முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

தோழர்கள்

ரபீஆ பின் கஅப் அல்-அஸ்லமீ

رَبِيعَةُ بْنُ كَعْبٍ الأَسْلَمِيُّ

 

மதீனாவிற்கு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புலம்பெயர்ந்ததும் பள்ளிவாசல் ஒன்று கட்டினார்கள். அந்தப் பள்ளிவாசலின் பின்புறத்தின் வடபகுதியில் சற்றே உயர்ந்த ஓர் வெற்றிடம் இருந்தது. அதன் பெயர் அஸ்ஸுஃப்பா.

 

பள்ளிவாசலின் பின்புறச் சுவரை ஒட்டிய திண்ணை, மேலே நிழலுக்கான ஒரு தடுப்பு - அதுதான் அஸ்ஸுஃப்பா. இங்கு அனாதரவான முஸ்லிம் ஆண்கள் தங்கி, வாழ்ந்து வந்தார்கள். தொடக்கத்தில் மக்காவை விட்டு வெளியேறி, மதீனா வந்திருந்த முஹாஜிர்கள்தாம் அங்குத் தங்கியிருந்தனர். பின்னர், வசதி வாய்ப்பில்லாத மற்ற முஸ்லிம்கள் சிலரும் அங்கு வந்து தங்கிவிட்டார்கள். அனைவரும் ஏழைகள். குடும்பம், உறவு என்று எதுவும் அவர்களுக்கு அமைந்திருக்கவில்லை. ஸுஃப்பாதான் அவர்களுக்குத் திண்ணை, பள்ளிக்கூடம், வீடு எல்லாமே. அவர்களெல்லாம் "அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா - أصحاب الصفة" என்று அழைக்கப்பட்டனர் - அதாவது திண்ணைத் தோழர்கள்.

சுவர் போன்ற தடுப்பு என்று எதுவும் இல்லாததால் எப்பொழுதும் காயும் வெயில், எப்பொழுதாவது பெய்யும் மழை, குளிர்காலத்தின் கடுங்குளிர், புழுதிக் காற்று என்று அனைத்துப் பொழுதும் அங்குதான் அவர்கள் வாழ்க்கை. மானம் மறைக்கும் அளவு மட்டுமே உடை. மற்றவர்கள் அவ்வப்போது கொண்டு வந்து அளிக்கும் உணவுதான் ஆகாரம் என்று அங்கு இஸ்லாத்தைப் பயின்று கொண்டிருந்தனர் அவர்கள். முஹம்மது நபியும் மற்றத் தோழர்களும் உணவு கிடைத்தால் இவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். வேறு சிலர் அவ்வப்போது பேரீச்சம் பழக்கொத்தைக் கொண்டுவந்து அங்கு நடப்பட்டிருக்கும் ஒரு தூணில் மாட்டிவிட்டுச் செல்வார்கள். இவர்களும் ஆளுக்கு ஒன்றோ, இரண்டோ சாப்பிட்டுப் பசியாறிக் கொள்வார்கள்.

சில சமயங்களில் உணவென்று எதுவும் இல்லாமல் நாட்கள் கழியும். பசியில் அவர்களது வாட்டம் எந்தளவு இருக்குமென்றால், தொழுகையின்போது மயக்கமுற்றும் விழுந்துவிடுவார்கள். சரி இப்படியெல்லாம் வாடும் இவர்கள், தொழுகை, வழிபாடு என்பது போலான ஓர் ஆன்மிக வாழ்க்கையை மட்டும் சார்ந்தவர்களோ, துறவி போன்றவர்களோ என்றால் அப்படியெல்லாம் இல்லை. போர் என்று அறிவிப்பு வந்தால், "படைக்கு முந்தி" என்று துள்ளியெழுந்து வந்து நின்றார்கள்.

அந்தத் திண்ணைப் பல்கலையில் பயின்று வந்த மேன்மக்கள் ஏராளம். நமக்குப் பரிச்சயமான கப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்களில் ஒருவர். பிலால், அபூஹுரைரா போன்ற புகழ்பெற்ற தோழர்களும் ஸுஃப்பாவாசிகள்தாம். பிற்காலத்தில் முதலாவது கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அபூபக்ரு (ரலி) அவர்களின் மகன் அப்துர் ரஹ்மானும் இந்தத் திண்ணையில் ஒருகாலத்தில் வாழ்ந்தவர்; வளர்ந்தவர். இவர்களுக்கு நபியவர்களின் அண்மை பெரும் பேறாய்த் தோன்றியது. விண்ணிலிருந்து இறங்கிய ஞானத்தை, முஹம்மது நபியின் நேரடிப் பரிமாறுதலில் பசி தீர்த்துக் கொண்ட சிறப்பு விருந்தினர்கள். அதற்காகக் காலமெல்லாம் அங்கேயே கிடந்து உழலத் தயாராயிருந்த மாபெரும் உன்னதர்களின் கூட்டம் அது.

பின்னர் காணப்போகும் மற்றத் தோழர்களின் வாழ்க்கையை உணரவும் அவசியமென்பதால்தான் இங்கு ஸுஃப்பா பற்றி இந்த அறிமுகம். ஆக, இத்தகையப் பல்கலையின் மற்றொரு முக்கிய மாணவர் ரபீஆ பின் கஅப்.

அப்போது இளவயதுச் சிறுவர் ரபீஆ. முதல் பார்வையில் வெகுசிலரை நமக்குப் பிடித்துப் போகும். அதேபோல் சிலரைப் பார்க்கும்போதே தகுந்த காரணமின்றி நமக்கு வெறுப்பேற்படும். முதன் முதலாய் முஹம்மது நபியைப் பார்த்ததுமே கவர்ந்திழுக்கப்பட்டார் ரபீஆ. உள்ளத்தை இஸ்லாமிய ஆன்மீகம் ஆக்கிரமிக்க, அவருக்கு உள்ளம் கவர்ந்த தலைவன் ஆகிப் போனார் முஹம்மது நபி. வேறு எது பற்றிய சிந்தனையும் இல்லை. சதா சர்வ காலமும் அல்லாஹ்வின் தூதரைப் பற்றிய எண்ணமும் பிரமிப்புமே அவர் மனதை ஆக்கிரமித்திருந்தன. அந்தளவுக்கு அந்தத் தலைவர்மீது அவரது மதிப்பும் மரியாதையும் மிகைத்தது. அந்த அவஸ்தையை அவரால் தாங்க முடியவில்லை. மனம் இறுதியாகக் கூறியது:

"ஏன் இந்தத் தொல்லை?. அவருக்குப் பணிவிடை செய்ய உன்னை ஒப்படைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையை ஏன் நீ இலேசாக்கிக் கொள்ளக் கூடாது? போ அல்லாஹ்வின் தூதரிடம். பணிவிடை செய்யும் ஊழியனாய் உன்னை நீ அவருக்கு அர்ப்பணிப்பதாய்ச் சொல். அவர் மட்டும் ஒப்புக்கொண்டால், அவரைக் கண்ணாரக் கண்டுகொண்டே இருக்கும் ஆனந்தம் உனக்குக் கிட்டும். அவரது அன்பையும் அரவணைப்பையும் அடையலாம். இம்மை-மறுமையின் நற்பேறு உனதாகும்".

வருணிக்க எழுதப்பட்ட வார்த்தைகள் அல்ல இவை. வரலாற்றுக் குறிப்புகள் அவரது வாழ்க்கையை அவரது வார்த்தைகளிலேயே பதிவு செய்து வைத்துள்ளன.

இந்த எண்ணம் தோன்றியவுடன் தாமதிக்கவில்லை ரபீஆ. நபியவர்களை விரைந்து சென்று சந்தித்து, தன் எண்ணத்தை வெளியிட்டார். பேராவலிலும் நம்பிக்கையிலும் அவர் மனது படபடத்தது. நம்பிக்கை வீண் போகவில்லை, ஏற்றுக் கொண்டார் முஹம்மது நபி. உலகின் தலைசிறந்த பல்கலையின் மாணவனாக நேரடி அனுமதி கிடைத்துவிட்டது ரபீஆவிற்கு. சரி, தங்கிப் பயில விடுதி? கிடைத்தது திண்ணை. திண்ணைத் தோழரானார் ரபீஆ பின் கஅப், ரலியல்லாஹு அன்ஹு!

நிழல்போல் தொடர்வது என்று உவமைக்குச் சொல்வோமே, அப்படி நபிநிழலாகிப் போனார் ரபீஆ. நபியவர்களுடன் நெருக்கமாகத் தங்கி, எங்கெல்லாம் அவர் சென்றாரோ அப்படியே இவர் பின்தொடர்ந்தார். நபியவர்கள் இவரைப் பார்த்தாலே போதும்; இவர் எழுந்து அவரிடம் ஓடினார். அவரது எந்த அலுவலாக இருந்தாலும் சரி, ஏதாவது செய்ய வேண்டுமென்றாலும் சரி, விரைந்து சென்று உதவுவது ரபீஆவின் இயல்பாகி விட்டது. சுருக்கமாக, தன்னை முழுக்க முற்றும் அர்ப்பணித்துக் கொண்ட பணிவிடை.

வேறு எதுபற்றிய சிந்தனையும் இல்லை. உலகம் பற்றிய அக்கறை இல்லை. அல்லாஹ்வும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இரத்தமும் சதையுமாய் தனது கண்ணெதிரே நடமாடும் நபியும்தான் அவரது உடல், ஆவி, மூச்சு அனைத்திலும் வியாபித்திருந்தனர்.

தேடித் தேடி பணிவிடை செய்வதாக நாள்முழுவதும் கழியும். நாள் முடிந்து இரவின் இறுதி இஷாத் தொழுகை முடிந்து நபியவர்கள் வீட்டிற்குச் சென்று விடுவார்கள். அடுத்து என்ன செய்வது? முதலில் திரும்பி விடலாம் என்று நினைப்பார். பின்னர் அவரது மனதில் அந்த எண்ணம் தோன்றும்:

"ரபீஆ ஏன் போகிறாய்? அனேகமாய் இரவில் அவருக்கு ஏதாவது உதவி தேவைப்படலாம்" அவ்வளவுதான். இந்த எண்ணம் தோன்றியவுடன் நபியவர்களது வீட்டு வாசலிலேயே அமர்ந்து விடுவார். இறைவனின் மாபெரும் நபி, அரண்மனை, மாளிகை, சேவகர்கள் என்பதெல்லாம் எதுவுமே இல்லாமல் தனது எளிய குடிலுக்குள் புகுந்து கொள்ள, வாயிற்படியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு தோழர்.

தனது அந்த அனுபவத்தை ரபீஆ விவரிக்கும் போது, "நபியவர்கள் இரவில் எழுந்து நின்று தொழுது கொள்வார்கள். சில வேளைகளில் அவர்கள் சூரா அல்-ஃபாத்திஹா ஓதுவதைக் கேட்பேன். அதை அவர்கள் இரவின் பெரும்பாலான பகுதியில் தொடர்ந்து ஓதிக் கொண்டே இருப்பார்கள். சிலவேளை 'தன்னைப் புகழ்ந்தவனை அல்லாஹ் செவிமடுத்தான்' என்பதை சூரா அல்-ஃபாத்திஹாவை விட அதிகமாக உச்சரிப்பார்கள், அதைக் கேட்டுக் கொண்டே அப்படியே அசந்து உறங்கி விடுவேன்"

இப்படியாக அவரது காலம் கழிந்து கொண்டிருந்தது.

தனக்கு உபகாரம் செய்பவர்களுக்கு அதைவிட அதிக அளவில் திருப்பி நல்லுபகாரம் செய்வது நபியவர்களின் இயல்பு. தனது நன்றியை அவர்கள் அப்படித்தான் வெளிப்படுத்துவார்கள். ரபீஆவின் சேவையைப் பாராட்டி எப்படி வெகுமதி அளிப்பது? ஒருநாள் அவரிடம் வந்தார்கள் முஹம்மது நபி.

"ரபீஆ!" என்று அழைக்க,

"இதோ உங்கள் சேவைக்கும் கீழ்படிதலுக்கும் தயாராக உள்ளேன் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு அளவற்ற நற்பேறுகளை நல்குவானாக!" என்று பதிலளித்தார் ரபீஆ.

சற்று கவனிக்க வேண்டும். வெறும் பெயர் சொல்லி அழைக்கிறார் நபி. "செவிமடுத்தேன், அடிபணிந்தேன்" என்று ஓடி வருகிறார் தோழர். குர்ஆனின் வாசகங்கள் மூச்சாய் ஓடிக்கொண்டிருந்த இதயங்கள் அவை.

"நான் உனக்கு அளிக்கும்படியாய் ஏதாவது கேளேன்" என்றார் முஹம்மது நபி.

சற்று சிந்தனையில் மூழ்கியவர், "எனக்குச் சற்று அவகாசம் அளியுங்கள் அல்லாஹ்வின் தூதரே. எனக்கு என்ன தேவை என்று யோசித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்குத் தெரிவிப்பேன், இன்ஷா அல்லாஹ்!"

"நல்லது"

அந்தச் சமயத்தில் ஏழ்மையான நிலையில் இருந்த இளைஞர் ரபீஆ. வீடு, மனைவி, சொத்து, சுகம் என்று எதுவும் கிடையாது. சக ஏழை முஸ்லிம்களுடன் ஸுஃப்பாவில் வாழ்ந்து கொண்டிருந்தார். மக்கள் இவர்களை "இஸ்லாத்தின் விருந்தினர்கள்" என்று அழைப்பார்கள். யாராவது முஸ்லிம் கொஞ்சம் பணம் கொண்டு வந்து தானமாய் நபியவர்களிடம் அளித்தால், அதை அவர்கள் இந்தத் திண்ணைத் தோழர்களின் செலவினங்களுக்கு அளித்து வந்தார்கள். ஏதாவது அன்பளிப்புக் கிடைத்தால் மட்டும், அதில் சிறிதை,  தான் எடுத்துக் கொண்டு மீதம் அனைத்தையும் இவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள்.

அதனால் ரபீஆவிற்குத் தோன்றியது. ஏதாவது கொஞ்சம் பணமோ, பொருளோ நபியவர்களிடம் கேட்போம். கிடைத்தால், ஏழ்மையிலிருந்து மீண்டு, மற்றவர்கள்போல் பணம், மனைவி, குழந்தைகள் என்று வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

ஆனால், மீண்டும் மனம் அதை மறுபரிசீலனை செய்தது. பிறகு சொன்னது:

"உன்னை நீயே அழித்துக் கொள்ளப் போகிறாய் ரபீஆ! இந்த உலக வாழ்க்கை - அது தானாக ஓடிவிடும். இந்த வாழ்க்கையில் செல்வம் என்று உனக்குப் பங்கு ஒன்று நிர்ணயிக்கப்பட்டிருந்தால், நீ கேட்டாலும் சரி; கேட்காவிட்டாலும் சரி, அல்லாஹ் உனக்கு அளித்து விடுவான். உனக்கு நன்றாகத் தெரியும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விற்கு எவ்வளவு பிரியமானவர் என்று. அவர் கோரினால் அவன் நிராகரிக்கப் போவதில்லை. ஆகவே நீ அவரிடம் என்ன கேட்க வேண்டுமென்றால், அல்லாஹ் உனக்கு மறுமையின் வெகுமதியில் பங்கு அளித்தருள அவரைப் பிரார்த்திக்கச் சொல்ல வேண்டும்"

ஆஹா! இதுதான் சரி என்று அவருக்குப் பட்டது. சொற்ப காலத்துக்கான அற்ப செல்வமெல்லாம் வேண்டாம், அனைத்தையும் "அங்கு" வாங்கிக் கொள்வோம் என்ற இந்த முடிவு அவருக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. தெளிவாக இருந்தது. நேராக நபிகளாரிடம் சென்றார்.

அவர் ஒரு முடிவெடுத்து வந்திருப்பது நபிகளாருக்குப் புரிந்தது "என்ன கேட்க விரும்புகிறாய் ரபீஆ?" என்று கேட்டார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். என்னை சொர்க்கத்தில் தங்களின் தோழனாக அவன் ஆக்கி அருள வேண்டும்"

புரிகிறதா? அந்த வேண்டுகோளின் பேராசை புரிகிறதா? உலக இச்சை, பட்டுப் போயிருக்கட்டும். மறுமையில் எத்தகைய நம்பிக்கை இருந்திருந்தால், அந்த மறுமையிலும் அந்த மாமனிதரின் அண்மைதான் சொர்க்க மகா சொர்க்கம் என்று மனதில் நேசம் இருந்திருந்தால் இப்படி ஒரு வேண்டுகோள் பிறக்கும்?

முஹம்மது நபி சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு,

"உனக்கு வேறு ஏதும் வேண்டுகோள் இல்லையா ரபீஆ?"

"இல்லை அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களிடம் கேட்டதிலிருந்து எனது மனதை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை"

"அப்படியானால் சரி. நீ வேண்டியதை உனக்கு நான் பெற்றுத்தர, நீ எனக்கு உதவ வேண்டும். அதிகமதிகம் நஃபில் தொழுகையும் ஸஜ்தாவும் நீ புரிய வேண்டும்” என்று நபிகளாரிடமிருந்து இறுதி பதில் வந்தது.

பெருமையும் மகிழ்வும் ஏற்பட்டது ரபீஆவிற்கு! அந்த நொடியிலிருந்து உறுதியான இறைவழிபாடு என்பது அவரது சுபாவமாகவே ஆகிவிட்டது. அவரது இலக்கெல்லாம் ஒன்று. ஒன்றே ஒன்று! இப்பொழுது இந்த உலகில் நபியவர்களுடன் பணிவிடை செய்து அண்மிக் கிடக்கும் பாக்கியம் கிடைத்ததுபோல் மறுஉலகிலும் அவரது தோழமை கிடைக்கவேண்டும், அவ்வளவே! வெறும் சொர்க்கம் அல்ல. சிறப்புச் சொர்க்கம்.

சில நாட்களோ, மாதமோ கழிந்தன. முஹம்மது நபி அவரிடம் கேட்டார்கள். "உனக்குத் திருமணம் புரிந்து கொள்ள ஆசை இல்லையா, ரபீஆ?"

"தங்களுக்கு சேவை செய்வதிலிருந்து எனது கவனத்தைத் திருப்பும் எதையும் நான் விரும்பவில்லை அல்லாஹ்வின் தூதரே! தவிர ஒரு மணப்பெண்ணுக்கு மணக்கொடை அளிக்க, அவளை வாழவைக்க என்று என்னிடம் பணமும் இல்லை" என்று பதிலளித்தார் ரபீஆ. முஹம்மது நபி அமைதியாக இருந்து விட்டார்கள்.

"என்னது? திருமணம் செய்து கொள்ள மாப்பிள்ளை எதற்குப் பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும்?" என்று கேட்கக்கூடாது. வியாபாரிகளுக்குத் திருமணம் விளங்குவதில்லை.

மீண்டும் சில நாட்கள் கழிந்தன. மீண்டும் முஹம்மது நபி அவரிடம் கேட்டார்கள். "உனக்குத் திருமணம் புரிந்து கொள்ள ஆசை இல்லை, ரபீஆ?"

ரபீஆவும் அதே பதிலை மீண்டும் கூறிவிட்டார். ஆனால் பின்னர் தனிமையில் இருக்கும் போதுதான் இவ்விதம் நபியவர்களிடம் மறுதலித்துப் பேசியிருக்கக் கூடாதோ என்று ரபீஆவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டது. அது அவருக்கு மிகுந்த வெட்கத்தை அளித்தது. மனதுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

"அட ரபீஆ! உனது ஆன்மீகத்திற்கும் இவ்வுலகிற்கும் மறுமைக்கும் எது சிறந்தது என்று நபியவர்கள் உன்னைவிடச் சிறப்பாய் அறிய மாட்டார்களா? உன்னுடைய ஏழ்மையும் பொருளாதார நிலைமையும்கூட அவர்கள் அறிந்ததுதானே. ஆம். அல்லாஹ்வின் மீது ஆணையாக! மீண்டும் ஒருமுறை நபியவர்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி பரிந்துரைத்தால் நிச்சயம் கட்டுப்படுவேன்" என்று இறுதியில் அவரது மனம் சமரச உடன்படிக்கை செய்து கொண்டது.

மீண்டும் சில நாட்கள் கழிந்தன. மீண்டும் முஹம்மது நபி அவரிடம் கேட்டார்கள்: "உனக்குத் திருமணம் புரிந்து கொள்ள ஆசை இல்லையா, ரபீஆ?"

"நிச்சயமாய் திருமணம் செய்து கொள்கிறேன் அல்லாஹ்வின் தூதரே! ஆனால் நான் இன்று இருக்கும் நிலையில் யார் எனக்குப் பெண் தருவார்கள்?" என்று கவலை தெரிவித்தார் ரபீஆ.

ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சொல்லி, அவ்வீட்டிலுள்ள ஒரு குறிப்பிட்ட பெண்ணைச் சொல்லி, "அவர்கள் வீட்டிற்குப் போ. அல்லாஹ்வின் தூதர் உங்களின் இந்தப் பெண்ணை எனக்குத் திருமணம் செய்து தரும்படி கட்டளையிட்டார் என்று கூறு" என்று தெரிவித்தார்கள் முஹம்மது நபி.

மிகவும் கூச்சமாய் இருந்தது ரபீஆவிற்கு. மெதுவாய் அவர்களின் வீட்டிற்குச் சென்றார். தயக்கமாய்த் தெரிவித்தார். "அல்லாஹ்வின் தூதர் என்னை அனுப்பி வைத்தார்கள். உங்களின் இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்துத் தருவீர்களாம்" என்று அந்தக் குறிப்பிட்ட பெண்ணின் பெயரைத் தெரிவித்தார்.

"அந்தப் பெண்ணையா!?" என்று அவர்கள் ஆச்சரியமாகக் கேட்க, "ஆம்" என்றார் ரபீஆ.

"அல்லாஹ்வின் தூதர் எங்களது வீட்டில் சிறப்பு விருந்தினராய் வரவேற்கப்படுபவர். அதேபோல்தான் அல்லாஹ்வின் தூதரின் தூதரும். அல்லாஹ்வின் மீது ஆணையாக, இந்தத் தூதர் ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பப்பட மாட்டார்” என்று உற்சாகப்பட்ட அந்தக் குடும்பத்தினர் உடனே அந்தக் குறிப்பிட்ட பெண்ணை இவரது மனைவியாக்கி, திருமண உடன்படிக்கை எழுதிவிட்டனர்.

நம் மொழியில் சொல்வதென்றால், பஞ்சத்தில் அடிபட்டவரைப் போன்ற ஒரு மகா ஏழை, வீட்டிற்கு வருகிறார். நபி சொன்னார் என்று பெண் கேட்கிறார். உடனே அந்த வீட்டினரோ "நீதானய்யா மாப்பிள்ளை" என்று திருமண உடன்படிக்கையே எழுதிவிட்டார்கள். அப்படிக் கட்டுப்பட்டுக் கிடந்தார்கள் தம் தலைவரின் சொல்லுக்கு.

மாப்பிள்ளையோ சீர் தருவார்களா, செனத்தி தருவார்களா என்று யோசிக்கவில்லை, "எப்பேறுபெற்ற தலைவனின் எப்பேறுபெற்ற தொண்டன் நான்", "எவ்வளவு வரதட்சனை எண்ணி வைப்பார்கள்" என்று கேட்கவில்லை. தான் பெண்ணுக்கு மணக்கொடை தரப் பணமில்லையே என்று விசனப்படுகிறார். மனைவியாகி வரும் பெண்ணுக்கு எப்படி உணவளிப்பது என்றுதான் கவலைப்படுகிறார்.

வேகமாக நபியவர்களிடம் திரும்பிய ரபீஆ, "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மிகச் சிறந்த குடும்பத்தைக் கண்டுவிட்டுத் திரும்பி வந்திருக்கிறேன். என்னை நம்பினார்கள், அன்பொழுக வரவேற்றார்கள், அவர்கள் வீட்டுப் பெண்ணை எனக்கு மணமுடிக்க உடனே திருமண உடன்படிக்கையும் எழுதித் தந்து விட்டார்கள். நான் இப்பொழுது மணக்கொடை பணத்திற்கு என்ன செய்வேன்?" என்றார்.

புரைதா இப்னுல் ஹஸிப் என்பார் பனூ அஸ்லம் எனும் கோத்திரத்தின் தலைவர். ரபீஆவும் அஸ்லமீதான். அந்த புரைதாவை வரவழைத்தார்கள் முஹம்மது நபி. அவர் வந்து சேர்ந்தார்.

"புரைதா! ரபீஆவிற்குத் திருமணம் செய்ய வேண்டும். தயவுசெய்து ஒரு பேரீச்சம்பழ விதை அளவிற்கான தங்கம் ஏற்பாடு செய்து கொடு" என்று தெரிவித்தார்கள்.

அப்படியே ஆகட்டும் என்று அவரும் ஏற்பாடு செய்து கொண்டு வந்து கொடுத்தார். நபியவர்கள் அதை ரபீஆவிடம் கொடுத்து, "இதை அவர்களிடம் எடுத்துச் செல். அவர்களின் மகளுக்கு இது நீ தரும் மஹர்-மணக்கொடை என்று ஒப்படை".

வாங்கிக் கொண்டு அவர்களிடம் சென்றார் ரபீஆ. அந்தப் பேரீச்சம்பழ விதை அளவிற்கான தங்கத்தைக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட அவர்களோ அகமகிழ்ந்தார்கள். "இருந்தாலும் ரொம்ப அதிகம் இது. தவிரவும் தரமான தங்கமாகவும் தோன்றுகிறதே"

நபிகளாரிடம் திரும்பி வந்த ரபீஆ கூறினார். "இத்தகைய பெருந்தன்மையான குடும்பத்தை நான் சந்தித்ததே இல்லை. ஏதோ தேற்றி எடுத்துப் போய்க் கொடுத்த அந்த மிகச் சிறிய அளவு தங்கத்தை அவர்கள் அப்படி சிலாகிக்கிறார்கள். மிகவும் அதிகமாம். தரமான தங்கமாம். அது இருக்கட்டும். இப்பொழுது எனக்கு அடுத்த கவலை வந்து விட்டது. எப்படி நான் திருமண விருந்து அளிக்கப் போகிறேன் அல்லாஹ்வின் தூதரே?"

மீண்டும புரைதாவிடம் பேசினார்கள் நபியவர்கள். பணம் ஏற்பாடு செய்தார் புரைதா. பிறகு அதைக் கொண்டு ஒரு நல்ல கொழுத்த செம்மறியாட்டுக்கடா ஒன்றை வாங்கி வந்தார் ரபீஆ. பிறகு நபியவர்கள் அவரிடம் கூறினார்கள்: "ஆயிஷாவிடம் சென்று வீட்டில் எவ்வளவு வாற்கோதுமை இருக்கிறதோ கேட்டு வாங்கி வா"

அதன்படி அவர் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அம்மையாரிடம் செல்ல, அவர்கள், "அந்தக் கூடையில் ஏழு சாஉ(படி) வாற்கோதுமை இருக்கிறது, எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, இதைத் தவிர உமக்கு அளிக்கும் வகையில் வீட்டில் வேறு எதுவும் உணவு இல்லை" என்றார்.

ஒரு சாஉ என்பது தோராயமாய் இரண்டு கிலோ 350 கிராம். ஆக மாப்பிள்ளை ரபீஆ கிடாவையும் பதினாறேகால் கிலோ வாற்கோதுமையும் எடுத்துக் கொண்டு மணப்பெண் வீட்டிற்கு உற்சாகமாய்ச் சென்றார். அவர்கள், "கோதுமையைக் கொடுங்கள், நாங்கள் வேண்டுமானால் ரொட்டி சுட்டுத் தருகிறோம். ஆனால் நீங்கள்தான் ஆட்டை அறுத்து இறைச்சி எடுத்துக் கொண்டு வரவேண்டும்" என்றார்கள். ரபீஆவும் அவர் கோத்திரத்தின் உறவினர்கள் சிலரும் சென்று ஆட்டை அறுத்து, இறைச்சி சமைத்து எடுத்துவர, விருந்தொன்று பிரமாதமாய் தயாரானது. அளவற்ற நெகிழ்ச்சி ஏற்பட்டது ரபீஆவிற்கு. ஒன்றுமே இல்லாமல் கிடந்தவருக்கு விருந்தினர்களையெல்லாம் அழைத்து விருந்தளிக்கும் அளவு ரொட்டியும் இறைச்சியும் கிடைத்ததென்றால்? இல்லாதவனுக்குத்தான் அதன் அருமை தெரியும்.

இதையெல்லாம் படித்துவிட்டு, "தலைகீழ்க் கலாச்சாரமய்யா அரபு நாட்டுத் திருமணமுறை" என்ற நினைப்புத் தோன்றினால், சற்றேனும் சிந்திக்க முடிந்தால் புரியும் - தலைகீழாக மாறி, கெட்டுக் குட்டிச்சுவராகிப்போய்க் கிடப்பது நம் கலாச்சாரம்தான் என்று.

நபியையும் விருந்திற்கு அழைத்தார் ரபீஆ. அன்புடன் கலந்து கொண்ட முஹம்மது நபி, பின்னர் அவருக்கு அன்பளிப்பொன்றும் அளித்தார்கள். ஒரு சிறு அளவு நிலம். அந்த நிலம் அபூபக்ருஸ் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹுவின் நிலத்திற்குப் பக்கத்தில் அமைந்திருந்தது. அது அன்பளிப்பாய்க் கிடைத்தது ரபீஆவிற்கு. வறுமையில் கிடந்த அவருக்கு இவை அனைத்தும் பெரும் செல்வமாய்த் தோன்றியது. உள்ளார்ந்த அகமகிழ்வும், ஏதோ பெரும் செல்வந்தனாகி விட்டதைப்போன்ற உணர்வும் அவருக்கு ஏற்பட்டது. இனிதே இல்லறம் துவங்கினார் ரபீஆ.

சிலநாள் கழிந்திருக்கும். ஒரு பிரச்சனை ஏற்பட்டது ரபீஆவிற்கு. அந்த நிலத்தில் ஒரு ஈச்சமரம் இருந்தது. அபூபக்ரின் நிலமும் ரபீஆவின் நிலமும் அருகருகே இருந்ததால் அந்த மரம் யார் நிலத்திற்கு உரியது என்பது பிரச்சனையாகி விட்டது. சர்வேயர், எண் இட்ட எல்லைக்கல் எதுவும் இல்லாத காலம் அது. ரபீஆ அந்த மரம் தன்னுடையது எனக் கூற, அபூபக்ரோ அது தன்னுடைய நிலத்தில் உள்ளது என்று வாதிட்டார். விவாதம் சற்றுச் சூடேற, அபூபக்ரு வாய் தவறி ரபீஆவைப் பற்றிச் சுடுசொல் ஒன்று கூறிவிட்டார். அவ்வளவுதான். ஆனால் வாயிலிருந்து வார்த்தை வெளியே விழுந்த அடுத்த கணமே தன் தவறு புரிந்து விட்டது அபூபக்ருக்கு.

"ஆமாம்! வாய் தவறி சொல்லிவிட்டேன். அதற்கு என்ன இப்பொழுது? யாருடைய மாமனார் நான்? அவரிடம் எனக்குள்ள செல்வாக்கு என்ன தெரியுமா?" என்றெல்லாம் பெருமை பேசி அகலவில்லை அபூபக்ருஸ் ஸித்தீக். பிரச்சனை முற்றிலும் திசைமாற ஆரம்பித்து விட்டது.

"இதோ பார். நான் உன்னை இகழ்ந்து ஒரு சொல் சொல்லிவிட்டேன். நீயும் என்னை ஒருமுறை இகழ்ந்து சொல்லிவிடு போதும். பழி தீர்ந்து விடும். நமக்குள் நாளை பிரச்சனை இருக்காது" அந்த 'நாளை' மறுநாள் அல்ல, மறுமையின் நாளை.

அபூபக்ரின் தரம், அவரது பெருமை, அவரது தியாகம், நபிகளிடம் அவருக்குள்ள சிறப்புத் தகுதி இதெல்லாம் அறியாதவரா ரபீஆ. ஏதோ, கோபத்தில் வாய் தவறி சொல்லிவிட்டார். அதற்காக, அவரை அதேபோல் நாமும் திட்டுவதாவது? "ம்ஹும்! அதெல்லாம் முடியாது" என்று மறுத்துவிட்டார் ரபீஆ.

"என்னைத் திட்டப் போகிறாயா இல்லையா?"

"முடியாது!"

"அப்படியென்றால் நான் நபிகளிடம் முறையிட வேண்டியிருக்கும்" என்று கிளம்பிவிட்டார் அபூபக்ரு. எதற்கு? தான் திட்டியதற்கு ரபீஆ பதிலுக்குத் திட்டி கணக்கைச் சரிசெய்ய மறுக்கிறார், அவருடைய கணக்கை நேர் செய்து தன்னைக் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுவிக்க மறுக்கிறார். இது அநியாயமல்லவா? என்று நியாயம் கேட்பதற்கு.

நபிகளைக் காண்பதற்கு அபூபக்ரு விறுவிறுவென்று நடக்க, அவருக்குப் பின்னால் ரபீஆ வேகவேமாய் ஓட, அவருக்குப் பின்னால் ரபீஆவின் கோத்திரத்தினர் சிலர் கோபத்துடன் பின்தொடர, "நல்ல வேடிக்கை இது" என்பதுபோல் அந்த ஈச்சமரம் மட்டும் காற்றில் தன் கீற்றுகளை அசைத்துக் கொண்டிருந்தது.

"அவர்தான் முதலில் உம்மை இகழ்ந்து பேச ஆரம்பித்தவர். இப்பொழுது அவரே உம்மை முந்திக்கொண்டு உம்மைப் பற்றி நபியவர்களிடம் முறையிடச் செல்கிறாரா?" என்று ஆவேசமுடன் கேட்டனர் ரபீஆவின் உறவினர்கள்.

நின்றார் ரபீஆ. அவர்களை நோக்கித் திரும்பினார். "அமைதியாய் இருங்கள்! நீங்கள் யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள் தெரியுமா? அவர் அஸ்-ஸித்தீக். பெருமதிப்பிற்குரியவர். உயர்வானவர். அவர் உங்களை எல்லாம் திரும்பிப் பார்ப்பதற்குள் ஓடிவிடுங்கள். நீங்களெல்லாம் அவருக்கு எதிராய் எனக்கு ஆதரவளிக்கக் கூட்டம் திரட்டி வருகிறீர்கள் என்று அவருக்குத் தெரிந்தால் கோபம் ஏற்படலாம். அவர் கோபப்பட்டால், நபிகளும் கோபப்படலாம். அத்துடன் அழிந்தேன் நான். ஏனெனில் நபிகளை அவமதித்து விட்டேன் என்று அல்லாஹ்வின் கடுங்கோபம் என் தலைமேல் விழலாம்"

தங்களின் தலைவனையோ, தங்களது குழுவையோ ஆதரிப்பதாக நினைத்துக் கொண்டு, பாட்டில்களை வீசி, வாகனங்களில் ஆயுதங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு ஊர் உலா வரும் உத்தியெல்லாம் அறியாத சுத்தமான போர்க்கள வீரர்கள் அவர்கள். "சரி சரி. நீரே போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வாரும்" என்று சொல்லிச் சென்று விட்டார்கள்.

அபூபக்ரு சென்றார். நபிகளைச் சந்தித்தார். நடந்ததெல்லாம் கூறி முறையிட்டுவிட்டு அழுதார். அழுதது மரத்தை மீட்டுத் தரச் சொல்லி அல்ல; "ரபீஆவை என்னைத் திட்டச் சொல்லுஙகள்" என்று கோரிக்கையிட்டு.

வந்து சேர்ந்தார் ரபீஆ. நபிகள் கேட்டார்கள், "ரபீஆ, உனக்கும் அஸ்-ஸித்தீக்கிற்கும் இடையில் என்ன பிரச்சனை?"

"அல்லாஹ்வின் தூதரே! அவர் என்னை இகழ்ச்சியாகப் பேசியதைப்போல், நான் அவரைப் பேச வேண்டுமாம். நான் மறுத்துவிட்டேன்"

"நீ நன்று செய்தாய் ரபீஆ! உன்னை இகழ்ந்தவரை பதிலுக்கு நீ இகழ்ந்து பேசாதே! மாறாய், அல்லாஹ் அபூபக்ரின் பிழை பொறுக்கட்டும் என்று சொல்லிவிடு"

உடனே உரைத்தார் ரபீஆ: "அல்லாஹ் உமது பிழை பொறுக்கட்டும் அபூபக்ரே!"

கண்கள் குளமாகியிருந்தன அபூபக்ருக்கு. "அல்லாஹ் உமக்கு மாபெரும் கைம்மாறு வழங்கட்டும் ரபீஆ! அல்லாஹ் உமக்கு மாபெரும் கைம்மாறு வழங்கட்டும்" என்று அழுதுகொண்டே சென்றார் அபூபக்ரு.

திண்ணைப் பள்ளியின் பட்டதாரியல்லவா? குணம் மிகைத்தது. அந்த மரத்தைவிட உயர்ந்து உயர்ந்து நெடுந்தோங்கி நின்றது.

ரலியல்லாஹு அன்ஹு!

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!

< தோழர்கள்-1 | தோழர்கள்-2 | தோழர்கள்-3 | தோழர்கள்-4 | தோழர்கள்-5 | தோழர்கள்-6 >

Comments   

ummu maryam
0 #1 ummu maryam 2010-04-28 17:21
மாஷா அல்லாஹ். கண்கள் குளமாகிவிட்டன. இந்த நல்லவர்கள் போல் இறைவன் நம்மையும் ஆக்க வேண்டும்.
Quote | Report to administrator
abdul kadar
0 #2 abdul kadar 2010-05-01 09:58
நபித தோழர்கள் வரலாறு படிக்க படிக்க படிப்பினைகள் தருகின்றன. அல்ஹம்துலில்லாஹ ்.
Quote | Report to administrator
liyakath
0 #3 liyakath 2010-05-02 11:59
இந்த சமூகம் இந்த மாதிரி வரலாருகளை படித்திருந்தால் ஒருவருக்கொருவர் போட்டியும் பொறாமையும் குறோதமும் வராது. இது போன்ற வரலாறுகலை தொடர்ந்து எலுதவும்.

ஜஜாக்கல்லாகு கைரன்

மா சலாம்

லியாகத்.
Quote | Report to administrator
Hubaibu
0 #4 Hubaibu 2010-05-11 10:31
Masha Allah ! My eyes got wet to read the entire history..

Each and every incident is lesson to us..May Allah grant us to follow them in our Day to day's life...

جزاك اللهُ خيراً‎
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்