தேவன் நாடினால் …
கி.பி. 1095ஆம் ஆண்டு. நவம்பர் மாத இறுதியில் ஒருநாள், காலை நேரம். பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள க்ளெர்மாண்ட் நகரத் திடலொன்றில் மக்கள் குழுமியிருந்தனர்.
போப் அர்பன் II நிகழ்த்திய உத்வேகமிக்க உரை, குழுமியிருந்த மக்களை அப்படியே நிலைகுத்தி நிற்க வைத்தது. கட்டுண்டு கிடந்தது கூட்டம். அவர்களின் உள்ளத்துள் பகைமை விறகு அடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. உணர்ச்சிப் பிழம்பில் அவர்கள் தகித்தனர். அவரது உரை வீச்சு, அடுத்த சில மாதங்களில் மேற்குலகு எங்கும் எதிரொலிக்க ஆரம்பித்து, அடுத்தடுத்த நூற்றாண்டுகள் தொடரப் போகும் சிலுவை யுத்தத்தைப் பற்ற வைத்தது.
பிரான்ஸ் நாட்டின் வடபகுதியில் ஸ்ஸத்தியோன் சூர் மார்ன் (Chatillon-sur-Marne) என்றோர் ஊர். அவ்வூரின் மேட்டுக்குடியைச் சேர்ந்த குடும்பத்தில் கி.பி. 1035 ஆம் ஆண்டு (ஹிஜ்ரீ 427) ஓதோ டி லாகெரி (Otho de Lagery) என்பவர் பிறந்தார். கி.பி 1068ஆம் ஆண்டு க்ளூனி (Cluny) நகரில் உள்ள மடாலயத்தில் சேர்ந்து துறவியாகி, அச் சமயம் பிரபலமாக இருந்த போப் கிரிகோரி VII க்குச் சேவை புரிய ஆரம்பித்துவிட்டார் அவர்.
கி.பி. 1080ஆம் ஆண்டு ஆஸ்டியாவின் (Ostia) தலைமைப் பாதிரி, 1084-1085ஆம் ஆண்டுகளில் ஜெர்மனியில் உள்ள தேவாலயத்தில் சேவை என்று மதப்பணிகளில் ஆழ ஈடுபட்டிருந்த ஓதோ டி லாகெரி, கி.பி. 1088 ஆம் ஆண்டு போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அன்றிலிருந்து அவர் போப் அர்பன் II என்றாகிவிட்டார்.
போப்பின் திருச்சபைக்குத்தான் கிறிஸ்தவ ராஜ்ஜியத்தின் முழு அதிகாரம் உள்ளது என்ற கிரிகோரியின் கருத்து அவரிடம் சேவை செய்ய ஆரம்பித்த காலத்திலேயே போப் அர்பனின் மனத்துள்ளும் ஆழப் பதிந்துவிட்டது. அதனால், போப் கிரிகோரிக்கும் ரோமப் பேரரசர் ஹென்றி IVக்கும் சண்டை ஏற்பட்டபோது, அர்பனின் முழு ஆதரவும் கிரிகோரிக்குத்தான். அதிகாரத்தில் போப்பின் திருச்சபை மேலோங்கி இருக்க வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, முஸ்லிம்களுக்கு எதிரான காழ்ப்புணர்வும் எண்ணவோட்டமும் அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. தேவாலயங்களை ஒன்றிணைத்து ரோம கத்தோலிக்க ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வது அவரது முக்கியமான நோக்கம் என்றாலும் இஸ்லாத்தின் மீது பதிந்து போயிருந்த தீவிரமான எதிர்ப்புணர்வினால் என்ன விலை கொடுத்தேனும் இஸ்லாத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற எண்ணமும் அவருக்குள் உருவாகியிருந்தது.
1088ஆம் ஆண்டு அவர் போப்பாகப் பதவியேற்றபோது, ஜெர்மனியின் சக்ரவர்த்தியுடன் நீண்டு நீடித்துவந்த கசப்பான அதிகாரப் போரிலிருந்து போப்பின் திருச்சபை தள்ளாடி மீண்டுக்கொண்டிருந்தது. ஏறக்குறைய கவிழ்ந்துவிடும் நிலையில்தான் அது இருந்தது என்று சொல்ல வேண்டும். அப்படியான இக்கட்டான சூழ்நிலையில் பதவியேற்ற அர்பன் II, ரோம் நகரின் லேடெரன் அரண்மனையை மெதுமெதுவே ஆறு ஆண்டுகளில் மீண்டும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார். ஏனெனில் அது போப் திருச்சபையின் பாரம்பரிய மையமாகத் திகழ்ந்துவந்தது.
எச்சரிக்கையான அணுகுமுறை, இராஜதந்திரம், திட்டமிட்ட சீர்திருத்தக் கொள்கைகள் என்று செயல்பட்டு, போப்பின் திருச்சபைக்கு கௌரவத்தைப் படிப்படியாகத் திரும்பக்கொண்டுவந்தார் அவர். 1095ஆம் ஆண்டின்போது இந்த மறுமலர்ச்சி தென்பட ஆரம்பித்துவிட்டது என்றாலும் லத்தீன் தேவாலயத்தின் தலைமையாகச் செயல்படவும் ஐரோப்பாவின் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரின் ஆன்மீகத் தலைமையாகச் செயல்படவும் விரும்பிய திருச்சபையின் நோக்கம் மட்டும் எட்டாக் கனியாகவே இருந்தது.
oOo
1095ஆம் ஆண்டு மார்ச் மாதம் இத்தாலியிலுள்ள பியாஸென்ஸா (Piacenza) நகரில் திருச்சபையின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றைப் போப் தலைமையேற்று நடத்திக்கொண்டிருந்தார். அப்பொழுது அவரிடம் பைஸாந்தியச் சக்ரவரத்தி அலக்ஸியாஸ் கொம்னெனாஸ் அனுப்பிவைத்த தூதுக்குழு வந்தது. ‘லத்தீன் படையிலிருந்து ஒரு பகுதியை உதவிக்கு அனுப்பி வையுங்கள். முஸ்லிம் படைகளை விரட்ட வேண்டும்’ என்பது செய்தி. அதாவது உதவிப் படை கோரிக்கை. தம் தலைமையில் தம் படையினருடன் லத்தீன் உதவிப்படையை இணைத்து, வலிமையைப் பெருக்கிக்கொண்டு ஸெல்ஜுக்கியர்களுடன் போர் என்பதே பைஸாந்தியச் சக்ரவரத்தி அலெக்ஸியாஸின் திட்டம். ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐரோப்பாவிலிருந்து கிளம்பிவரப்போகும் மூர்க்க மனிதர்களின் அலையில் அவரது பேரரசு சிக்கி மூழ்கப்போகிறது என்பதை அப்போது அவர் அறியவில்லை; கனவிலும் நினைக்கவில்லை.
திருச்சபையின் மேலாண்மைக்கும் கிறிஸ்தவத்தின் ஒட்டுமொத்த அதிகாரப்பீடமாக அது உயர்வதற்கும் மடியில் வந்துவிழுந்த இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள போப் அர்பன் II திட்டமிட்டார். 1095 ஜுலை மாதத்திலேயே மளமளவென்று அதற்கான காரியங்களில் இறங்கிவிட்டார். முதற்கட்டமாக ஆல்ப்ஸின் வடக்குப் பகுதியில் அவரது விரிவான பிரச்சாரப் பயணம் தொடங்கியது. ‘நவம்பர் மாதம் க்ளெர்மாண்ட் நகரில் கிறிஸ்துவ தேவாலயத்தின் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்’ என்று அறிவிக்கப்பட்டது. அதற்கடுத்து முக்கியமான மடாலயங்கள் ஒவ்வொன்றாகச் சென்று சிலுவை யுத்தத்திற்கான விதைகளை வாகாகத் தூவி அவர்கள் மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, தமக்கான ஆதரவை போப் பெருக்க ஆரம்பித்தார்.
தம்முடைய நோக்கத்திற்கான ஆதரவு, தம் இனக்குழு மக்களிடம்தான் முதலில் கிடைக்கும்; அங்கிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்று கருதி அவர் தேர்ந்தெடுத்த இடம்தான் க்ளெர்மாண்ட். அவரது தாயகமான பிரான்ஸ் நாட்டில் தெற்குப் பகுதியில் அது அமைந்திருந்தது. தாம் துவங்கப் போகும் யுத்தத்தை வழிநடத்த இரண்டு பேர்வழிகளின்மீது அவருக்குக் கண். ஒருவர் பாதிரியார் அதிமார். போப் திருச்சபையின் தீவிர ஆதரவாளர் அவர். தேவாலயத்தின் முக்கியப் புள்ளி. அடுத்தவர் ‘துலூஸின் கோமான்’ ரேமாண்ட். (Count Raymond of Toulouse). பிரான்ஸின் சக்திவாய்ந்த பெரும் செல்வந்தர்.
பன்னிரெண்டு பேராயர்கள், எண்பது பாதிரியார்கள், தொன்னூறு மடாதிபதிகள் க்ளெர்மாண்ட் நகரில் குழுமினார்கள். தொன்னூறு நாள்கள் திருச்சபை விவாதம் நடைபெற்றது. கூடிப் பேசினார்கள். விவாதித்தார்கள். திட்டத்தைச் சரி செய்தார்கள். எல்லாம் ஆனபின், நவம்பர் 27ஆம் தேதி, தாம் ஒரு சிறப்பு உரை ஆற்றப்போவதாக அறிவித்தார் போப். க்ளெர்மாண்ட் நகரில் பெருங் கூட்டம் கூடியது.
கி.பி. 1095ஆம் ஆண்டு. நவம்பர் 27ஆம் நாள். காலை நேரம். திடலில் குழுமியிருந்த மக்கள் கூட்டத்தில் உரையாற்றினார் போப் அர்பன் II.
“ஏ ஃபிராங்க் இனத்தவர்களே! தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே! அவன் நேசத்திற்குரியவர்களே! ஜெருசலத்தின் எல்லையிலிருந்தும் கான்ஸ்டன்டினோபிள் நகரிலிருந்தும் கொடூரமான கதையொன்று வந்தடைந்துள்ளது. தேவனுக்கு முற்றிலும் அந்நியமான ஓர் இனம், கிழக்கத்திய கிறிஸ்தவர்களின் நிலங்களுள் அத்துமீறி நுழைந்து, அங்கு தீமையைப் பரப்பி வருகின்றது. அவ்வின மக்கள் நம் புனிதத் தலங்களை வீழ்த்தி, தேவாலயங்களைக் கொள்ளையடித்து, அவற்றை எரித்து அழித்துக்கொண்டிருக்கிறார்கள். தாம் கைப்பற்றியவர்களுள் ஒரு பகுதியினரைத் தம் நாடுகளுக்கு இழுத்துச் சென்றுவிட்டார்கள். மற்றவர்களைக் கொடூரமாகத் துன்புறுத்திக் கொன்றிருக்கின்றார்கள். அவர்களுடைய அசுத்தத்தால் நம் புனிதத் தலங்கள் தீட்டுப்பட்டு, மாசடைந்துவிட்டன. கிரேக்க(பைஸாந்திய)ர்களின் ராஜாங்கம் அவர்களால் துண்டாடப்பட்டுவிட்டது. இரண்டு மாதப் பயணத்திலும் கடக்க முடியாத அளவிற்கு விஸ்தீரணமான பிரதேசத்தை அவர்களிடம் பைஸாந்தியர்கள் இழந்துள்ளனர். இந்தத் தவறுகளுக்குப் பழிவாங்கும் சேவகமும் இழந்த பிரதேசங்களை மீட்டெடுக்கும் கடமையும் உங்கள் மீதன்றி வேறு யார் மீது சாரும்?
ஆயுதங்களிலும் துணிவிலும் உடல் வலிமையிலும் அதன் செயல்பாடுகளிலும் – இதர மக்களுக்கு அன்றி – உங்களுக்கே தேவன் மேன்மையை வழங்கியுள்ளான்; மகிமைப் படுத்தியுள்ளான். உங்களை எதிர்ப்பவர்களின் உச்சந்தலை உரோமத்தைப் பிடித்து அடக்கும் சக்தியை அருளியுள்ளான். உங்கள் மூதாதையர்களின் கருமங்கள் உங்களை முன்நகர்த்தட்டும். உங்கள் மனங்களை ஆண்மைமிக்க சாதனைகளுக்குத் தூண்டட்டும். அசுத்த ஜாதியரின் அசுத்தங்களால் மதிப்பின்றி, மாசுபடுத்தப்பட்டு, இழிவாக்கப்பட்டுள்ள புனிதத் தலங்கள், அவர்கள் தம்வசம் வைத்திருக்கும் நம் மீட்பரின் கல்லறை – பரிசுத்த கிறிஸ்து, நம் தேவனின் கல்லறை – உங்களைத் தூண்டட்டும்.
உங்களுடைய சொத்தும் குடும்பத்தின் மீதான அக்கறையும் அதன் விவகாரங்களும் உங்களைத் தாமதப்படுத்த வேண்டாம். நீங்கள் குடியிருக்கும் இந்நிலம் அனைத்துத் திக்கிலும் கடல்களாலும் மலைகளாலும் சூழப்பட்டு உங்களுடைய பெரும் மக்கள் தொகைக்கு மிகக் குறுகிய நிலமாய் அமைந்துள்ளது. செல்வம் என்று ஏதும் இல்லை. குடியானவர்களுக்கேகூடப் போதுமான உணவு விளைச்சலில்லை.
அதனால் நீங்கள் ஒருவரையொருவர் கொலை புரிகின்றீர்கள். ஒருவர்மீது ஒருவர் போர் தொடுக்கிறீர்கள். பரஸ்பரம் காயங்களை ஏற்படுத்திக்கொண்டு அதில் மாண்டும் போகின்றீர்கள். எனவே உங்களுக்குள் நிலவும் வெறுப்பு விடைபெறட்டும். உங்களுடைய பூசல் ஓயட்டும். தன்னினப் போர்கள் நின்று போகட்டும். அனைத்துக் கருத்து வேறுபாடுகளும் சச்சரவுகளும் நீங்கட்டும்.
புனிதக் கல்லறைக்குச் செல்லும் சாலையை நோக்கி அடியெடுத்து வையுங்கள். தீய இனத்தினரிடமிருந்து அதை மீட்டு எடுங்கள். உங்களது ஆளுமைக்கு அதைக் கொண்டுவாருங்கள். ஜெருசலம் அனைத்து நிலங்களையும்விட உயர்வானது. இனிய சொர்க்கத்தின் பகுதி. அது உலகின் மையத்தில் அமைந்துள்ள உயர்வான நகரம். அது உங்களை உதவிக்கு அழைக்கிறது. எழுங்கள்! அதைக் காப்பாற்றுங்கள்! அழியாப் புகழ் கொண்ட பரலோக இராச்சியத்தின் உத்தரவாதத்துடன் உங்களது பாவங்கள் மன்னிக்கப்பட, சுய விருப்பத்துடன் இப் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.”
“போப் அர்பனின் உரை, உலக வரலாற்றில் மிக முக்கியமானதோர் உரை” என்கிறார் ஃபிலிப் ஹித்தி (Philip Hitti) எனும் வரலாற்று ஆசிரியர். இரண்டு முக்கிய காரணங்களை முன்வைத்து, மக்களை ஆயுதம் ஏந்தத் தூண்டினார் அவர். ஒன்று, பைஸாந்தியத்தில் உள்ள கிறிஸ்தவ சகோதரர்களைக் காப்பாற்றுவது. இரண்டாவது ஜெருசலம். உலகின் மையப் புள்ளி அது. கிறிஸ்துவத்தின் ஊற்று; ஏசு கிறிஸ்து, வாழ்ந்து மடிந்த நகரம் என்று ஒப்புமையற்ற புனிதத்தை அந்நகருக்கு அவர் அளித்து விவரித்தார்.
அப்படியெல்லாம் விவரித்தாலும் ஜெருசலம் ஏழாம் நூற்றாண்டிலிருந்து முஸ்லிம்களின் கையில் இருந்துவரும் நிலையில் இன்று அந் நகரின் மீட்பிற்கு எப்படி ஓர் அவசரத் தேவையை உருவாக்குவது? தாம் தூண்டும் போருக்கு நியாயத்தைக் கற்பிப்பது? அண்மைய வரலாறு கிறிஸ்தவர்களின் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் எந்த காரணத்தையும் அளிக்கவில்லையே! மனத்திற்குள் தோன்றியிருக்கும் இல்லையா?
ஒன்றும் பிரச்சினையில்லை. காரணத்தைக் கற்பிப்போம். மக்களின் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் நிகழ்வுகளைப் புனைவோம். அவையெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவசியமா என்ன? அல்லது சொல்வதெல்லாம் பொய் என்று யாராவது ஆதாரத்தை ஏந்தி வந்து மறுக்கத்தான் போகிறார்களா? அதற்கெல்லாம் வாய்ப்பில்லையே. எனவே கட்டவிழ்த்தார்.
மனிதாபிமானற்ற காட்டுமிராண்டிகளாக முஸ்லிம்கள் உருவகப்படுத்தப்பட்டார்கள். துருக்கியர்கள் பைஸாந்தியர்களைச் சகட்டுமேனிக்கு வெட்டிக் கொல்கின்றார்கள்; தேவாலயங்களை உடைத்து நொறுக்குகின்றார்கள்; புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவப் பயணிகள் முஸ்லிம்களால் துன்புறுத்தப்படுகின்றார்கள்; கிறிஸ்தவச் செல்வந்தர்கள் மீது அநியாயத்திற்கு வரி விதிக்கப்பட்டு அவர்களது செல்வம் பிடுங்கப்படுகிறது; ஏழைகள் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர் என்றெல்லாம் ஒன்றன்மீது ஒன்றாகப் புளுகுகள் அடுக்கப்பட்டன. அங்குள்ள கிறிஸ்தவர்களின் நிலை அடிமைத்தனத்திற்கு உள்ளாகிவிட்டது. கட்டாயமாக விருத்தசேதனம் செய்யப்படுகிறது, பெண்களின் மானம் மீறப்படுகிறது, குடல்கள் பிடுங்கி எறியப்படுகின்றன, எரித்துக் கொல்லப்படுகின்றனர் என்று அவற்றின்மீது எண்ணெய் ஊற்றப்பட்டது. எனவே, அந்த அந்நிய விரோத சக்தியுடன் போரிடுவது ஐரோப்பாவில் கிறிஸ்தவர்கள் தமக்குள் போரிடுவதைவிட முக்கியமானது என்று தெரிவிக்கப்பட்டது.
சுருக்கமாகச் சொல்வதென்றால் ‘இஸ்லாமோஃபோபியா’. இன்று நமக்கு அறிமுகமாகியுள்ள அவ்வார்த்தை வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், அதன் பின்னணி ஆயிரம் ஆண்டுகால பழமை வாய்ந்தது.
அதற்கு முன்வரை நியாயமான காரணத்திற்காகப் போர் செய்வதுகூட பெரும் பாவமாகக் கருதப்பட்டிருந்த கிறிஸ்தவர்கள் மத்தியில் இப்பொழுது போப் அர்பன் அதை உடைத்தது மட்டுமல்லாமல், சிலுவை யுத்தத்தில் கலந்துகொள்பவர்களின் அனைத்துப் பாவங்களும் துடைத்து எறியப்படும் என்று அறிவித்தார். தங்களது பாவங்களை நினைத்து மறுகி, வருந்திக் கொண்டிருந்த அம்மக்களுக்குச் சரியான வடிகால் தென்பட்டது.
போப் தன் உரையை முடித்த உடனேயே பாதிரியார் அதிமார் டி மொன்டெயில் (Adhemar de Monteil) எழுந்து நின்றார். போப்பின் முன் குனிந்து, இந்தப் புனிதப் போரில் தாமும் இணைய அனுமதி வேண்டும் என்றார். போப்பின் உரையால் தாக்கப்பட்டு, நெக்குருகிக் கிடந்த மக்களிடம் அந்தக் காட்சி பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பைத் தூண்டியது. பெருந் திரளான மக்கள் கூட்டம் போப்பிடம் ஓடியது. தாங்களும் அவ்விதம் குனிந்து தங்களின் ஒப்புதலைத் தெரிவித்தனர். அனைவரின் கைகளிலும் சிலுவை உயர்ந்தது.
ஏக குரலில் லத்தீன் மொழியில் அத்திரள் உரத்து முழங்கியது – “Dues vult – தேவன் நாடினால்!”
oOo
வருவார் …
– நூருத்தீன்