முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

தோழர்கள்

Article Index

கடை மூடப்பட்டதுஅபூதர்தா

أَبُو الدَّرْدَاءِ، عُوَيْمِرُ بنُ زَيْدِ بنِ قَيْسٍ الأَنْصَارِيُّ

 

மதீனாவில் அவ்ஸ்,  கஸ்ரஜ் ஆகிய இரு பெரும் கோத்திரத்தினர் வாழ்ந்து வந்தனர். முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து வருவதற்குமுன் இந்த இரு கோத்திரத்தினருக்கும் இடையில் வெட்டுப்பழி, குத்துப்பழிதான் வாழ்க்கை. சண்டை, சண்டை ஓயாத சண்டை. போர் புரிந்து ஒருவரை ஒருவர் சகட்டுமேனிக்குக் கொன்றுபோட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மூன்று யூத கோத்திரத்தினரின் கைங்கர்யம் அது. யூதர்களுக்கு அதில் அரசியல் சுயநலம் இருந்தது. அந்த அரேபியர்கள் வேதம் அருளப்படாத, சிலை வணங்கும் மக்கள் எனும் இளக்காரம் இருந்தது. தங்களது ஆளுமையே உயர்ந்தோங்கி இருக்க வேண்டும் என்ற நயவஞ்சகம் இருந்தது. இப்படிப் பல.

நபிகள் மதீனா வந்து சேர, இந்த இரு கோத்திரத்தினரும் ஒவ்வொருவராய் இஸ்லாத்தில் இணைய, அதன் பின் அவர்கள் அனைவரும் அன்ஸாரீகள் என்ற பொதுப் பெயரில் அடையாளம் காணப்பட்டனர். நபிகள் ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனா வந்து சேர்ந்த அடுத்த நாளே அனைவரும் முஸ்லிமாகிவிடவில்லை. அகபா உடன்படிக்கை பற்றி முன்னர் பார்த்தோமே, அப்படி இரு அகபா உடன்படிக்கைகளின் போது இஸ்லாத்தை ஏற்றவர்கள், பின்னர் தோழர்களின் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மூலம் செய்தியறிந்து இணைந்தவர்கள் என்று பெரிய அளவில் முஸ்லிம்களின் சமூகம் ஏற்பட்டிருந்தாலும், இதர மதீனாவாசிகள் காலப்போக்கில் படிப்படியாகத்தான் இஸ்லாத்தை ஏற்றனர்.

மேற்சொன்ன கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த இளைஞர் உவைமிர். அவர் மதீனா நகரில் நல்லதொரு வியாபாரி. ஏதோ ஒரு கடை வைத்து, வியாபாரம் புரிந்து, நல்ல வருமானம் ஈட்டியபடி அவரது வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. மதீனாவில் இஸ்லாம் பரவ ஆரம்பித்து சாதகமான நிலை ஏற்பட்டபின், நபிகளும் மற்றும் மக்காவைச் சேர்ந்த தோழர்களும் மதீனா வந்தடைந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டிருந்தன. அப்போதும் உவைமிர் இஸ்லாத்தில் இணையவில்லை. தனது சிலை வணக்கத்தையே தொடர்ந்து கொண்டிருந்தார். இன்னம் சொல்லப் போனால் அவரது தெருவில் அவரும் அவரது குடும்பமும்தான் இஸ்லாத்தை ஏற்காதவர்கள்.

இந்நிலையில் ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டு, ரமளான் மாதத்தின்போது, முஸ்லிம்களுக்கும் மக்காவிலிருந்து படை திரட்டி வந்த குரைஷியர்களுக்கும் இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பத்ருப் போர் நிகழ்வுற்றது. ஆயிரத்துச் சொச்சம் குரைஷி வீரர்களை எதிர்க்க முந்நூற்றுச் சொச்சம் முஸ்லிம் வீரர்கள் பத்ருப் போருக்கு கிளம்பிச் சென்றதை வேடிக்கைப் பார்த்து வழியனுப்பிவிட்டு, தனது கடைக்கு வந்து வியாபாரத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் உவைமிர்.

எப்பொழுதும்போல் அன்றைய பொழுதும் விடிந்தது. உவைமிர் அதிகாலையிலேயே எழுந்து கொண்டார். அவரது வீட்டின் பிரதான பகுதியில் வீற்றிருந்த அவருக்குப் பிரியமான கடவுளின் சிலைக்குச் சென்று அன்றைய வழிபாட்டை ஆரம்பித்தார். அவரது கடையிலேயே மிகவும் உசத்தியாயுள்ள வாசனைத் திரவியத்தை எடுத்து அந்தச் சிலைக்கு அபிஷேகம் செய்தார். யமன் நாட்டிலிருந்து ஒருமுறை வந்திருந்த அவரின் வியாபாரத் தோழர் ஒருவர் உவைமிருக்கு விலையுயர்ந்த பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாய் அளித்திருந்தார். இப்பொழுது பட்டு சால்வை அன்பளிப்பாய் அளிப்பது போன்ற பழக்கம் அப்பொழுதே அரேபியாவில் இருந்திருக்கிறது போலும். அந்த அங்கியை எடுத்துச் சிலைக்குப் போர்த்தி பயபக்தியுடன் வழிபட்டார் உவைமிர்.

இதெல்லாம் முடிவதற்குள் பொழுது புலர்ந்து விட்டிருந்தது. சரி, இன்றைய வேலையைப் பார்ப்போம் என்று கடைக்குக் கிளம்பி வெளியே வந்தால் தெருவெங்கும் திருவிழா பரபரப்பு! முஹம்மது நபியும் அவரின் தோழர்களும் குரைஷிப் படைகளை வென்றுவிட்டு மதீனா திரும்பிக் கொண்டிருந்தனர். கூடவே போரில் கைப்பற்றப்பட்ட குரைஷிப் பிணயக் கைதிகளும். கண்ணெதிரே நடைபெற்றுக் கொண்டிருந்த அன்றைய தலைப்புச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் உவைமிர். ஆச்சரியமான ஆச்சரியம்! இருப்பினும் கடை திறக்க நேரமாகி விட்டது என்ற கவனம் வந்ததும், சரி, வேலையைப் பார்ப்போம் என்று ஒதுங்கி தன் கடைக்கு நடக்கத் துவங்கியவருக்கு சட்டென்று ஞாபகம் வர, வேகமாய்ப் பின்வாங்கி அந்த முஸ்லிம்களின் அணியில் இருந்த ஓர் இளைஞரைப் பிடித்தார்.

"அப்துல்லாஹ் இப்னு ரவாஹா பத்திரமாய் திரும்பி விட்டாரா?" என்று பதட்டமுடன் கேட்டார்.

அந்த இளைஞரும் இவர் சார்ந்திருந்த கஸ்ரஜ் கோத்திரம்தான். அவரிடமிருந்து உற்சாகமாய் பதில் வந்தது. "ஓ! அவருக்கென்ன? படு வீரமாய்ப் போரிட்டார். போரில் கைப்பற்றிய பெரும் சுமையுடன் பத்திரமாய் வந்து சேர்ந்து விட்டார்"

"அப்பாடா!" என்று திருப்தியாக இருந்தது உவைமிருக்கு. தனிச் சிறப்புமிக்க வரலாறு அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவினுடையது. இங்கு அது முக்கியமல்ல. ஆனால் இருவருக்கும் இடையில் நிலவிய நட்பு முக்கியம். அதை மட்டும் கண்டு விடுவோம். நட்பென்றால் நட்பு, அப்படியொரு நட்பு. இருவரும் சகோதர உறுதிமொழியெல்லாம் எடுத்துக் கொண்டனர். "நீயும் நானும் இன்றிலிருந்து அண்ணன்-தம்பி" என்பது போலான உறுதிமொழி. அப்படியொரு நடைமுறை அப்பொழுது அவர்களிடம் பழக்கத்தில் இருந்தது. மதீனா நகருக்கு இஸ்லாம் அறிமுகமாகிப் பரவ ஆரம்பித்ததும் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் உவைமிருக்கு அது சரிவரவில்லை. "எனக்கு என் மதமே போதும்" என்று இருந்து விட்டார். இருந்தாலும் அன்னியோன்ய நட்பு இருவருக்கும் இடையில் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அதனால்தான் அந்த அக்கறையான விசாரிப்பு.

உவைமிர் கடையைத் திறந்தார். வேலையாட்கள் வந்து சேர்ந்தார்கள். வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிக்க அன்றைய வியாபாரம் மும்முரமடைய ஆரம்பித்தது. வேலையில் மூழ்கிவிட்டார் உவைமிர். அதே நேரம் அவரது வீட்டில் ஒரு பிரளயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, அவர் அறியாமலேயே.

உடன்பிறவா சகோதரரான அப்துல்லாஹ் இப்னு ரவாஹா உவைமிர் மீது அளவற்ற பாசமும் அக்கறையும் கொண்டிருந்தவர். பலமுறை உவைமிரிடம் இஸ்லாத்தைப் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லிவிட்டார், ஆனால் உவைமிர்தான் அசைந்து கொடுக்கவில்லை. அது ஒரு பெரிய ஆற்றாமையாகவே இருந்தது அப்துல்லாஹ்விற்கு. உவைமிரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருமளவு நட்பு இருந்ததால் அன்று ஒரு திட்டத்துடன் உவைமிரின் வீட்டை நோக்கிச் சென்றார் அப்துல்லாஹ். அப்பொழுது அவர் வீட்டில் இருக்க மாட்டார் என்பது அவருக்குத் தெரியும்.

வீட்டு முற்றத்தில் உவைமிரின் மனைவி அமர்ந்திருந்தார். "தங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், அல்லாஹ்வின் சேவகியே!" என்று முகமன் கூறினார் அப்துல்லாஹ். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளதவர்களாய் இருப்பினும் அனைவரும் அல்லாஹ்விற்கு அடிமை தானே என்ற ரீதியில் பொதுவான, மரியாதையான வாழ்த்து அது.

"நும் மீதும் சாந்தி உண்டாவதாக, உவைமிரின் சகோதரரே!" என்று பதில் வந்தது.

"எங்கே உவைமிர்?"

"அவர் கடைக்குச் சென்றிருக்கிறார். திரும்பும் நேரம்தான். எப்பொழுதும் வந்து விடலாம்."

"நான் உள்ளே வந்து உவைமிருக்காகக் காத்திருக்கலாமா?"

"தாராளமாக!" என்று அனுமதியளித்தவர் தனது அறைக்குள் சென்று விட்டார். பின்னர் வேலை, குழந்தைகளை கவனிப்பது என்று அவரது கவனம் திரும்பி சுறுசுறுப்பாகிவிட்டார்.

அவர் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட அப்துல்லாஹ், உவைமிரின் பிரத்யேக சாமி சிலை இருந்த பூஜை அறையினுள் நுழைந்தார். தன்னுடன் ஒரு சிறு ரம்பத்தை மறைத்து எடுத்து வந்திருந்தவர், கிடுகிடுவென்று அந்த சிலையைத் துண்டு துண்டாக அறுக்க ஆரம்பித்துவிட்டார். "அல்லாஹ்வைத் தவிர வேறெதையும் வணங்குவது பொய்மையே" என்று சொல்லிக் கொண்டே அந்த சிலையை வெட்டி முடித்தவர், உவைமிரின் வீட்டை விட்டுக் கிளம்பி விட்டார்.

இதையெல்லாம் அறியாமல் பின்னர் பூஜையறையினுள் நுழைய நேரிட்ட உவைமிரின் மனைவி, கடவுள் சிலை துண்டு துண்டாக தரையில் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போய், கன்னத்தில் அறைந்து கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார். "எனக்குப் பேரழிவை ஏற்படுத்தி விட்டாயே இப்னு ரவாஹா, இப்படி. பேரழிவை ஏற்படுத்திவிட்டாயே!" என்று பலமான அழுகை, அரற்றல்.

சற்று நேரம் கழித்து வந்து சேர்ந்தார் உவைமிர். வந்து பார்த்தால், சிலை இருந்த அறைக்குப் பக்கத்து அறையில் அமர்ந்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார் அவர் மனைவி. உவைமிரைப் பார்த்ததும் அவரின் கண்களில் பயம் தோன்றியது.

"ஏன், என்ன ஆச்சு?" என்றார் உவைமிர்.

கண்ணீரும் ஆற்றாமையுமாகப் பேசினார், "நீங்கள் கடையில் இருக்கும் போது உங்கள் சகோதரர் அப்துல்லாஹ் வந்திருந்தார். பாருங்கள், கடவுள் சிலையை என்ன செய்திருக்கிறார் என்று"

சிலை, தரையில் மரத் துண்டுகளாய் உடைந்து கிடந்தது. உருவமாய் ஒன்றுமே பாக்கியில்லை. கோபத்தில் தலையே வெடித்துவிடும் போலாகிவிட்டது உவைமிருக்கு. என்னவாவது செய்து அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவை பழி வாங்கத் துடித்தது மனசு. கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு, அரற்றி, புலம்பி எல்லாம் முடிந்து மனம் ஒரு நிலைக்கு வந்த போதுதான் அவரது புத்திக்குச் சட்டென்று அது பட்டது. "இந்த சிலைக்கு என்று ஏதாவது ஒரு சக்தி இருந்திருக்குமானால் அது தன்னைத் தானே தற்காத்துக் கொண்டிருக்க வேண்டுமே!" அந்த எண்ணம் தோன்றியவுடன் நிதானமடைந்து மிகவும் யோசிக்க ஆரம்பித்தார். ஏதோ புரிந்தது. உடனே அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவை சந்திக்கக் கிளம்பி விட்டார் உவைமிர்.

இதுவரை சொல்ல விட்டுப்போன ஒரு சிறு தகவலையும் இங்குக் குறிப்பிட்டுவிட வேண்டும். உவைமிருக்கு ஒரு மகள் இருந்தார். அவர் பெயர் தர்தா.

Comments   

Basheer
-1 #1 Basheer 2010-05-11 16:00
இந்த தளத்திற்கு வருகை தருகின்ற மற்றும் தராத அனைவருக்கும் ஸலாம்.
படிக்கின்ற ஆர்வத்தில் "ஆக்க வரிசையை" கவனிக்கத் தவறி விட்டேன்.
என்னடா இது? பாதியில் விட்டு விட்டார்களா? என எண்ணினேன்.
பின்னர் தான் கவனித்தேன், "சும்மா பக்கம் பக்கமா பிரித்து மேயப்பட்டிருக்க ிறது" (பாராட்டிற்காக சொல்லப்பட்டது-த வறெனில் மன்னிக்கவும்) என்று.
அல்லாஹ் கட்டுரை ஆசிரியருக்கும் தளத்தினருக்கும் இதை படித்தவர்களுக்க ும் படித்து உணர்ந்தவர்களுக் கும் படித்து உணர்ந்து அதன்படி நடக்க முயன்றவர்களுக்க ும் அருள் புரிவானாக!
திருநபி (ஸல்) அவர்களின் வழி நடந்த இவர்கள் தான் தூய்மையான சமுதாயத்தவர்கள் . ரலியல்லாஹு அன்ஹு! வ ரலூ அன்ஹும்!
Quote | Report to administrator
aliya
0 #2 aliya 2010-05-15 16:43
masha allaஹ் மிக சிறந்த பணி ஆற்றி வருகிறீர்கள்.கட ்டுரை ஆக்கம் மெய் சிலிர்க்க வைக்கிறது.alham dulillah
Quote | Report to administrator
Allahvin Adimai
0 #3 Allahvin Adimai 2010-05-20 15:03
Alhamdulillah , This Tholargal Episode increases our takwa , all praise to allah, may allah forgive ur n all my muslim ummah's sins..
zajak allah khair, assalamu alaikum
Quote | Report to administrator
நெல்லை சிராஜ்
0 #4 நெல்லை சிராஜ் 2010-05-22 18:00
தோழர்கள் என்ற தலைப்பில் நபித் தோழர்களுடைய வரலாறுகளை கூறுவதுடன் மூல ஆதாரங்களையும் சேர்த்து வெளியிட்டால் இன்ஷா அல்லாஹ் இன்னும் சிறப்பாக அமையும். வெளியீடுவீர்கள் என நம்புகிறேன்
Quote | Report to administrator
ahmadullah.s
0 #5 ahmadullah.s 2011-08-29 10:45
அபுதர்தா (ரலி) அழுதது இன்றுள்ள நம் சமுதாயத்திற்கு பொருந்தும்.

சிரியா நாட்டிற்கு மேற்கே அமைந்துள்ளது சைப்ரஸ் (Cyprus) தீவு. முஸ்லிம்களுடனான போரில் தோற்றிருந்த ரோமப் படையினர் அத்தீவிற்குத் தப்பிச் சென்று அதனைத் தங்களது கப்பற்படையின் தலைமையகமாக ஆக்கிக் கொண்டு போர்க் கருவிகளையெல்லாம ் சேமித்து வைத்திருந்தனர். உமர் இப்னுல் கத்தாப் இறந்து போவதற்கு முன்னரே அதனைக் கைப்பற்ற முஆவியா திட்டமிட்டிருந் தார். அப்பொழுது அது நடைபெறவில்லை. பின்னர் உதுமான் கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் சைப்ரஸ் மீது படையெடுப்பதற்கு அனுமதியளித்தார் . கடல் தாண்டி நடைபெறவிருந்த போர் அது. பாலையிலும் நிலத்திலும் போர் புரிந்திருந்த முஸ்லிம் படைகளுக்கு இது நிச்சயமாய் மிகப் பெரிய சவாலான படையெடுப்பு. அதனால் யாரையும் வற்புறுத்தி படையெடுப்பில் சேர்க்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தார் உதுமான். ஆனால் முக்கியமானவர்கள ் அடங்கிய வீரர்கள் குழுவொன்று அதற்கு ஓடோடி முன் வந்தது. அப்துல்லாஹ் பின் ஃகைஸ் தலைமையில் படகில் ஏறி கடலில் கிளம்பிய படையில் அபூதர் அல் கிஃபாரீ, ஷத்தாத் இப்னு அவ்ஸ், உபாதா இப்னு ஸாமித், அவருடைய மனைவி உம்மு ஹரம் பின்த் மில்ஹான் ஆகியோருடன் அபூதர்தாவும் முக்கிய வீரர். வெற்றிகரமாய் முடிவுற்ற அப்போர் சைப்ரஸை முஸ்லிம்கள் வசமாக்கியதால் அதன் பின்னர் கான்ஸ்டன்டினோபி ல் (Constantinople ) நோக்கி முஸ்லிம் படைகள் முன்னேற வாசலை அகலத் திறந்து கொடுத்தது. ஹிஜ்ரீ 28-29ஆம் ஆண்டு அப்போர் நடைபெற்றது.

ஏராளமான பொருட்கள் போரில் கைப்பற்றப்பட்டன . நிறைய செல்வம் முஸ்லிம்கள் வசமாகின. அதையெல்லாம் கண்ட அபூதர்தா அழ ஆரம்பித்து விட்டார். ஜுபைர் இப்னு நாஃபிர் என்பவர், "என்ன அபூதர்தா, அல்லாஹ் இஸ்லாத்திற்கு சக்தியும் வெற்றியும் அளித்திருக்கும் போது என்ன காரணத்திற்காக அழுகிறீர்?" என்று ஆச்சரியமாகக் கேட்டார்.

"ஜுபைர்! அல்லாஹ்வோ வெற்றிமேல் வெற்றி அளிக்கிறான். வெற்றியும் ஆட்சியும் மேலோங்கி, அதனால் கிடைக்கும் வெகுமதியில் மனம் மயங்கி, இறைவனுக்குரிய வணக்கத்தில் முஸ்லிம்கள் அலட்சியமாகிவிட் டால் எத்தகைய அற்பர்களாய் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் மாறிவிடுவார்கள் ?"

‘நேற்று மாட்சிமையுடன் ஆட்சி புரிந்து கிடந்தவர்கள் எல்லாம் இறைவனை அறியாமல் மறந்து, அகங்காரத்தில் இருந்ததால் இன்று முஸ்லிம்களிடம் தோற்றார்கள். அதைப் போன்ற மனோநிலைக்கு முஸ்லிம்களும் ஆளானால் இன்றைய வெற்றி அவர்களுக்கு நாளை என்னவாகும்?’ என்ற எண்ணம் ஏற்பட்டபோது அழுதார் அபூதர்தா. நியாயமான அழுகை! ஆச்சரியமான தீர்க்க தரிசனம்!
Quote | Report to administrator
நஸீர்தீன்
0 #6 நஸீர்தீன் 2013-10-09 22:06
அன்புள்ளம் கொண்ட அபுதர்தாவின் எளிய வாழ்க்கையும் தூர சிந்தனையும் ஈமான் உறுதியும் நாம் அனைவருக்கும் மாபெரும் படிப்பினை. இந்த மாமேதையின் வரலாற்றை படிக்காதவர்கள் உடனடியாக படித்து தமது நிலைமையை நன்கு உணர்ந்து கொள்ளலாம். சபாக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துருவ நட்சத்திரங்களாக வும் தனிச் சிறப்பான பண்புகளாலும் வார்க்கப்பட்டவர ்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். இந்த கட்டுறையை தொகுத்து வழங்கிய அல்லாவின் அடியானுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்து இது போன்ற பணியில் தொடர்ந்து இருக்க கிருபை செய்வாயக. எங்கள் அனைவரது பாவங்களையும் மன்னிக்க அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.
Quote | Report to administrator
ஜெலால்தீன் நஸீர்தீன்
0 #7 ஜெலால்தீன் நஸீர்தீன் 2013-10-09 22:08
சகாபாக்களின் வரலாறு எமக்கு பெரும் பாடங்களை கற்பித்து எமது வாழ்கையை நேரான வழியில் நேரத்தியாக கடத்துவதற்கு வழி வகை செய்கின்றது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்