முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

தோழர்கள்

வெட்ட ... வெட்ட

ஹபீப் பின் ஸைத் பின் ஆஸிம் அல்-அன்ஸாரீ

حَبِيبِ بْنِ زَيْد بْن عَاصِم الأنْصَارِيّ

யத்ரிப் நகரில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. தந்தை, தாய், இரு மகன்கள் என்ற அளவான குடும்பம். அந்தக் குடும்பம் ஒரு குழுவுடன் மக்காவிற்கு யாத்திரை சென்றது. மொத்தம் 73 ஆண்களும், 2 பெண்களும் கொண்ட குழு அது.

 

மக்காவிற்குச் சென்று புனித யாத்திரை முடித்த அந்தக் குழுவினர் இரண்டாம்நாள் ஊர் உறங்கிய நள்ளிரவு நேரத்தில் அகபா பள்ளத்தாக்கில் முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஓர் இரகசிய சந்திப்பு நிகழ்த்தினர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு அது. அதன் முடிவில் நபியவர்களுக்கும் அந்த யத்ரிப் குழுவினருக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. தங்களது "உயிர், பொருள், செல்வம்" அனைத்திற்கும் மேலாய் நபியை ஏற்றுக் கொள்வதாகவும், காப்பாற்றுவதாகவும் அவர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் செய்து கொடுத்தனர்.

அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த அந்தக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அந்த சத்தியப் பிரமாணத்தில் கலந்து கொண்டனர். ஸைத் இப்னு ஆஸிம், அவரின் மனைவி உம்மு உமாரா (أُمّ عُمَارَةَ)எனும் நுஸைபா பின்த் கஅப் அல்-மாஸினிய்யா, அவர்களின் இரு மகன்கள் அப்துல்லாஹ் இப்னு ஸைத் மற்றும் ஹபீப் இப்னு ஸைத் (ரலியல்லாஹு அன்ஹும்). அப்பொழுது ஹபீப் இப்னு ஸைத் இளவயதுச் சிறுவர்.

-o-

அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு என்பதாலும் பின்னர் மற்றத் தோழர்களின் வரலாற்றைப் படிக்கும் போதும் தேவைப்படும் என்பதாலும் இந்த உடன்படிக்கையின் பின்னணியைச் சுருக்கமாக இங்குத் தெரிந்து கொள்வோம்.

நபியவர்களுக்கு வஹீ இறங்கிய நாளிலிருந்து இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து ஏறக்குறைய பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. ஆரம்பித்த நாளாய் பல வாக்குவாதங்கள், தொடர் இன்னல்கள், கொடுமைகள், அக்கிரமம் என அனைத்தையும் முஸ்லிம்கள் அனுபவித்து வந்த நிலை. இஸ்லாத்தை மக்காவினருள் ஒரு குறிப்பிட்ட அளவு ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு குழுவினர், கொடுமைகளிலிருந்து தப்பிக்க, நபியவர்களின் அனுமதியுடன் அபிஸீனியாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொண்டு சென்று விட்டிருந்தனர். இந்நிலையில் நபியவர்களுக்குப் பலவகையிலும் பாதுகாப்பும் ஒத்துழைப்பும் அளித்து வந்த பெரிய தந்தை அபூதாலிபும் இறந்து விட்டார். தொடர்ந்து நபியவர்களுக்கு உறுதுணையாகவும், அன்பும் பாசமும் ஆறுதலும் அளித்து வந்த ஒப்பற்ற மனைவி கதீஜா அம்மையாரும் இறந்து போனார். மிகவும் துக்கமான சூழ்நிலை ஏற்பட்டது.

குல ஆதரவு அளித்து வந்த அபூதாலிப் இறந்து போனதால், குரைஷிகளின் பகைமை, விரோதம், அக்கிரமம் உச்சத்தை அடைந்து விட்டிருந்தது. சரி மக்கா போகட்டும், அக்கம் பக்கத்து ஊர்களிலாவது சத்தியத்தை எடுத்துச் சொல்வோம் என்று தாயிஃப் நகருக்குச் சென்றால், அங்கிருந்தவர்கள அதைவிட மூர்க்கமாய், கல்லெறிந்து, இரத்தம் வழிந்தோடத் துன்புறுத்தி நபியவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

ஆதரவு, அணுசரனை என்பதெல்லாம் முடிந்து போய்விட்டிருந்த சூழ்நிலை. மீதிமிருந்த மக்கத்து மக்களும் இணங்கி வருவதாய் இல்லை. இந்நிலையில் ஆண்டு தோறும் மக்காவிற்கு யாத்திரை வரும் வெளியூர்க்காரர்களிடம் நபியவர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வம், அரசாங்கம் என்பதெல்லாம் இல்லை அவர்களது நோக்கம். இணை வைப்பிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். ஏக இறைவனை, அந்த ஒரே இறைவனை ஏற்று, மறுமையில் அவர்கள் ஈடேற்றம் பெறவேண்டும். போதும், அது போதும். இது மட்டுமே நபியவர்களின் நோக்கம்.

அப்பொழுது மக்காவில் சிலை வழிபாடு நடந்து கொண்டிருந்தாலும், நபி இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் காலத்தில் துவங்கிய, மக்கா நோக்கிச்செல்லும் பல்வேறு பகுதி மக்களின் யாத்திரை மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது, 'புனிதப் பயணம்' என்ற பெயரில் - சிலைகளுக்கு. அனைத்து வெளியூர்களிலிருந்தும் மக்கள் ஆண்டுதோறும் வந்து அங்குக் குழுமுவார்கள். சிலைகளுக்கு வழிபாடு நிகழ்த்துவார்கள். பற்பல சிலைகள் நிறுவப்பட்டிருந்த கஅபாவைச் சுற்றி வருவார்கள்.

அப்படி வெளியூரிலிருந்து வருபவர்களிடம் நபியவர்கள் தமது பிரச்சாரத்தை நிகழ்த்தி வந்தார்கள். அதையும் சும்மா விடவில்லை குரைஷிகள். அந்த மக்களிடம் அவரைப் பற்றிய அவதூறு சொல்லி அந்த வெளியூர் மக்கள் நபியவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளாதபடி கவனித்துக் கொண்டார்கள். ஆனாலும் அவர்களில் சிலருக்கு உண்மை புரியாமலில்லை.  ஏகத்துவச் செய்தியின் சத்தியம் உணராமலில்லை. தங்களது ஊருக்குத் திரும்பிச் சென்றவர்கள் அதைத் தம் மக்களிடம் சொல்ல, மிக இலேசாய் அந்தந்தக் கோத்திரத்திற்கும் செய்தி பரவி வரலாயிற்று. மதீனாவில் இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு ஒரு மெல்லிய அறிமுகம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஒரு புனித யாத்திரை மாதத்தில் யத்ரிபிலிருந்து வந்திருந்த பன்னிரெண்டு ஆண்கள் கொண்ட குழுவொன்று நபியவர்களை அகபா பள்ளத்தாக்கில் சந்தித்தது. அவர்களுக்கு மேற்சொன்ன சிலர் மூலமாய் முஹம்மது பற்றியும் அவரது நபித்துவம் பற்றியும் அறிமுகம் இருந்தது. நபியவர்களுடன் சந்திப்பு நிகழ்த்தி, அவர்கள் பேசினார்கள். உண்மை உணர்ந்தார்கள். அடுத்து? உடனே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அவருடன் உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். அது, முதல் அகபா உடன்படிக்கை. முதல் பிடிமானம்.

யத்ரிப் திரும்பப் பயணப்பட்ட அவர்களுடன் முஸ்அப் இப்னு உமைர் எனும் தன் தோழரை நபியவர்கள் அழைத்து, "அங்கு மற்றவர்களுக்கும் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்" என்று அனுப்பி வைத்தார்கள். யத்ரிப் சென்ற முஸ்அப் இப்னு உமைர் (ரலி) நிகழ்த்திய பிரச்சாரங்களுக்கு நல்ல பலன் இருந்தது. யத்ரிப் நகரில் இஸ்லாம் பரவலாய் அறியப்பட்டு மேலும் பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். மக்காவிலோ, தாயிப் நகரிலோ இருந்ததைப் போலான எதிர்ப்பெல்லாம் இல்லாமல் யத்ரிப் நகரம் இஸ்லாமிய விதை, விருட்சமாய் தழைத்தோங்க வளமான விளைநிலமாய்ப் பண்பட்டிருந்தது தனி வரலாறு. வேறொரு சந்தர்ப்பத்தில் தேவைப்பட்டால் அதைப் பார்க்கலாம். அதைப் போலவே முஸ்அப் இப்னு உமைர் எனும் தோழரின் வாழ்க்கையும் நெகிழ்வூட்டும் வரலாறு. அதையும் பிறகு பார்க்கலாம் - இன்ஷாஅல்லாஹ். இப்பொழுது இந்த அத்தியாயத்தின் நாயகனான ஹபீப் இப்னு ஸைதிடம் வந்து விடுவோம்.

-o-

யத்ரிபில் இஸ்லாம் இலேசாய்ப் பரவலடைந்து, அதனை ஏற்றுக்கொண்டவர்கள் உள்ளடங்கிய 75பேர் கொண்ட அந்தக் குழுவினர்தாம் நபியவர்களை அகபாவில் சந்தித்தார்கள். மேற்சொன்ன உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களுள் பலர், நபியவர்களை இரண்டாவது தடவையாகச் சந்திக்கின்றனர். இது, இரண்டாவது அகபா உடன்படிக்கை என்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இஸ்லாமிய வரலாற்றில் திருப்புமுனையை நிகழ்த்திய உடன்படிக்கை. இந்த உடன்படிக்கையின்  மற்ற அம்சங்கள் ஒருபுறம் இருக்க, முக்கியமானது "உயிர், பொருள், செல்வம்" அனைத்தையும், கொண்ட கொள்கைக்காக தரத்தயார் என்ற சத்தியம் மட்டுமே நாம் இங்கு கவனிக்கத் தேவையானது. ஏனென்றால், போஸ்டர், நோட்டீஸ், தேர்தல் வாக்குறுதி போன்ற வெற்று வாசகம் போலில்லை அது. சொன்னார்கள்; வாழ்ந்து காட்டினார்கள்! ரலியல்லாஹு அன்ஹும்!

அந்தக் காரிருள் இரவில் முஹம்மது நபிகளின் கரத்தில் தன் சிறு கைகளை வைத்து, தானும் சத்தியப் பிரமாணம் செய்தார் ஹபீப் இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு. அந்த நொடிமுதல் நபியும் இஸ்லாமும் தன் பெற்றோர்கள், தன் ஆவி ஆகியனவற்றைவிட மேலானதாகி விட்டது அந்தச் சிறுவருக்கு. அதைத் தொடர்ந்து இஸ்லாமும் வீரமும் செழித்தோங்கும் வீட்டில் வளரும் நல் வாய்ப்பும் அமைந்தது ஹபீபிற்கு.

நபியவர்கள் மதீனா புலம்பெயர்ந்தபின் நிகழ்வுற்ற முதல் இரண்டு முக்கியப் போர்கள் பத்ரும் உஹதும். இவற்றில் ஹபீப் பங்களிக்கும் வாய்ப்பு அமையவில்லை. ஏனெனில் ஆயுதங்கள் ஏந்திப் போரிடும் அளவிற்கான பருவத்தில்கூட அப்போது அவர் இல்லை. ஆனால் பத்ருப் போரில் அவரின் தாய்மாமன் அப்துல்லாஹ் இப்னு கஅப் அல் மாஸினீ (ரலி) எனும் வீரர் கலந்து கொண்டார்.

பின்னர் பத்ருப் போருக்குப் பிறகு ஹபீபின் தந்தை ஸைத் இப்னு ஆஸிம் இறந்து விட்டதால், ஹபீபின் தாயார், கஸிய்யா இப்னு அம்ரு என்பவரை மறுமணம் செய்து கொண்டார். தம்பதியர் இருவரும், ஹபீபின் மூத்த சகோதரர் அப்துல்லாஹ் இப்னு ஸைதும் உஹதுப் போரில் கலந்து கொண்டார்கள்.

"கலந்து கொண்டார்கள்" என்ற அளவிலான சிறு வாக்கியத்தில் முடித்துவிட முடியாத தனி வீர வரலாறு உம்மு உமாரா எனும் நுஸைபாவினுடையது. களத்தில் ஆயதம் ஏந்தி சாகசம் புரிந்த அந்த வீராங்கனை அம்மையாரின் வரலாறும் ஒரு தனிக் கதை. இன்ஷாஅல்லாஹ் அதையும் தனியாகப் பிறகு பார்ப்போம். ஆக, இத்தகைய வீரம் செழித்த குடும்பத்தின் மத்தியில் ரொட்டி, பால், பேரீச்சம்பழத்துடன் வீரமும் சமவிகிதத்தில் உண்டு வளர்ந்து வரலானார் ஹபீப் இப்னு ஸைத் அல் அன்ஸாரி.

விடலைப் பருவம் கடந்தபின், உஹதுப் போருக்குப் பிறகு நிகழ்வுற்ற இதரப் போர்களில் ஹபீபும் கலந்து கொள்ள ஆரம்பித்து விட்டார். அதிலெல்லாம் அவரது சிறப்புத் தன்மையும், சுயநலமென்று எதுவுமேயில்லாமல் இறை நம்பிக்கையாளர்களின் ஓர் அங்கத்தினராய் அவர் நிகழ்த்தி வந்த தியாகங்களும் அவரது புகழையும் பெருமையையும் உயர்த்திக் கொண்டே வந்தன. அவையெல்லாம் ஒரு தியாகச் சிகரத்தை நோக்கி அவரை இட்டுச் செல்லப் போவதை அப்பொழுது யாரும் அறிந்திருக்கவில்லை.

உத்பா இப்னு கஸ்வான் வரலாற்றை சென்ற அத்தியாயத்தில் வாசிக்கும்போது முஸைலமா என்றொரு பெயர் தட்டுப்பட்டதல்லவா? இங்கும் பின்னர் நாம் காணவிருக்கின்ற மற்ற சில தோழர்களின் வரலாற்றிலும் அவன் ஒரு முக்கியப் பாத்திரமாய் விளங்கப் போகிறான். எனவே இப்பொழுது இங்கு அவனைப் பற்றி நாம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது.

ஹிஜ்ரீ 9-ஆம் ஆண்டு. இஸ்லாம் அரேபிய தீபகற்பத்தில் பலமாய் வேரூன்றியிருந்தது. ஒரு பலமான அரசாங்கமாய் மதீனாவில் நிறுவப்பெற்றிருந்தது. அரேபியாவின் பல பாகங்களிலிருந்தும் பல கோத்திரத்தினரின் குழுக்கள் மதீனா வந்து, நபியவர்களைச் சந்தித்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, கற்றுக் கொண்டு, சென்று கொண்டிருந்தனர்.

நஜ்துப் பகுதி ஞாபகம் இருக்கிறதா? நுஐம் பின் மஸ்ஊத் வரலாற்றில் பார்த்தோமே, அந்த நஜ்திலிருந்து பனூ ஹனீஃபா எனும் கோத்திரத்தின் குழுவொன்று மதீனா வந்தது. அவர்களின் ஒட்டகங்கள், பொருட்கள் ஆகியனவற்றைக் காவல் காக்க, பாதுகாக்க, கூடவே ஒருவன் வந்திருந்தான்.  அவன் பெயர் முஸைலமா இப்னு ஹபீப் அல் ஹனஃபி. வந்தவர்கள் நபியவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தபோது கர்ம சிரத்தையாய் அனைத்தையும் காவல் காத்துக் கொண்டிருந்தான் அவன்.

சந்திக்க வந்தவர்களையெல்லாம் முஹம்மது நபி அன்புடன் வரவேற்று, தக்க மரியாதை அளித்து, நல்லுபசாரம் புரிந்தார்கள். அவர்களும் அகமகிழ்வோடு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். தங்கள் மக்கள் அனைவரும் இஸ்லாத்தினுள் புகுவதாகவும் தெரிவித்தார்கள். கிளம்பும்போது அவர்களுக்கெல்லாம் அன்பளிப்பாக வழிச்செலவுக்குப் பணம் அளித்து, காவலுக்கு வந்திருந்த முஸைலமாவையும் நினைவில் கொண்டு அவனுக்கும் பணம் கொடுத்தனுப்பினார்கள் நபியவர்கள். முஸைலமாவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். நஜ்து திரும்பியது குழு.

ஊர் திரும்பும் வழியெல்லாம் என்ன யோசித்தானோ தெரியவில்லை. நஜ்து வந்து சேர்ந்ததும், கை, கால், முகமெல்லாம் கழுவிக் கொண்டு, "இன்றிலிருந்து நானும் ஒரு நபி. அல்லாஹ் குரைஷிகளுக்கு முஹம்மதை நபியாக அனுப்பி இருப்பதைப் போல பனூ ஹனீஃபாவாகிய உங்களுக்கு அல்லாஹ் என்னை நபியாக்கி இருக்கின்றான்" என்று அறிவித்து விட்டான் முஸைலமா! "இது நல்ல வேடிக்கையாக இருக்கிறதே!" என்று இலேசாகச் சொல்லிவிட முடியாது. குருட்டாம் போக்கில் ஒரு பொய் சொல்லிவிட்டு அதைத் தொடர்ந்து பெரியதொரு ஆட்டம் ஆடித்தான் ஓய்ந்தான், இல்லை ... ஒழிக்கப்பட்டான், அவன்.

இங்கு ஒன்று கவனிக்க வேண்டும். அரேபியாவில் பரவியிருந்த ஒவ்வொரு குலத்தினருக்கும் தத்தமது குலப்பெருமை மிக உசத்தி. அதற்காக எதுவும் செய்யத் தயாராயிருந்த மக்கள் அவர்கள். இஸ்லாம் தோன்றி அவர்கள் மனதில் அது படர்ந்தபின்தான் குலப்பெருமை ஒழிக்கப்பட்டது. அனைவரும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் ஒன்றெனக் கருதப்பட்டனர்.  ஆனால், அப்பொழுதுதான் புதிதாய் இஸ்லாத்தை ஏற்றுத் திரும்பியிருந்த பனூ ஹனீஃபா மக்கள் மனதில் குல, கோத்திரப் பெருமையெல்லாம் இன்னம் பத்திரமாக அப்படியே இருந்தது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டான் முஸைலமா. எனவே, "ஹனீஃபா குலத்துக்குத் தனி நபி இருப்பது நமக்குப் பெரும்பெருமை! அதற்கு ஆதரவளிப்பது நம் குலக் கடமை!" என்று அவன்பின் அணி திரண்டு விட்டனர்.

அவர்களில் ஒருவன் கூறினான், "முஹம்மது உண்மையானவர்தாம்; முஸைலமா பொய்யன்தான். அதற்கு நான் சத்தியம்கூட செய்வேன். ஆனால் எங்கள் ராபியாவின் பொய்யன், முதாரின் உண்மையாளரைவிட எனக்கு மேல்" (ராபியா என்பது பனூ ஹனீஃபாவின் குலமரபுக் குழு. முதார் என்பது நபிகளாரின் குலமான குரைஷிகளின் குலமரபுக் குழு.)

புரிந்து கொள்ள இது போதாது?

முஸைலமாவின் பின்னால் கூட்டம் திரண்டது. ஆதரவும் பெருகியது. நிகழ்கால அரசியலில் பார்க்கிறோமே அப்படித்தான்.  எதிர்பாராத ஆதரவின் வேகம் முஸைலமாவிடம் ஆணவத்தையும் அகம்பாவத்தையும் தோற்றுவித்தது. கடிதம் ஒன்று எழுதினான், யாருக்கு? முஹம்மது நபிக்கு!

"அல்லாஹ்வின் தூதர் முஸைலமாவிடமிருந்து, அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிற்கு. உம்மேல் சாந்தி உண்டாவதாக. உம்முடன் தூதுச் செய்தியில் தூதராக நானும் கூட்டாளியாக நியமிக்கப் பெற்றுள்ளதை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் பாதி நிலமும், குரைஷியர் நீங்கள் பாதி நிலமுமாக அரசாள வேண்டும் என்பது நியதி. ஆனால் குரைஷிகள் நீங்கள் வரம்பு மீறி விட்டீர்கள்"

இவ்வாறு எழுதி இரண்டு பேரை அழைத்து, "இந்தாருங்கள், இதை மதீனா சென்று அவரிடம் கொடுத்து பதில் பெற்று வாருங்கள்" என்று அனுப்பி வைத்தான். கோமாளிகளுக்கு எந்தக் காலகட்டத்திலும் பஞ்சம் இருந்ததில்லை. ஆனால் இவன் ஆபத்தான கோமாளியாகி விட்டான்.

முஹம்மது நபிக்கு அந்தக் கடிதம் படித்துக் காண்பிக்கப்பட்டது. நிதானமாய் கேட்டுக் கொண்டவர்கள் அந்தத் தூதுவர்களைப் பார்த்து, "இதைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.

"முஸைலமா சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்" என்று பதில் வந்தது.

"தூதுச் செய்தியாளர்கள் கொல்லப்படக் கூடாது என்ற நடைமுறை ஒன்று மட்டும் இல்லாதிருந்திருப்பின் உங்கள் இருவர் தலைகளைக் கொய்திருப்பேன்" என்று அவர்களுக்கு எச்சரிக்கை அளித்த நபியவர்கள், தம் தோழர்களிடம் பதில் கடிதம் ஒன்று எழுதச் சொன்னார்கள்.

"அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து பொய்யன் முஸைலமாவிற்கு. புனித வழிகாட்டுதலைப் பின்பற்றுபவர் மீது சாந்தி உண்டாவதாக. மொத்தபூமியும் அல்லாஹ்விற்கு உரியது என்பதை நீ உணர்ந்து கொள். அவன், தான் நாடுபவர்களுக்கு அதை உரிமையாக்குகிறான். மறுமை நாளின் நற்கூலி அவனை அஞ்சி வாழ்பவர்களுக்கே".

அந்த மட்டும் தூதுவர்களுக்கு மரியாதை அளித்து, பதில் கடிதம் அளித்து, திருப்பி அனுப்பி வைத்தார் நபியவர்கள். அதைப் பார்த்தபின் அடங்குவதற்குப் பதிலாக அவனுக்கு அகங்காரமும் கோபமும்தான் மேலும் பெருகியது. அட்டூழியம் அதிகமானது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாக, கேடான பாதையில் பயணிக்கும் அவனை, தீவிரமாய் எச்சரித்து தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது நபிகளாருக்கு. கடுமையாய் ஒரு கடிதம் எழுதச் சொன்னார்கள். அதை முஸைலமாவிடம் கொண்டு சேர்க்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹபீப் இப்னு ஸைத். அப்பொழுது அவர் ஒரு துடிப்பான, சுறுசுறுப்பான, சூட்டிகையான வாலிபர்.

"கடிதம்தானே, அந்த கேடுகெட்டப் பொய்யனுக்குத்தானே, கொடுத்துவிட்டால் போச்சு" என்று உடனே கிளம்பிவிட்டார் ஹபீப். பாலை, மலை, பள்ளத்தாக்கு என்றெல்லாம் தாண்டி நஜ்து வந்து சேர்ந்தவர், உடனே முஸைலமாவைச் சந்தித்து, "இந்தா பிடி, படி" என்று கடிதம் ஒப்படைத்தார்.

பிரித்துப் படித்தான் முஸைலமா. வெறுப்பாலும் குரோதத்தாலும் அவனது இதயம் துடித்தது. தூதுச் செய்தியாளருக்கு அளிக்கப்பட வேண்டிய கௌரவத்தை, பாதுகாப்பை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, "இவனைப் பிடித்து சிறையில் அடையுங்கள். நாளைக் காலை அவைக்குக் கொண்டு வாருங்கள்" என்று உத்தரவு பிறப்பித்து விட்டான். கைது செய்யப் பட்டார் ஹபீப்.

மறுநாள் அவை கூடியது. முஸைலமா தனது அரியணையில் வந்தமர, இருபுறமும் அவனது தோழர்கள் அமர்ந்தனர். அன்றைய தினம் அவனது அவைக்குப் பொதுமக்களும் வந்து கூடும்படி அழைக்கப்பட்டிருந்தனர். அதனால் பெரும் கூட்டம் திரண்டிருந்தது.

"யாரங்கே கொண்டு வாருங்கள் அந்தத் தூதுவனை" என்று கட்டளை பிறப்பிக்கப்பட, கனத்த சங்கிலிகளால் அவரைப் பூட்டி, இழுத்து வந்தார்கள் காவலர்கள். கால் விலங்கு தரையில் புரள வந்து நின்றார் ஹபீப் இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு.

அங்கு மொய்த்திருந்த பகைவர் கூட்டத்தினர் மத்தியில், மிகவும் சாதாரணமாய், முகத்தில் எவ்விதக் கலக்கமோ, கலவரமோ இல்லாமல், நின்று கொண்டிருந்தார் ஹபீப்.

முஸைலமா அவரை நோக்கிக் கேட்டான். "முஹம்மத் யார்? அல்லாஹ்வின் தூதரா?"

உடனே பதில் வந்தது. "ஆம். முஹம்மத் அல்லாஹ்வின் தூதரென்று நான் சாட்சி கூறுகிறேன்"

கோபத்தால் வெடித்துவிடுவதைப்போல் அவரைப் பார்த்த முஸைலமா அடுத்த கேள்வி கேட்டான். "நான் அல்லாஹ்வின் தூதன்தான் என்பதற்கு நீ சாட்சி கூறுகிறாயா?"

"எனக்குக் கொஞ்சம் காது மந்தம். நீ சொல்வது எனக்குக் கேட்கவில்லை", முகத்தில் நையாண்டி எதுவும் வெளிக்காட்டாமல் அப்பாவியாய் பதில் கூறினார் ஹபீப்.

சீற்றத்தில் முகம் வெளுத்தது முஸைலமாவிற்கு. உதடுகள் துடித்தன. "அவர் உடலில் ஒரு பகுதியை வெட்டி எறியுங்கள்", என்று கட்டளை பறந்தது.

தயாராய்க் காத்திருந்த காவலன், "அப்படியே ஆகட்டும்" என்று கூர்மையான வாள் கொண்டு அவர் உடலின் ஒரு பகுதியை வெட்டி எறிய, தரையில் விழுந்தது அப்பகுதி. பெருக்கெடுத்து  வழிந்தோடியது குருதி.

"முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்று நீ சாட்சி பகர்கிறாயா?" என்று மீண்டும் தன் கேள்வியைக் கேட்டான் முஸைலமா.

இப்பொழுதும் உடனே பதில் வந்தது. "ஆம். முஹம்மத் அல்லாஹ்வின் தூதரென்று நான் சாட்சி கூறுகிறேன்."

"மேலும் நான் அல்லாஹ்வின் தூதரென்று சாட்சி கூறுகிறாயா?"

"நான்தான் சொன்னேனே, எனக்குக் காது மந்தம் என்று. அதனால் நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குக் கேட்கவில்லை"

கோபம் மேலும் அதிகமானது பொய்யனுக்கு. மற்றுமொரு பகுதியை வெட்டச் சொன்னான். அடுத்து மற்றுமொரு உடல் பகுதி தரையில் விழுந்தது. குழுமியிருந்த கூட்டம் அவரின் உறுதியையும், விடாப்பிடிக் கொள்கையையும் பார்த்து வியர்த்துக் கொட்ட, இவருக்கோ குருதி கொட்டிக் கொண்டிருந்தது.

முஸைலமாவும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேயிருக்க, மீண்டும் மீண்டும் அதே பதில் வந்து கொண்டிருந்தது. காவலனும் கசாப்புக் கடையில் தொங்கும் ஆட்டிறைச்சியை வெட்டுவது போல், ஹபீபின் உடலை பாகம் பாகமாய் வெட்டிக் கொண்டிருந்தான்.

பாதிக்கும் மேற்பட்ட உடல் தரையில் துண்டுகளாக சிதறிக் கிடக்க, மறுபாதி இரத்தக் களறியில் படுகோரமாய் உருமாறிக் கிடந்தது. ஆனாலும் அவர் உதடுகளிலிருந்து வரும் வார்த்தைகள் மட்டும் மாறவில்லை. "முஹம்மத் அல்லாஹ்வின் தூதரென்று நான் சாட்சி கூறுகிறேன்" என்று சொன்னபடியே இறுதியில் விடைபெற்றது அவரது ஆவி. குற்றுயிராய் இருந்தவர் முற்றிலுமாய் இறந்து விழுந்தார். ஹபீப் இப்னு ஸைத் அல்-அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு.

அது பிஞ்சிலேயே விதைத்த ஈமான். அன்றே அகபாவில் முஹம்மது நபியின் கரம் பற்றி சத்தியம் செய்த சிறுவன். என்றாலும், சிறுபிள்ளைத் தனமான விளையாட்டுப் பேச்சில்லை அது அவருக்கு. "நபியே! உமக்காக உயிரையும் தருவேன்" என்றார் அல்லவா? தந்துவிட்டார் உயிரை! சரி, ஒருவர் உடலைத் தரலாம், உயிரைத் தரலாம். ஆனால் தன் உடலைக் கண்ட துண்டமாய் வெட்டி, உயிரைத் தந்தால் அந்த ஈமானை என்னென்பது? ஏதோ செடியையும், கொடியையும் வெட்டுவதைப் போல் உடலை அங்கம் அங்கமாய் வெட்டினாலும், குருதி கொட்டக் கொட்ட கலிமா உச்சரித்த உதடுகளின் வீரியமெல்லாம் எழுத்தில் எப்படி வடிப்பது? அங்குப் பெருக்கெடுத்து ஓடிய குருதியின் ஒவ்வொரு அணுவிலும் கலந்திருந்தது ஈமான். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

செய்தி மதீனா வந்து சேர்ந்தது. அவரின் தாயாரையும் அடைந்தது. அந்த அம்மையார், நுஸைபா அல்-மாஸினிய்யா கூறினார்:

"இத்தகைய ஒரு நிகழ்வுக்காகத்தான் நான் அவனை வளர்த்தும் உருவாக்கியும் வந்தேன். என்னுடைய நற்கூலியையும் அவனுடைய பரிசையும் அல்லாஹ்விடமே தேடுகிறேன். சிறுவனாய் இருக்கும்போது, ஒருநாள் இரவு அகபாவில் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சத்தியப் பிரமாணம் செய்து தந்தான். அதைப் பெரியவனானதும் நிறைவேற்றிவிட்டான். எனக்கு அல்லாஹ் வாய்ப்பளித்து முஸைலமாவை நான் நெருங்கினால், அவனது இழப்பிற்காக தங்களது முகத்தை அறைந்து கொண்டு துன்பத்தில் அரற்றுவதற்கு அவனுடைய மகள்களுக்கு நல்ல வாய்ப்பளிப்பேன்"

தன் மகனின் கோர முடிவைக் கேட்ட அந்த வீரத் தாயின் பதில் அவ்வளவுதான்! ரலியல்லாஹு அன்ஹா.

முஸைலமாவின் பிரச்சனை ஓயாமல் நபியவர்களின் மறைவிற்குப் பின்னர்வரை தொடர்ந்து கொண்டிருந்தது. அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் இந்த விவகாரத்தில் முழுக் கவனம் செலுத்தினார். நுஸைபா எதிர்பார்த்திருந்த நாள் வந்து சேர்ந்தது. அபூபக்ரின் முஅத்தின் மதீனா நகர வீதிகளில் பொய்யன் முஸைலமாவை எதிர்த்துப் போரிட மக்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே சென்றார்.

தொழுகையின் அழைப்பிற்கு எப்படி முந்திக் கொண்டு ஓடி வருவார்களோ, அதே போல்தான் போரின் அழைப்பிற்கும் கிளம்பினார்கள் அந்த மக்கள். போர் அழைப்பு காதில் விழுந்ததும் "கிளம்படா மகனே" என்று தன்னுடைய மற்றொரு மகன் அப்துல்லாஹ்வுடன் வாளைத் தூக்கிக் கொண்டு, முஸ்லிம் படைகளுடன் யமாமாவை நோக்கி ஓடினார் உம்மு உமாரா.

கடுமையான யுத்தம் நிகழ்ந்தது. பெண் புலி தெரியுமில்லையா? படை வரிசையினூடே அப்படிச் சீற்றமுடன் பாய்ந்து முன்னேறிக் கொண்டிருந்தார் நுஸைபா. "அல்லாஹ்வின் விரோதி எங்கே? எனக்குக் காண்பியுங்கள். எங்கே அல்லாஹ்வின் அந்த விரோதி!" என்று சீற்றமுடன் போரிடலானார்.

கடைசியில் அவனை அந்த அம்மையார் அடைந்தபோது, முஸ்லிம்களின் வாள்களால் துண்டாடப்பட்டுக் கிடந்தான் முஸைலமா. அதைக் கண்டவுடன்தான் அமைதியும் உளநிறைவும் ஏற்பட்டது அந்த அம்மையாருக்கு. பெருமகிழ்வுடன் மதீனா திரும்பினார்.

சொகுசிலும், சுகபோகத்திலும் சதா திளைத்துக் கொண்டு, மரத்துப் போய்க் கிடப்பவை இன்றைய நம் உள்ளங்கள். ஹபீபின் வாழ்க்கையும் தியாகமும் அவ்வளவு சாதாரணமாகப் புரிந்து விடாதுதான். ஆனால் தெளிவொன்று நமக்கும் பிறக்க ஒப்பிட வேண்டிய உரைகல் அவர்.

ரலியல்லாஹு அன்ஹு!

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!

< தோழர்கள்-1 | தோழர்கள்-2 | தோழர்கள்-3 | தோழர்கள்-4 | தோழர்கள்-5 >

Comments   

Abufaisal
0 #1 Abufaisal 2010-04-13 20:02
சஹாபி ஹபீப் இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஈமானில் உள்ள உறுதி என்னை பிரமிக்க வைத்ததோடல்லாமல் அந்த தாயின் வீரமும் மன தைரியமும் கண்களில் கண்ணீரையும் வர வைத்தது. சிறு விசயங்கலுக்கெல் லாம் ஈமானை விட்டு ஓடும் நமக்கு இவர்கள் ஒரு பாடம்! மிகச்சிறப்பான நடையில் எழுதி வரும் சகோ நூருத்தீனுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக!
Quote | Report to administrator
abuasmaa
0 #2 abuasmaa 2010-04-13 20:25
அல்ஹம்துலில்லாஹ ். தொடரட்டும் உங்களின் பணி! இது போன்ற வரலாறுகளை தெரியாமல் தான் நமது சமுதாயம் இன்னும் வீண் சடங்குகளில் மூழ்கி கிடக்கிறது. யா அல்லாஹ் உள்ளங்களை புரட்டக்கூடியவன ே! எங்களின் உள்ளங்களை உனது மார்க்கத்தில் உறுதிப்படுத்துவாயாக!

அபூ அஸ்மா ‍ ‍
மதுக்கூர்.
Quote | Report to administrator
Syed
0 #3 Syed 2010-04-14 10:35
அல்ஹம்துலில்லா. தயவு செய்து தொடரும். தொடர்பு கொள்ள முகவரி கொடுத்தால் நன்றாக இருக்கும்.
Quote | Report to administrator
Lareena Abdul Haq
0 #4 Lareena Abdul Haq 2010-04-20 21:45
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹ்...


மாஷா அல்லாஹ்! மிக அற்புதமான ஆக்கம். உயிரோட்டமான நடை உணர்வுகளை முழுமையாக ஈர்த்து, கண்களைப் பனிக்கச் செய்கிறது. அல்லாஹ் தங்களின் பணிகளைப் பொருந்திக் கொள்வானாக! அல்லாஹ்வின் மார்க்கத்தை உடல், பொருள், உயிர் ஆகிய அனைத்துக்கும் மேலாய் ஆழ்ந்து நேசிக்கக்கூடிய, அனைத்தையுமே அதற்காக அர்ப்பணிக்கக்கூ டிய அந்த நல்லோர்களின் தியாகத்தால் உருவான இஸ்லாமிய விருட்சத்தைச் சுற்றி இன்று அடர்ந்து படர்ந்துள்ள விஷச் செடிகள்தாம் எத்தனையெத்தனை! அவற்றை களையெடுத்து முழு உலகுக்கும் சாந்தியின் நிழலளிக்கும் சமுதாயமொன்றைக் கட்டியெழுப்பவேண ்டிய பணி நம் அனைவரையும் அழைக்கிறது. அதற்கு உரமூட்டும் வகையில் அமைந்துள்ளது, இந்த ஆக்கம். வாழ்த்துக்கள்.


அன்புடன்,
இஸ்லாமிய சகோதரி,
லறீனா அப்துல் ஹக்.
Quote | Report to administrator
நூருத்தீன்
0 #5 நூருத்தீன் 2010-04-21 22:59
வஅலைக்கும ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.

இத்தொடர் பரவலாய் வாசகர்களைக் கவர்ந்துள்ளதை அறிய முடிகிறது. அனாவசியமான விஷயங்களால் திசை திருப்பப்பட்டு, முன்னுதாரனங்களை எங்கெங்கோ தேடிக் கொண்டிருக்கும் நமக்கு, சரியான விலாசம் தெரிவிக்கும் முயற்சி தான் இத்தொடர்.

எடுத்தெழுதி இயம்பியதை விட, பெரிதாய் ஏதும் செய்துவிட்டதாய் நான் கருதவில்லை. ஆனால், கட்டுரை வாசகர்களை ஈர்த்து சலனங்கள் ஏதும் ஏற்படச் செய்திருந்தால், அது நானல்ல, அவர்கள்! ரலியல்லாஹு அன்ஹும்.

புகழனைததும் அல்லாஹ்விற்கே! அவன் நம்மனைவருக்கும் நல்லருள் நல்கி நேர்வழியில் நிலைநிறுத்தி வைப்பானாக.

அன்புடன்,
-நூருத்தீன்
Quote | Report to administrator
vasimkhan
0 #6 vasimkhan 2015-05-17 08:37
Alhamthulillah sahabakalin thiyagam nammaal ninaithukooda paakamudiyaathu antha alavirku thiyagam saithullargal Abdulla bin huthafa varalaru kidaikuma
Quote | Report to administrator
vasimkhan
0 #7 vasimkhan 2015-05-17 08:38
Abdulla bin huthaafa varalaru kidaikuma
Quote | Report to administrator
vasimkhan
0 #8 vasimkhan 2015-05-17 19:39
ALHAMTHULILLAH yanakku ungal enaiyathalam moolam yanakku niraiya sahaabakal and sahaba penmanigalin varaaru kidaithathu allahu ungal memmealum thodara uthavi saivaanahaa !!!
Quote | Report to administrator
நூருத்தீன்.
0 #9 நூருத்தீன். 2015-05-28 23:49
அன்புச் சகோதரர் வாஸிம் கான்,

அப்துல்லாஹ் பின் ஹுதாஃபாவின் (ரலி) வரலாறு இத்தொடரில் வெளியாகியுள்ளது.

அதன் சுட்டி -
satyamargam.com/.../...

தங்களது ஆர்வத்திற்கும் துஆவிற்கும் நன்றி.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்