முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

தோழர்கள்

அரிசி அறிமுகம் - உத்பா பின் கஸ்வான்உத்பா பின் கஸ்வான் - عُتبة بن غَزْوان

அது ஹஜ்ரீ 18ஆம் ஆண்டு. ஹஜ் முடிந்து பஸரா நகருக்குத் திரும்ப வேண்டிய அதன் கவர்னர், வழியில் மதீனா வந்து கலீஃபா உமரைச் சந்தித்தார். அப்போது உமர் பின் கத்தாப் (ரலி) இரண்டாவது கலீஃபாவாக ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தார். மதீனாதான் கலீஃபாவின் தலைநகரம்.

”தாங்கள் தயவு செய்து என்னை வேலையிலிருந்து நீக்க வேண்டும்” என்றார் கவர்னர்.

 

ஆச்சரியத்துடன் பார்த்த உமர், ”அதெல்லாம் முடியாது. ஊருக்குத் திரும்பிப் போய் தங்கள் வேலையைத் தொடருங்கள்” என்றார்.

வற்புறுத்தினார் கவர்னர்; அதைவிட வற்புறுத்தினார் உமர்.

கெஞ்சினார் கவர்னர்; கட்டளையிட்டார் உமர். அதற்குமேல் மீற முடியாது. அது அமீருல் மூமினீனின் அரச கட்டளை.

மிகவும் வருத்தத்துடன் வேலைக்குத் திரும்பினார் கவர்னர். அரசாங்க உத்தியோகம். கவர்னர் வேலை. அதுவும் எந்த நகருக்கு என்றால், புதிதாய் உருவாகி நான்காண்டுகளே ஆகியிருந்த பஸரா நகருக்கு.

இப்பொழுதெல்லாம் அடிக்கடி செய்திகளில் படிக்கிறோமே இராக்கிலுள்ள பஸரா, அதே பஸராதான். மேலும் அந்த நகரை உருவாக்கியவரே இந்த கவர்னர்தான். அந்நகரை உருவாக்கியவர் என்பதைக் காரணமாகக் கொள்ளாமல் அவரை ஆளுனராக்கினார் உமர்.

ஆனால் இப்போது அந்த நகரும் வேண்டாம், பதவியும் வேண்டாம் என்று கலீஃபாவிடம் வந்து முறையிடுகிறார் கவர்னர். அப்படியெல்லாம் ஓட முடியாது என்று பிடித்து வைக்கிறார் கலீஃபா. பதவியைப் பிடிப்பதற்கும் பிடித்தபின் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் இழக்கக் கூடாதவற்றையெல்லாம் இழந்து விடுபவர்களைப் பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு, விசித்திரமாகத் தோன்றும் அவர்களது போக்கு!

உமர் வற்புறுத்தி, கட்டளையிட்டுப் பதவிகள் தருவதும், பெறுபவர்கள் வெறுத்து ஒதுக்கி ஓடுவதும் - நமக்கு வேறு வழியில்லை - ஏறத்தாழ இந்த வரலாற்றுத் தொடர் முழுதும் நம்மால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத இதுபோன்ற சில விஷயங்களை நாம் படித்து, அறிமுகம் செய்தே ஆக வேண்டியதுதான்.

வேண்டா வெறுப்பாய்க் கிளம்பிச் செல்கிறார் கவர்னர் உத்பா பின் கஸ்வான் ரலியல்லாஹு அன்ஹு.

*****

உத்பா பின் கஸ்வான் வெகு ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர். நெடிய கம்பீரமான உருவ அமைப்பு. இஸ்லாத்தின் மீளெழுச்சியின்போது கப்பாப் பின் அல்-அரத் ஆறாவது என்று முன்னர் பார்த்தோமல்லவா? இவர் ஏழாவது மூத்தக் குடிமகன். அல்அர்கம் இப்னு அபில்அர்கம் என்பவரது மண்வீட்டில் இயங்கி வந்த கல்லூரியில் படித்துத் தேறிய மற்றொரு தங்க மாணவர்.

புதிதாய் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு மக்காவில் எப்படிப்பட்ட உபசாரம் நடைபெறும் என்பதை முந்தைய அத்தியாயங்களில் சற்றுப் பார்த்தோம். நிலைமை நாளுக்கு நாள் படுமோசமாகிக் கொண்டிருக்க, அதிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முஸ்லிம்களின் ஒரு குழு அபிஸீனியாவிற்குப் புறப்பட்டுச் சென்றது. ”அங்கு ஆட்சி செலுத்தும் நஜ்ஜாஷி நேர்மையானவர். உங்களது துன்பங்கள் இலேசாகும். இறைவனையும் தடையில்லாமல் வணங்கி ஒழுகி வரலாம்” என்று முஹம்மது நபி (ஸல்) ஒருநாள் ஒரு குழுவினரை அபிஸீனியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் பின்னர் மீண்டும் மக்கா வந்துவிட்டார் உத்பா. சில ஆண்டுகள் கழித்து நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்ததும் மீண்டும் இரண்டாவதாக மதீனத்துக்கு ஹிஜ்ரா செய்தார்.

இந்த வரலாறு படித்துக் கொண்டு வரும்போது ஆங்காங்கே, "ஹிஜ்ரா" எனக் குறிப்பிடப்பட்டு, அது பெருமையோடு பேசப்படுவதையும் நாம் படிக்க நேரிடும். இலேசாய் அதைப் பற்றி இங்குக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். நமக்கு ஹிஜ்ரா என்பது ஒரு காலண்டர் வாசகம். நோன்பிற்கும் பெருநாளைக்கும் ஹஜ்ஜிற்கும் நாள் காட்ட உதவும் அரபு ஆண்டு.  மற்ற நாட்களில், "ஹிஜ்ரீயில் இது என்ன மாதம்?" என்றுகூட நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால், இந்த ஹிஜ்ரா ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்ட அவர்களைத் தரம் நிர்ணயித்த தகுதி. அவர்களின் பெருமையையும் புகழையும் நமக்கு வரலாற்றுப் பக்கங்களாக வாசித்துக் கொள்ள வழிவகை செய்த பெரும் நிகழ்வு, பேறுபெற்ற நிகழ்வு!  புதிதாய் இஸ்லாத்தை ஏற்றவர், புனிதக் கடமையான ஹஜ் நிறைவேற்றியவர்போலாவார். அல்லாஹ்விற்காக மட்டுமே என்று வீடு, வாசல், நிலம், குடும்பம் என அனைத்தையும் துறந்து ஒருவர் புலம் பெயர்ந்துவிட்டால், அந்த ஹிஜ்ரா அவரை "பச்சைப் பிள்ளையாக" ஆக்கிவிடுகிறது. அனுபவப் படாததால் அதன் தாக்கத்தை நம்மில் பெரும்பாலோர் உணர்வதில்லை. இருக்கட்டும். நமக்கு இங்கு உத்பா ஒரு முஹாஜிர், அதுவும் இருமுறை ஹிஜ்ரத் புரிந்த முஹாஜிர் என்பதை அதன் பொருளுடன் புரிந்து கொண்டால் போதும்.

தவிர வீரர் அவர். பத்ரு, உஹது, அகழி இன்னபிற போர்களிலெல்லாம் நபியுடன் இணைந்து வீராவேசமாகப் போரிட்டவர். நபிகளாரின் மறைவிற்குப்பின் அபூபக்ரு சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாய் இருந்த காலத்தில் முஸைலமா எனும் பெரும்பொய்யன் ஒருவன், "நான் ஒரு நபி. எனக்கும் வஹீ வருகிறது" என்று அழிச்சாட்டியம் செய்ய ஆரம்பித்து விட்டான். அவனை அடக்குவது பெரும்பாடாய் ஆகிவிட்டது முஸ்லிம்களுக்கு. அதைச் சார்ந்த நிகழ்வுகளின் அடிப்படையில் இன்ஷாஅல்லாஹ் பிற தோழர்களின் வரலாற்றில் பின்னர் பார்ப்போம். இறுதியில் அவனது படைகளுடன் மாபெரும் போரொன்று யமாமாவில் நிகழ்வுற்றது. அதிலும் கலந்து கொண்ட மாவீரர், முஹாஜித் உத்பா. அவரது வாளும் அம்பும் குறி தவறியதேயில்லை; அவரது ஈட்டி எய்தும் திறனும் பெரிதாகப் பேசப்பட்ட ஒன்று.

பின்னர் அபூபக்ரின் மறைவிற்குப்பின் உமர் கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்பொழுது முஸ்லிம் படைகள் இரண்டு வல்லரசுகளுடன் மோதிக் கொண்டிருந்தன. ஒருபுறம் ரோமானியர்;  மறுபுறம் பாரசீகர்கள். இந்த இரு வல்லரசுகளையும், அவர்கள் ஒருகாலத்தில் நினைத்துக்கூடப் பார்த்திராத, பாலையில் தோன்றியெழுந்த முஸ்லிம் படைகள் முனைப்புடன் தாக்கிக் கொண்டிருந்தன. அதன் தீவிரம் புரிய வேண்டுமென்றால், ரஷ்யாவையும் அமெரிக்காவையும் திடீரென்று தோன்றியெழுந்த ஒரு குட்டி நாடு அவர்கள் நாட்டுக்குள்ளேயே நுழைந்து, அதுவும் ஏககாலத்தில், தாக்கிப் போரிடுவதை மனக்கண்முன் கொண்டு வந்து பார்த்தால் ஓரளவு புரியும். போர்கள் படு உக்கிரமுடன் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இன்றைய இராக் சார்ந்த பகுதிகள் அன்று பாரசீகர்களின் ஆட்சியில் இருந்தன. முஸ்லிம்களின் பெரும் படையொன்று அங்கு அவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தது, முன்னேறிக் கொண்டும் இருந்தது.

இராக்கிலுள்ள யூப்ரட்டீஸ் (Euphrates) நதிக்கரையில் உபுல்லா என்றொரு நகரம் இருந்தது. அரண் அமைத்து நன்றாகப் பாதுகாப்புடன் இருந்த வலுவான பாரசீக நகரம். முஸ்லிம்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த பாரசீக வீரர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்றால், போர் உக்கிரமடைந்து முஸ்லிம்களின் கை ஓங்கும்போது பின்வாங்கி, உபுல்லா நகருக்குள் சென்று புகுந்து கொள்வார்கள். தங்களுடைய உணவுப் பொருட்களை மீட்டுக் கொண்டு, தேவையான மறுஉதவிகள் பெற்றுக் கொண்டு, இழந்த சக்தியை மீட்டுக் கொள்வார்கள். அங்கிருந்து கூடுதல் வீரர்கள் சேர்ந்து கொள்ள, திரும்பி வந்து மீண்டும் புத்துணர்வுடன் போரிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

முஸ்லிம்களின் நிலைமை அப்படியில்லை. அனைவரும் வெகுதொலைவிலிருந்து வந்து போரில் ஈடுபட்டிருந்தார்கள். களைப்பாறி மீண்டும் வந்து போரில் தாக்கும் வசதியெல்லாம் அவர்களுக்கு இல்லை. போரையும் முழுமையான முடிவிற்குக் கொண்டுவர முடியவில்லை.

இப்படிப் பாரசீகர்களின் புத்துணர்வு நகரமான உபுல்லா, முஸ்லிம் போர்வீரர்களுக்குப் பெரிய தலைவலியாகி விட்டது. செய்தி மதீனாவில் இருந்த கலீஃபா உமரை வந்தடைய, அவரது தூக்கம் கெட்டுப் போனது. இரவில் மதீனா வீதிகளில் உலாச் சென்று விட்டு வந்து படுப்பவர் அவர். அத்தனை வேலைச்சுமைகளுக்கும் இறைவணக்கத்திற்கும் இடையில் அதுவும் அவருக்கு முக்கியம். தம் குடிமக்களின் நலன் முக்கியம். அவர்களின் பாதுகாவல் முக்கியம். அப்படியான ஓர் இரவில் இந்தக் கவலையும் சேர்ந்து கொள்ள தூக்கம் வராமல் யோசித்துக் கொண்டிருந்தார் உமர். பலத்த யோசனைக்குப் பிறகு அந்த நகரை எவ்வாறேனும் வென்றாக வேண்டும் எனும் முடிவு தோன்றியது அவருக்கு.

அதுதான் சரி, அதற்காக ஒரு படை தயார் செய்து அனுப்பிவிட்டால் போதும் என்ற தீர்வுக்கு வந்தபோதுதான் மற்றொரு பிரச்சனை எழுந்தது. சிறியவர், பெரியவர், மூத்தவர் என்று அனைவரும் இரு தரப்புப் போர்க் களத்திற்குச் சென்றுவிட்டிருக்க மதீனாவில் குறிப்பிடும்படியான வலிமையான ஆள்பலம் இல்லை. தாக்கப் போவதோ பாரசீகர்களின் வலுவான உபுல்லா நகரை. அதற்கு மிக வலிமையானப் படை வேண்டும். ஆனால் இருப்பதோ சொற்ப வீரர்களே. என்ன செய்வது என்று சிந்தித்தார்.  அப்பொழுதுதான் அவருக்கு அந்த யோசனை தோன்றியது. குறைவான வீரர்கள் இருந்தாலும் அவர்களுக்குப் போர் அனுபவமும் அறிவுக்கூர்மையும் உடைய வலிமை மிக்க ஒருவரைப் படைத் தலைவராக ஆக்கினால்? அது ஆள் பலக்குறைவை ஈடு செய்து விடும் என்று கருதினார் உமர்.

அதற்குத் தகுதியான ஒருவர் வேண்டுமே என்று யோசிக்க, விடை கிடைத்தது! உத்பா பின் கஸ்வான். "ஆம், அவர்தாம் பொருத்தமானவர்" என்று திருப்தியுடன் உறங்கப் போனார் உமர்.

மறுநாள் பொழுது விடிந்தது. உத்பாவை கூப்பிட்டனுப்பினார் உமர். சற்றேக்குறைய முந்நூற்று இருபது போர் வீரர்களைத் தேற்றி வைத்திருந்தார். அவர்களையும் உத்பா கையில் ஒரு கொடியையும் கொடுத்து, "சென்று வா! வென்று வா" என்று சொல்லிவிட்டார். "வேறு பகுதிகளில் போர் முடிந்து வீரர்கள் திரும்பினால் மேற்கொண்டு அவர்களை உனக்கு அனுப்பிவைக்கிறேன்" என்று மட்டும் உறுதிமொழி கொடுத்தார்.

பலமான அரணுடன் அமையப்பெற்ற நகரம் உபுல்லா. பாரசீகர்களின் புத்துணர்வுக் கோட்டை. அதைப் பிடிக்க ஒரு தளபதி, அவருடன் வெறும் முந்நூற்றுச் சொச்சம் போர்வீரர்கள் என்று அனுப்பி வைத்தார் உமர். அது என்னவோ? அப்படித்தான் செயல்பட்டார்கள் அவர்கள். அசட்டுத் துணிச்சலோ என்றால் அதெல்லாம் இல்லை. நிஜத் துணிச்சல்தான். நாம் சிந்தையில் கொள்ள வேண்டுவது என்னவென்றால், அவர்கள் கைகளில் இருந்த ஆயுதங்களைவிட, தங்கள் மனங்களில் வீற்றிருந்த கலிமா போதுமான பேராயுதமாக அவர்களுக்குத் திகழ்ந்தது. அதை ஏந்திக் கொண்டு, ஏதோ விளையாட்டுக் களத்துக்குச் செல்வதுபோல் பரபரவென்று உற்சாகத்துடன் போர்க்களம் காணப் புறப்படலானார்கள் அவர்கள். மிகையற்ற உவமைதான் இது.

படை, பயணத்திற்குத் தயாராகிவிட, படைத் தலைவர் உத்பாவிடம் வழியனுப்பி அறிவுரை பகர்ந்தார் கலீஃபா உமர் அல் ஃபாரூக்.

"உத்பா, உம்மை நான் உபுல்லாவிற்கு அனுப்பி வைக்கிறேன். அது எதிரியின் மிகவலுவான கோட்டை. அதை வெற்றி கொள்ள அல்லாஹ் உம்முடைய இந்தப் படையணிக்குத் துணை புரிவான் என நம்புகிறேன். நீர் அதில் வெற்றியடைந்தால் மக்களை அல்லாஹ்வின் மேல் நம்பிக்கைக் கொள்ள அழைக்கவும். உமது அழைப்பை ஏற்றுக் கொள்பவர்களை நீரும் ஏற்று அரவணைத்துக் கொள்ள வேண்டும். யாரேனும் மறுதலித்தால் அவர்கள் ஜிஸ்யா வரி செலுத்த வேண்டும். உம்மிடம் அவர்கள் பகைமை பாராட்டக் கூடாது. அவர்கள் பகைமையில் நிலைத்திருந்தால், உமது அதிகாரத்திற்கு அவர்கள் அடிபணியும்வரை நீர் அவர்களுடன் போரிட வேண்டும். உத்பா!, உம்முடைய கடமைகளை நிறைவேற்றுவதில் எப்பொழுதுமே அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்வீராக!

"உம்முடைய தற்பெருமை உம்மை அகந்தையின்பால் இட்டுச் சென்றுவிடாமல் எச்சரிக்கையாயிருக்கவும்! ஏனெனில் அது மறுமையில் உமக்கு அழிவை ஏற்படுத்திவிடும். ஒருகாலத்தில் நீர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு உடனிருந்த தோழர் என்பதை எப்பொழுதும் மறந்து விடாதீர். ஏனெனில் அவர்கள் மூலமாகவே மதிப்புப் பெற்றீர். இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் தாழ்ந்த, பலவீன நிலையில் இருந்தீர். ஆனால் உமது ஏகத்துவ நம்பிக்கையின் காரணமாய் அல்லாஹ் உமக்கு ஆற்றல் அளித்தான். இப்பொழுது அதிகாரம் கையளிக்கப்பெற்ற ஒரு படைத்தலைவராக ஆகியுள்ளீர். மக்கள் கட்டுப்படும் தலைவராகியிருக்கிறீர். நீர் உரைப்பது செவியேற்கப்படும். உமது கட்டளைகள் அவர்களால் நிறைவேற்றப்படும். இது நிச்சயமாய் உமக்கு ஓர் அருட்பேறு. ஆனால் அதைக் கொண்டு நீர் வெற்றுப் பகட்டும் உலக நன்மையும் நாடுவீரானால் அது நேராய் உம்மை நரக நெருப்பிற்கே இட்டுச் செல்லும். அல்லாஹ் உம்மையும் என்னையும் அதை விட்டுக் காப்பாற்றுவானாக!”

இரத்தினச் சுருக்க அறிவுரை. நோக்கம் தெளிவு. எதுவும் நமக்கென இல்லை, அனைத்தும் அவனுக்காக, அவன் கட்டளைக்காக. போர்க்காலம் தாண்டிய அறிவரை நம் அனைவருக்கும் அதில் இழையோடி இருக்கிறது. நாமும் அதைக் கொஞ்சம் கவனத்துடன் படித்துக் கொண்டால் நற்பயன் உண்டு.

ரலியல்லாஹு அன்ஹும்.

என்ன செய்தார் உத்பா? கவனமாகப் பணிவுடன் கேட்டுக் கொண்டார். ”அப்படியே ஆகட்டும்" என்று கிளம்பிவிட்டார். அவருடன் அவர் மனைவியும் கிளம்பிச் சென்றார். மற்றும் சில பெண்கள் இருந்தனர். அவர்கள் மற்ற வீரர்களின் மனைவிகள் மற்றும் சகோதரிகள்.

ஹிஜ்ரீ 14ஆம் ஆண்டு அது. நீண்ட பயணம் மேற்கொண்டு உபுல்லா வந்து சேர்ந்தது படை. சகதிகள் நிறைந்த, கோரைப் புற்கள் மண்டிய பகுதியில் கூடாரம் அமைத்தனர். எடுத்து வந்திருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்து போய், யாருக்கும் உண்ண உணவில்லை. சுற்றுலாப் பயணமா கிளம்பி வந்திருக்கிறார்கள், கட்டுச் சோற்றைப் பிரித்துக் கூடி அமர்ந்துண்ண? ஒன்றுமேயில்லை. அனைவரையும் பசி வாட்டி எடுத்தது. சில வீரர்களைத் தேர்ந்தெடுத்து ஊர் எல்லையோரம் சென்று ஏதாவது உணவு கிடைக்கிறதா என்று பார்த்து வரச் சொன்னார் உத்பா.

கிளம்பிச் சென்றார்கள் அவர்கள். ஒரு புதர்க்காட்டில் இரு பெரிய கூடைகள் தென்பட்டன. ஒன்றில் பேரீச்சம்பழங்களும் மற்றொன்றில் ஏதோ தானியங்களும் வைக்கோலில் இருந்தன. அது என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை. பேரீச்சம்பழக் கூடையையும் எதற்கும் இருக்கட்டும் என்று தானியக் கூடையையும் கூடாரத்திற்கு எடுத்து வந்துவிட்டனர்.

யாருக்கும் அந்தத் தானியம் என்னவென்று தெரியவில்லை. ஒருவருக்கு மட்டும் ஐயம் எழுந்தது. நிச்சயம் பாரசீகர்கள் ஏதோ விஷ விதைகளை விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ”அதைத் தொடாதீர்கள். எதிரிகள் நமக்காக விஷம் விட்டுச் சென்றுள்ளனர்” என்று எச்சரிக்கை செய்து விட்டார். படையினரும் அதைத் தொடவில்லை. பேரீச்சம்பழங்களை மட்டும் அனைவரும் பகிர்ந்து கொண்டார்கள். அலுத்துக் களைத்த படைக்கு அதுதான் - அது மட்டும்தான் - உணவு.

அப்பொழுது அவர்களது குதிரையொன்று கட்டவிழ்த்துக் கொண்டு வந்து அந்த மற்றொரு கூடையில் இருந்த தானியத்தில் வாய் வைத்து, அதில் கொஞ்சத்தைத் தின்றும் விட்டது. விஷ தானியத்தைக் குதிரைத் தின்பதைக் கண்ட ஒருவர் குதிரை இறந்து போவதற்குள் அதனை அறுத்துவிட முடிவு செய்து விட்டார். இறந்து போவதற்குள் குதிரையை அறுத்துவிட்டால் பசியான இவ்வேளையில் அதன் இறைச்சியாவது ஆகுமானதாகிவிடுமே என்றுதான் அந்த யோசனை. குதிரை இறந்துவிட்டால் குதிரையும் போச்சு, இறைச்சியும் போச்சு என்று ஆகிவிடுமே! ஆனால் அந்தக் குதிரையின் உரிமையாளர், ”இப்பொழுது அவசரப்பட்டு நீங்கள் அறுக்க வேண்டாம். இரவு முழுக்கக் குதிரையை நான் கண்காணிக்கிறேன். அதற்கு ஏதாவது சரியில்லாமல் போவது தெரிந்தால் நானே அறுத்து விடுகிறேன்” என்று கோரிக்கை வைக்க அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

மறுநாள் பார்த்தால் குதிரை யாதொரு குறையுமின்றி, இன்னொரு கூடை தானியம் கிடைத்தாலும் சரியே என்பதுபோல்  நலமாய்க் கனைத்துக் கொண்டிருந்தது. அப்பொழுது படையினருடன் வந்திருந்த ஒரு வீரனின் சகோதரி, ”ஏதேனும் ஒரு பொருளில் விஷம் இருந்து அதனை நெருப்பில் சமைத்தால், விஷம் முறிந்து போகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் இதனை நெருப்பில் சமைத்துப் பார்ப்போமே” என்று சொல்லி ஒரு பானையில் அந்தத் தானியங்களைப் போட்டு, நீரிட்டு அடுப்பு மூட்டி, நெருப்பில் சமைக்க ஆரம்பித்தாள்.

அந்தத் தானியம் நிறம் மாறிப் பிளந்து, உள்ளிருந்து வெள்ளைத் தானியம் வெளிப்படலாயிற்று. நிச்சயம் அது விஷமல்ல என்று அவர்களுக்கு உறுதியாகிவிட்டது. அனைவரும் சமைக்கப்பட்ட அந்த வெறும் தானியத்தை ஒரு தட்டில் வைத்து உண்ண ஆரம்பிக்க, உத்பா நினைவூட்டினார், ”அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி, பிறகு உண்ணுங்கள்”. அவர்களுக்கு அது ஒரு புதுவித சுவையாக இருந்தது, நன்றாகவும் இருந்தது. விரும்பி உண்டனர்.

வேறொன்றுமில்லை, அந்த மற்றொரு கூடையில் இருந்தவை நெற்கதிர்கள். தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்ததும் நெற்கதிர்கள் பிளந்து, அரிசிச் சோறாகி விட்டது. பாலைஅரபியாவில் வயலா, வாய்க்காலா, அவர்கள் நெல்லும் அரிசியும் அறிந்திருக்க? ஆக, அந்தப் படையெடுப்பின்போதுதான் அரபியர்களுக்கு அரிசி எனும் ஓர் உணவே அறிமுகமானது.

இவ்வளவு தூரம் இவர்கள் மெனக்கெட்டு வெற்றி கொள்ள வந்திருக்கும் உபுல்லா பற்றிச் சற்று கூடுதல் விபரம் தெரிந்து கொள்வோம். உபுல்லா பாரசீகர்களின் வலுவான, தலையாய கோட்டைநகர் என்றும் இராக் நாட்டில் அமைந்திருந்தது என்றும் பார்த்தோம். இராக்கின் இரு முக்கிய நதிகள் டைக்ரீஸ் (Tigris), யூப்ரட்டீஸ் (Euphrates). இவை துருக்கியிலுள்ள தௌரஸ் (Taurus) மலையிலிருந்து துவங்கி,  சிரியா, இராக் நாடுகளினூடே பாய்ந்து பாரசீகக் கடலில் சென்று கலக்கின்றன. இரண்டும் நீளமான நதிகள். நீளமென்றால் மிக நீளம். டைக்ரீஸ் 1862 கிலோ மீடடரும் யூப்ரட்டீஸ் 2289 கிலோ மீட்டரும் நீளம். இந்த இரு நதிகளும் பாரசீகக் கடலில் சென்று முடிவடையும் முன் இராக்கில் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருந்த நகர்தான் உபுல்லா. பாரசீகப் பேரரசின் முக்கியத் துறைமுக நகரம் இது. இந்தியா, சீனா மற்றும் கிழக்கத்திய நாடுகளிலிருந்து பயணப்படும் கப்பல்கள் வந்து போகும் முக்கியத் துறைமுகமாக இது அமைந்திருந்தது. தவிர தாஸ்த் மெய்ஸன் (Dast Meisan) எனும் இராணுவப் பகுதியின் தலைமையகமாகவும் திகழ்ந்தது.

இதைக் கைப்பற்றுவது முஸ்லிம் படைகளுக்கு எந்தளவு முக்கியம் என்பதை முன்னர் பார்த்திருந்தாலும், புவியியல் ரீதியாகவும் இந்நகரத்தின் முக்கியத்துவத்தை உணர இந்தச் சிறு குறிப்புகள் அவ்வளவே. புவியியல் போதும், நாம் வரலாற்றைத் தொடருவோம்.

உத்பா அவர்களின் தலைமையில் படை நகர்ந்து, டைக்ரீஸ் நதிக்கரையை அடைந்தது. உபுல்லா மிகப் பலமான அரணுடன் கம்பீரமாய் நின்று கொண்டிருந்தது. நாட்டின் மறுமுனையில் முஸ்லிம்களுடன் நடைபெற்று வரும் போருக்கு அனுப்பி வைக்க அது படைக்கொட்டிலாகவே ஆகியிருந்தது. போர்க்கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அரணிலிருந்த உயரமான கோபுரங்களில், நகரை நோக்கி எதிரிகள் யாரும் நெருங்கி வந்தால் எளிதில் கண்டுவிடும் வகையில் கடுமையான காவல் அமைக்கப்பட்டிருந்தது.

வந்திருப்பதோ சிறிய அளவிலான படை. அவர்களிடமிருந்த ஆயுதங்கள் வாள்களும் அம்புகளும் ஈட்டிகளும்தாம். அவற்றைக் கொண்டு பாய்ந்து தாக்கிப் போரிடுவது என்பதெல்லாம் ஆகாத காரியம். புத்திசாலித்தனமாய்ப் போர்த் தந்திரம் ஏதாவது செய்தால்தான் உண்டு. என்ன செய்யலாம் என்று யோசித்தார் உத்பா. திட்டமொன்று உதித்தது. நிறையக் கொடிகள் ஏற்பாடு செய்யச் சொன்னார். அதனையெல்லாம் பற்பல ஈட்டிகளில் கட்டி, பெண்களிடம் கொடுத்தார்.

அவர்களையும் மற்றும் சிலரையும், "நீங்களெல்லாம் படைக்கு வெகு பின்னால் வாருங்கள். நாங்கள் நகரை நெருங்கியதும், இந்தக் கொடிகளையெல்லாம் உயர்த்திப் பிடித்து, காலால் மண்ணைக் கிளறி, காற்றில் புழுதி தூள் கிளப்புங்கள், அது போதும்” என்று உத்தரவிட்டார்.

முஸ்லிம் படைகள் நகரை நெருங்கின. அதைக் கண்டுவிட்ட பாரசீகர்களின் படையொன்று எதிர்கொள்ள வேகமாய்க் கிளம்பி வந்தது. ஆனால் நெருங்கி வந்தவர்கள், முஸ்லிம் படைகளுக்குப் பின்னால் காற்றில் படபடக்கும் கொடிகளையும், விண்ணை நோக்கி எழும்பும் புழுதிப் படலத்தையும் பார்த்து அப்படியே அச்சத்தில் உறைந்து விட்டனர்!

"அடேயப்பா! இது முஸ்லிம் படையின் முற்பகுதிதான். பெரும்படையொன்று பின்னால் வந்து கொண்டிருக்கிறது போலிருக்கிறது” என்று பதைத்துப் போனவர்கள், வந்த வேகத்தில் அப்படியே வேகமாய்த் திரும்பி ஓட ஆரம்பித்து விட்டார்கள். கையில் அகப்பட்ட பொருள்களை மட்டும் எடுத்துத் தயாராய் இருந்த கப்பல்களில் தூக்கிப் போட்டுக் கொண்டு நகரை விட்டுவிட்டு அப்படியே ஓடிப்போனார்கள். இல்லை, கப்பலில் மிதந்து போனார்கள் - போயேவிட்டார்கள்.

ஒரு வீரர்கூட இழப்பில்லை. அப்படியே இலகுவாக நகரைக் கைப்பற்றினார் உத்பா ரலியல்லாஹு அன்ஹு. அதன் பிறகு சூட்டுடன் சூடாக டைக்ரீஸ் நதிக்கு மறுபுறமுள்ள ஃபுராத் (Furat) மாநிலம், மெய்ஸன் (Meisan), அபர்குபாஸ் (Abarqubaz) எனக் கிராமங்கள், ஊர்கள் அனைத்தையும் விரைவாகக் கைப்பற்றினார். அனைத்தும் முஸ்லிம்கள் வசமாகின.

ஊர்கள் கைவசமாயின. அவற்றுடன் சேர்த்து அங்கிருந்த செல்வமும் கைவசமாயிற்று.  செல்வமென்றால் செல்வம் கொஞ்சமும் அனுமானிக்க முடியாத அளவு செல்வம். விவரிப்பு மிகையில்லை. ஏனெனில் மதீனா திரும்பிய ஒரு போர் வீரனிடம் ”என்ன, உபுல்லாவில் நிலைமையெல்லாம் பரவாயில்லையா?” என்று யாரோ விசாரிக்க, அவன் பதில் கூறினான், ”நீ கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் அவர்கள். அல்லாஹ்வின் மேல் ஆணையாக, நான் கிளம்பும்போது அவர்கள், தங்கத்தையும் வெள்ளியையும் படியில் அளந்து கொண்டிருந்தார்கள்” என்றான். இதைக் கேள்விப்பட்ட மக்கள் அசந்து விட்டனர்! சிலர், ”வா, வா! நாமும் போய்ப் பார்ப்போம்!” என்று உபுல்லாவிற்குப் பயணம் கிளம்பி விட்டார்கள்.

வீரர்களின் வளவாழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த உத்பா ஆனந்தமடையாமல் கவலைப்பட ஆரம்பித்தார். உண்மையான ஆழ்ந்த கவலை. தன் போர் வீரர்களுக்கு இதெல்லாம் சரிப்படாது என்று அவருக்குத் திட்டமாகத் தோன்றியது. இந்த நகரில் இப்படியே  தங்கிவிட்டால் செல்வமும் சுகபோக வாழ்க்கையும் அவர்களைத் திசை திருப்பிவிடும் என்று நம்பினார். உடனே கலீஃபா உமருக்குக் கடிதம் எழுதினார். ”நான் இங்கு ஓர் இடம் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அங்கு ஒரு நகரை நிர்மாணித்து அதனைக் காவல் படையினருக்கான நகரமாக அமைக்க வேண்டும். உங்கள் அனுமதி வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?”

கலீஃபா அனுமதியளித்தார். ஹிஜ்ரீ 14ஆம் ஆண்டு பஸரா நகரம் உருவானது. திட்டமிட்டு உருவாக்கப்பட்டது அந்நகரம். அதில் முதற் கட்டமாக பெரிய பள்ளிவாசல் கட்டப்பட்டது. பெரிய பள்ளிவாசல் என்றதும் பளிங்குக் கற்கள், நெடிய மினாராக்கள் என்றெல்லாம் கற்பனை வேண்டாம். மக்கள் பெருமளவு குழும வசதியான இடம், கூரை, சுற்றிலும் சுவர். அவ்வளவுதான் பெரிய பள்ளிவாசல்.

உத்பா கவனித்துக் கொண்டிருந்தார். குடியமர்ந்த மக்கள் நிலம் வாங்குவதிலும் கட்டடங்கள் கட்டுவதிலும் போட்டியிட ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் தன்னிலை மறந்து கொண்டிருப்பதாக அவருக்குப் பட்டது. சில மாதங்களுக்கு முன்னர்தான் வேகவைத்த வெறும் அரிசியை உண்ண நேர்ந்து, ”ஆஹா! பிரமாதமான உணவு” என்று மகிழ்ந்தவர்கள் அவர்கள். இப்பொழுது பாரசீகர்களின் பலவகை உணவுகளுக்கும் முந்திரி, பாதாம் எனப் பருப்பு முதலியன் திணிக்கப்பட்ட இனிப்பு வகைகளுக்கும் அதன் சுவைக்கும் அடிமையாக ஆரம்பித்து விட்டார்கள் என்பது தெரிந்தது.

இது ஆரோக்கியமில்லை என்று பட்டது உத்பாவிற்கு. இவ்வுலக வாழ்க்கையும் அதன் சொகுசுகளும் எங்கே தனது இறை விசுவாசத்தை அழித்து விடுமோ என்ற ஆழ்ந்த அச்சம் அவர் மனதில் உருவாக ஆரம்பித்தது. அரண்மனை வேண்டாம், மாளிகை வேண்டாம், ஏன் ஒரு மண்வீடுகூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு முன்போல் ஒரு கூடாரத்திலேயே தன் வாழ்க்கையைத் தொடர ஆரம்பித்தார் அவர். அங்கும் அவருக்கு மக்களின் கவலை தொடர்ந்தது. உலக உல்லாசம் அவர்களின் நிரந்தர மறுமை வாழ்க்கையை மறக்கடித்து விடுமோ என்ற கவலை வாட்டியெடுக்க, ஒருநாள் அனைவரையும் பள்ளிவாசலில் குழும வைத்தார்.

"நீங்கள் அனைவரும் ஒன்றை நன்றாக உணர வேண்டும். இவ்வுலக வாழ்வு வெகுவிரைவில் மறைந்து போய், அழியாத வேறு உலகத்திற்கு நாம் அனைவரும் செல்லப் போகிறோம். அங்கு உங்களின் மிகச்சிறந்த நற்செயல்களுடன் நீங்கள் செல்ல வேண்டும். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு சிறு கூட்டம் இருந்தது. அதில் நான் ஏழாவது உறுப்பினன். ஊர்விலக்கின்போது அபூதாலிப் கணவாயில் எங்களுக்கு உண்ணுவதற்கு மரங்களின் இலையைத் தவிர வேறொன்றுமில்லை. அதை உண்டு எங்கள் உதடுகளிலும் வாய்களிலும் கொப்புளங்கள் ஏற்பட்டன. ஒருபோது என்னிடம் அணிந்துக் கொள்ளச் சரியான உடையேதும் இல்லாத நிலை. யாரோ தூக்கியெறிந்து விட்டுப்போன மேலங்கி ஒன்று தெருவில் கிடந்தது. அதை எடுத்துப் பாதியாகக் கிழித்து ஒரு பாதியை நானும் மறுபாதியை ஸஅத் இப்னு அபீவக்காஸும் இடுப்பில் அரைத்துணியாகக் கட்டிக் கொண்டோம்".

"இன்றோ அந்தச் சிறு குழுவில் இருந்த ஒவ்வொருவரும் சில நகரங்களுக்குத் தலைவராகியுள்ளோம். உலகோரின் பார்வையில் நான் உயர்ந்தவனாகவும் அல்லாஹ்வின் பார்வையில் கீழ்த்தரமானவனாகவும் ஆகிவிடாமல் இருக்க நான் அவனிடமே பாதுகாவல் தேடுகிறேன்" என்று உரையாற்றி விட்டு, தன் கூடாரத்திற்குச் திரும்பிச் சென்று விட்டார் உத்பா பின் கஸ்வான் ரலியல்லாஹு அன்ஹு.

பஸரா மக்களுக்கு மட்டுமா இந்த நினைவூட்டல்? கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? அவரது அந்த உரை, "அதெல்லாம் அந்த மற்றவர்களுக்கு, அதுவும அந்தக் காலத்தில்! அது இந்தக் காலத்திற்கும் அல்ல; எனக்கும் அல்ல" என்று நம்மில் யாராவது சொல்லத் துணிந்தால் அவற்றையெல்லாம் இங்கு எழுதுவதும் படிப்பதும் காலவிரயம்!

பிறகு சில நம்பகமானவர்களைத் தேர்ந்தெடுத்து அந்நகரின் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, ஹஜ் பயணம் கிளம்பினார் உத்பா. திரும்பும் வழியில்தான் மதீனாவில் கலீஃபா உமரை சந்தித்தார். எவ்வளவோ வேண்டியும் உமர் அவரைப் பதவிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பதாய் இல்லை. இத்தகைய தகுதியானவர்களை எப்படி விடுவிப்பார் அவர்? இன்னும் சொல்லப் போனால் இப்படிப்பட்டவர்கள்தாமே அவருக்குத் தேவை.

"உங்களுடைய பொறுப்பையும் நம்பிக்கையையும் என் தலைமேல் சுமத்திவிட்டு, என்னை மட்டும் தனியனாய் விட்டுவிட்டு நீங்களெல்லாம் ஓடி விடுவீர்களா? அதெல்லாம் விடுவிக்க முடியாது” என்று தீர்மானமாய்ச் சொல்லிவிட்டார் உமர்.

*****

வேறு வழியில்லாமல் பஸராவிற்குக் கிளம்ப வேண்டியதானது உத்பாவிற்கு.

ஒட்டகத்தில் ஏறியவர் பிரார்த்தனை புரிந்தார்: ”யா அல்லாஹ். என்னை அங்குக் கொண்டு சேர்க்காதே!”

அதை முற்றும் முழுக்க ஏற்றுக் கொண்டான் அவன். மதீனாவிலிருந்து மிக அதிக தூரம்கூட கடக்கவில்லை. ஒட்டகம் இடறி விழுந்தது; உத்பாவும் கீழே விழுந்தார். அவ்வளவுதான், அங்கேயே இறந்து போனார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அந்தத் தோழர்களின் தோளேறி நம்மை அடைந்துள்ள கலிமாவை நம் உதடுகள் உச்சரிக்கும்போது, ஊர் விலக்கப்பட்டு, உண்ண உணவின்றி, பாலையில் விளைந்த கள்ளிச் செடிகளையும் மரஇலைகளையும் தின்றதால் புண்ணாகிப்போன அவர்களது உதடுகளும் அவை உதிர்த்தவையும் ஒருசிலவாவது நம் நினைவுக்கு வந்தால் நம்மில் நல்ல பல மாற்றங்கள் நிச்சயம், இன்ஷா அல்லாஹ்!

ரலியல்லாஹு அன்ஹு!

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!

< தோழர்கள்-1 | தோழர்கள்-2 | தோழர்கள்-3 | தோழர்கள்-4 >

Comments   

Basheer
+1 #1 Basheer 2010-03-30 11:03
யா அல்லா‍ஹ்! அது போன்ற ஒரு சமுதாயம் மீண்டும் உருவாவதற்கும் அதில் என் போன்றோர்கள் இருப்பதற்கும் அருள் புரிவாயாக!
Quote | Report to administrator
Alaudeen
0 #2 Alaudeen 2010-03-30 11:54
அளவற்ற அருளாளனும் நிகரற்றஅன்புடைய ோனுமாகிய அல்லாஹ்வின்திரு ப்பெயரால் (துவங்குகிறேன்)

அன்புச்சகோதரர்களுக்கு :
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) (இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

ஸஹாபாக்களின் (ரலியல்லாஹு அன்ஹு ) தியாகம், உறுதியான ஈமான் எங்கே, நாம் எங்கே. அவர்களின் தியாகங்களை படிக்கும்பொழுது கண்ணீர் வருகிறது. துளி அளவாவது நாமும் வாழ வேண்டும் என்று – ஆனால் உலக வாழ்க்கை கவர்ச்சியில் மறந்து விடுகிறோம். வல்ல அல்லாஹ் மறுமையில் வெற்றியைத்தர இவ்வுலக வாழ்வை நம் அனைவருக்கும் சாதகமாக்கித்தரவ ேண்டும். சகோதரர்கள் அனைவரும் துவாச்செய்யுங்க ள்.
Quote | Report to administrator
mohamad.nasar
0 #3 mohamad.nasar 2010-03-30 21:16
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்களது பயனுள்ள இந்த ஆக்கங்களை முழுமையாக பிரிண்ட் எடுக்கும்போது ஒருசில எழுத்துகள் குறைவாக பிரிண்ட் ஆகின்றன. தயவுசெய்து பிரிண்ட் வசதியை சரிசெய்து தரவும். நானும் வாசித்து மற்றவர்களும் பயன்பெற நான் இந்த உங்களது ஆக்கங்களை பிரிண்ட் செய்து கணிணி வசதி இல்லாதவர்களுக்க ும் கொடுக்கின்றேன். பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.
Quote | Report to administrator
சிராஜ் முஹம்மது காரைக்குடி-கேம்ப்-அபுதாபி-யுஏஇ
+1 #4 சிராஜ் முஹம்மது காரைக்குடி-கேம்ப்-அபுதாபி-யுஏஇ 2010-04-04 18:40
அஸ்ஸலாமு அலைக்கும்

முடிவுரை படிக்கும் போது முட்டும் கண்ணீருக்கு தடை போட முடியவில்லை. வளரட்டும் தொடர்.

சிராஜ்
காரைக்குடி
04/04/2010
Quote | Report to administrator
Ayoobkhan
0 #5 Ayoobkhan 2010-04-06 10:24
அல்ஹம்துலில்லாஹ்.

எளிமையான ஆழமான எழுத்துக்கள்,அர ுமையான மொழி திறமை.கட்டுரையா ளரின் அடுத்த தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற ோம். தொடரையும் சேகரித்துக்கொண்டிருக்கின்ற ோம்.அல்லாஹ் உங்களின் பணிகளை எளிதாக்கி நன்மையை வழங்குவானாக என பிரார்த்திக்கின்றவனாக

உங்கள் அன்பு சகோதரன்.
Quote | Report to administrator
K.Ahamed
0 #6 K.Ahamed 2010-05-05 19:41
நம்மையும் அவர்கள் போல் ஆக்குவானாக. ஆமீன்.
Quote | Report to administrator
சிக்கந்தர்
0 #7 சிக்கந்தர் 2010-06-16 07:15
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்),
வெறும் இஸ்லாமிய சிந்தனை மட்டும் அத்தகைய சஹாபா பெருமக்களை உருவாக்கவில்லை.
மார்க்கத்தை தங்கள் செயலில் கொண்டு வந்து காட்டினார்கள்.
நம்மைப் பற்றி சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்....?
நம் செயல்களின் பொறுப்பாளி நாமே,
இன்ஷாஅல்லாஹ், நம்மை பக்குவப்படுத்த முயற்ச்சிகள் செய்வோம்.
Quote | Report to administrator
ahmadullah.s
0 #8 ahmadullah.s 2011-09-17 18:17
assalamu alaikkum naamum varalaaru therindhaal thaan varalaaru padaikka mudium......... .aagave andha message i suvarasyamaaga edukkaaml nammudaiya vaalvilum konduvara muyarchippom. inshaa allah.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்