுகி யோசித்தார். ஒரே ஒரு வழிதான் தோன்றியது. வெற்றிக்கு உத்தரவாதமில்லை. ஆனால் முயற்சி செய்யலாம் என்று தோன்றியது. எழுந்து மணலைத் தட்டிவிட்டுக் கிளம்பினார்.

பகல் மறைந்து இருள் சூழ்ந்தது. மதீனாவிற்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்தார் அபுல் ஆஸ். 'முஸ்லிம்கள் கண்ணில் பட்டால் தொலைந்தோம்' என்ற பயங்கரமான சூழல். ஒருவழியாக இருளில் ஸைனபின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தார். சந்தித்து நடந்ததையெல்லாம் விவரித்தார். தன்னுடைய உயிருக்கு அடைக்கலம் வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுக்க ஏற்றுக்கொண்டார் ஸைனப். அரபுகள் மத்தியில் அது வழமை. ஒருவருக்கு மற்றொருவர் அடைக்கலமோ பாதுகாப்போ நல்குவதாக ஒப்புக் கொண்டால் அவரைச் சார்ந்த இதர மக்களும் கோத்திரத்தினரும் அதை ஏற்றுக்கொள்வார்கள். அவரது உயிர் பாதுகாக்கப்படும்.

மறுநாள் வைகறை நேரம். வழக்கம்போல் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டது. நபிகள் நாயகம் பள்ளியை அடைந்தார்கள். இகாமத் சொல்லப்பட்டு தோழர்கள் வரிசையாய் அணிவகுத்து நிற்க, நபியவர்கள் தொழுகையைத் துவங்கினார்கள்.

"அல்லாஹு அக்பர்!" முதல் தக்பீர் சொல்லப்பட்டுத் தொழுகை ஆரம்பமாக, அந்நேரம் பின்னாலிருந்த பெண்கள் பகுதியிலிருந்து அந்தக் குரல் ஒலி்த்தது.

"அனைவரும் கேட்டுக் கொள்ளுங்கள்! நான் முஹம்மதின் மகள் ஸைனப். அபுல் ஆஸ் பின் அர்ரபீஉக்கு பாதுகாப்பு அளிப்பதாய் நான் வாக்குறுதி அளித்துவிட்டேன். அதைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு நிறைவேற்றும்படிக் கேட்டுக் கொள்கிறேன்"

ஆச்சரியகரமான அச்செய்தி நபியவர்களையும் மற்றவர்களையும் எட்டி இலேசான அதிர்வு படர, தொழுகை தொடர்ந்தது!

* * * * *

தொழுகை முடிந்ததும் முஹம்மது நபி மக்களை நோக்கித் திரும்பி, "நான் செவியுற்றதை நீங்களும் செவியுற்றீர்களா?" என்று கேட்டார்கள்.

"ஆம்!" என்று பதில் வந்தது.

"எவனுடைய கரத்தில் எனது உயிர் இருக்கிறதோ அவன்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் அனைவரும் செவியுற்ற அதே நேரத்தில்தான் நானும் செவியுற்றேன்"

பிறகு கிளம்பி ஸைனபின் இல்லத்தை அடைந்த நபியவர்கள் தன் மகளிடம், "அபுல் ஆஸை கண்ணியத்திற்குரிய விருந்தாளியாகக் கவனித்துக் கொள்ளவும் ஸைனப். ஆனால் நீ அவருடைய மனைவியல்ல என்பதை இருவரும் நினைவில் கொள்ளவும்"

அதைக் கேட்டுக் கொண்ட ஸைனப் தன் தந்தையிடம் வேண்டுகோள் விடுத்தார், "இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களைத் திரும்ப அளிக்க ஏதாவது வழியிருக்கிறதா? இப்பொழுது இவருக்கு அளிக்கும் கனிவு நலம் விளைவிக்கும் என்றே தோன்றுகிறது"

கனிவில் மிகைத்தவர் நபியவர்கள். முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகள் எதையும் அவர்கள் நிறைவேற்றாமல் இருந்ததில்லை. "இறைவனுக்கு மாறு புரியாமல் இருக்கிறதா, அவன் சட்டத்தை மீறாமல் இருக்கிறதா", அது போதும் அவர்களுக்கு. அதற்கடுத்து அந்தக் கோரிக்கையை மேற்கொள்வதில் அவர்களுக்கு சிரமம் இருந்ததில்லை. அப்படிப்பட்ட அவர்களிடம் தன் பிரியத்திற்குரிய மகள் கேட்டால்? ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. கைப்பற்றப்பட்டவை தம் முன்னாள் மருமகனின் முன்னாள் சொத்துகள். இப்போது முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை. அவர்களைக் கேட்காமல் எதுவும் செய்ய இயலாது.

வணிகக் குழுவையும் பொருட்களையும் கைப்பற்றியிருந்த படைப்பிரிவினரிடம் சென்றார்கள். "அபுல் ஆஸ் என் மருமகனாயிருந்தவர் என்பதைத் நீங்கள் அறிவீர்கள். அவருடைய பொருட் செல்வம் உங்கள் கைவசம் வந்துள்ளது. நீங்கள் விரும்பினால், தானமளித்து விடலாம் என்று கருதினால் பெருந்தன்மையுடன் அவருடைய பொருட்களைத் திருப்பித் தந்துவிடலாம். நான் மகிழ்வடைவேன்! ஆனால் படையெடுப்பில் நீங்கள் கைப்பற்றிய உங்கள் பகையாளியின் செல்வம் என்ற வகையில் என் கோரிக்கையை மறுக்க உங்களுக்கு சகல உரிமையும் உள்ளது"

எவ்வித வற்புறுத்தலும் அற்ற தெளிவான நேரான கோரிக்கை அது.

"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவற்றை அவருக்குத் திருப்பித் தந்து விடுகிறோம்" என்று எவ்வித ஆட்சேபமும் இன்றி பதிலளித்துவிட்டனர் தோழர்கள். தங்களின் தலைவர் உத்தம நபிக்காக உயிரையும் துறக்க வரிசைகட்டி நின்ற அவர்களுக்குப் பொருட் செல்வம் என்ன பொருட்டு?

தனது பொருள் அனைத்தும் திரும்பக் கிடைத்த செய்தி கேட்டதும் விரைந்து வந்தார் அபுல் ஆஸ். தோழர்கள் அவரிடம் சாந்தமாய்ச் சில விஷயங்களைப் பேசினார்கள், நினைவூட்டினார்கள்.

"அபுல் ஆஸ்! நீ குரைஷியர்களில் உயர் குலத்தைச் சார்ந்தவன். நபியவர்களின் மருமகனாய் இருந்தவன். அவர் முதல் மனைவியின் சகோதரி மகன். நீ ஏன் இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை? நாங்கள் உன்னிடம் கைப்பற்றிய அனைத்தையும் திருப்பித் தந்துவிடுகிறோம். நீ எங்களுடன் மதீனாவிலேயே தங்கிவிடு"

கைப்பற்றப்பட்டப் பொருள்கள் திருப்பி அளிக்கப்பட்டன. அனைத்துப் பொருள்களையும் ஒட்டகங்களையும் தன் சேவகர்களையும் பெற்றுக் கொண்டவர் மதீனாவில் தங்கவில்லை. உடனே மக்காவிற்குக் கிளம்பினார். அங்கு அவரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் அவருடைய வர்த்தக நண்பர்கள்.

வந்து சேர்ந்த அபுல் ஆஸ் அவரவருக்கு உரிய பணத்தையும் பொருளையும் வெகு கவனமாய் முறையாக ஒப்படைத்தார். அனைத்துக் கணக்கையும் முடித்தார். பிறகு கையை உதறி துடைத்துக் கொண்டு எழுந்து குரைஷிகளிடம் கேட்டார், "அனைவரும் கவனமாய்க் கேளுங்கள். உங்களுக்குச் சேரவேண்டிய அனைத்தையும் நான் அளித்து விட்டேன் என்று நம்புகிறேன். நான் யாருக்கும் வேறு ஏதும் தரவேண்டியது பாக்கியுள்ளதா?"

"எதுவுமில்லை. எல்லாம் சரியாக இருக்கிறது. உன்னுடைய நாணயமும் உயர்குணமும் நாங்கள் அறியாததா அபுல் ஆஸ்?"

"அப்படியானால் நான் அனைவருக்கும் அனைத்து பாக்கியையும் செலுத்திவிட்டேன். இப்பொழுது கேட்டுக் கொள்ளுங்கள். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; முஹம்மது அவனுடைய தூதர் என்று சாட்சி பகர்கிறேன்"

அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார்கள் குரைஷிகள். "என்னது, நீயுமா?"

"ஆம் நான் மதீனாவிலேயே அவர்கள் மத்தியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் உங்களுடைய பொருட்களையும் பணத்தையும் ஏமாற்றி எடுத்துக் கொள்ளவே நான் அப்படிச் செய்தேன் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாதல்லவா? அதனாலேயே திரும்பி வந்தேன். இதோ உங்கள் கணக்கைச் சீர் செய்துவிட்டேன். இனி என்னுடைய உள்ளத்தில் எந்தக் குறுகுறுப்பும் இல்லை. தெளிவான சிந்தையுடன் என் மாற்றத்தை அறிவிக்கிறேன்"

பிறர் பொருளை அபகரிக்கும் ஆசை இல்லை என்பது ஒருபுறமிருக்க, அவற்றையெல்லாம் தன்னுடன் வந்த சேவர்கள் மூலமாகவோ நம்பிக்கைக்குரிய பிறர் மூலமாகவோகூட அவர் மக்காவிற்கு அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால் அதைப் பெறும் குரைஷிகள், 'கணக்கை அவர் சீர் செய்யவில்லை, ஏமாற்றிவிட்டார்' என்று அவதூறு பேசியிருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி எதற்கும் இடமளிக்கக் கூடாது என்பது அபுல் ஆஸின் தீர்மானம்.

பெரும் மனதிருப்தியுடன் மதீனா பயணமானார் அபுல் ஆஸ். மனம் மகிழ்ந்து உளமாற வரவேற்றார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஏறக்குறைய நான்காண்டுகள் முறிந்து போயிருந்த திருமண பந்தம் புதுப்பிக்கப்பட்டது. அவரை மீண்டும் தன் மகள் ஸைனபின் கணவனாய் அறிவித்தார்கள் நபியவர்கள்.

அதன் பின்னர் தன் தோழர்களிடம் நபியவர்கள் அடிக்கடிக் குறிப்பிடுவதுண்டு, "அவர் என்னிடம் உண்மையுரைத்தார், வாக்குறுதியளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்"

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

தோழர்கள் முகப்புதோழர்கள்-16 >

Comments   

அதிரை அஹ்மது
0 #1 அதிரை அஹ்மது 2010-10-26 14:25
அருமையான தொடராக்கம்! பிரபலமாகப் பேசப்படாத, வாசிக்கப்படாத நபித்தோழர்களாகத ் தேர்வு செய்து, அவர்களை அறிமுகம் செய்யும் அருமுயற்சி! தொடரட்டும் இப்பணி. இத்தொடரின் ஆசான் நூருத்தீன் பாராட்டிற்குரிய வர்.
Quote | Report to administrator
நூருத்தீன்.
0 #2 நூருத்தீன். 2010-10-26 23:45
மிக்க நன்றி. தங்களது வார்த்தைகள் ஊக்கமளிக்கின்றன . நம் முயற்சிகளை ஏற்றுக்கொண்டு நல்லருள் புரிய அலலாஹ் போதுமானவன்.
Quote | Report to administrator
MOHAMED
0 #3 MOHAMED 2010-10-27 11:29
இஸ்லாத்தின் பெயரால் பல கட்டுக்கதைகள் உலா வருகின்றன. ஆனால் நீங்கள் எழுதும் இந்த தொடர் ஆதாரப்பூர்வமானவ ைகளா என்பதை பற்றி தயவுசெய்து தெளிவுபடுத்தவும ்.
Quote | Report to administrator
mafas
0 #4 mafas 2010-10-27 19:02
thanks, enthe aakam mikka payanullathu, ovvoru nalum 1 tholar padi velividuveerhal anal mikka payanullathaha ameum
Quote | Report to administrator
நூருத்தீன்.
0 #5 நூருத்தீன். 2010-10-27 20:36
சகோ. முஹம்மத்.

இத்தொடருக்கு உதவும் நூல்களின் விபரங்களை கீழுள்ள சுட்டியில் தாங்கள் காணலாம்.

satyamargam.com/.../...
Quote | Report to administrator
Feroz ahamed
0 #6 Feroz ahamed 2010-11-10 09:23
assalamu alaikum
mashallah, zajakallah khair Mr.Noordeen , Kindly continue d same histories
Quote | Report to administrator
முஹம்மத் ஆஷிக்
0 #7 முஹம்மத் ஆஷிக் 2015-10-15 16:57
சகோ. DarulIslamfamil y Nooruddin அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் அருள்புரிவானாக. அமீன். உங்களின் இந்த #தோழர்கள் தொடர் மூலம்... வரலாற்றினை புரிந்து... நிகழ்வுகளை தெரிந்து... அதன் மூலம் ஹதீஸ்களில் ஏற்படும் பல தவறான புரிதல்களை சம்பவங்களுடன் தொடர்பு படுத்தி சரியாக்கி புரிந்து கொள்ள எங்களுக்கு உதவுகின்றன. தங்களின் மார்க்கத்தொண்டு இன்னும் பலரை சென்றடையவும் மேலும் சிறப்பாகவும் துஆ செய்கிறேன் சகோ.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்