முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இந்தியா

திப்பு சுல்தான்திப்புவின் கட்டளை உண்மையில் உயர்ஜாதி மடாதிபதிகளின் கோட்டையையே உலுக்கிப் போட்டது. ஜாதியின் பேரில் சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த உயர்ஜாதித் தம்புரான்களுக்கு, தங்களின் கட்டுப்பாடற்ற சுதந்திரமான சுகவாழ்வு நீடிக்க அவர்களின் ஜாதிச் சடங்கு, சம்பிரதாயங்களை நிலைநிறுத்த வேண்டியது கட்டாயமாக இருந்தது. அதன் காரணமாக, ஆங்கிலேயர்களுடன் இணைந்து திப்புவிற்கு எதிராகப் பரவலான பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தனர்.

உயர்ஜாதித் தீண்டாமை மற்றும் அடக்குமுறைக்கு எதிரானத் திப்புவின் சமூக சீர்த்திருத்த முயற்சிகள் அனைத்தும் இந்து மதத்துக்கு எதிரான செயல்பாடுகளாகத் திரிக்கப்பட்டதோடு, திப்பு ஒரு இந்து மதவிரோதி என்று பிரச்சாரமும் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவைத் தங்களின் காலனி நாடாக வென்றெடுப்பதற்குப் பெரும் சவாலாக விளங்கிய திப்புவை அழிக்க வேண்டிய கட்டாயம் ஆங்கிலேயர்களுக்கு. அதே நேரத்தில், உள்நாட்டு மக்களிடையே உயர்ஜாதி மடாதிபதிகளால் திப்புவுக்கு எதிராகப் பரப்பப்பட்ட இந்தப் பொய் செய்தி, ஆங்கிலேயருக்கு எதிரான திப்புவின் போராட்டத்தில் ஒரு பெரும் பகுதி மக்கள் ஆங்கிலேயர்களுக்குத் துணை செல்லும் நிலையை ஏற்படுத்தியது இந்திய வரலாற்றின் இருண்டபகுதி என்றே வர்ணிக்கலாம்.

அதனால், திப்புவின் சமூக சீர்திருத்த முயற்சிகளெல்லாம் மதமாற்றத்திற்கான திட்டங்களாக சாதாரண மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் நிலையும் அதன் மூலம் இந்தியாவை அடக்கியாள வந்தேறிய ஆங்கிலேயர்களுடன் இணைந்து திப்புவை ஒழித்துக் கட்டும் சதிவேலைகளை உயர்ஜாதி ஜமீந்தார்கள் செய்வதற்கு இலகுவாகவும் அமைந்தது.

மக்களுக்குப் பயன்விளைவிக்கும் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதைக் கூறுவது இஸ்லாமாக இருப்பின், அதனை "மதமாற்ற" காரணம் கூறி சமூகத்திற்குப் பயன் விளைவிப்பதிலிருந்து தடுத்து விடுவதை எக்காலத்தும் உயர்ஜாதியர்கள் கடைப்பிடித்தே வந்துள்ளனர்.

வட்டியின் அடிப்படையிலான பொருளாதாரத் திட்டங்களால் உலகமே சீரழிந்து நிற்கும் இவ்வேளையில்கூட, வட்டியில்லாத வங்கி முறையை அமல்படுத்த முன்வந்த கேரள அரசின் முயற்சியை உயர்ஜாதியைச் சேர்ந்த சுப்ரமணியசுவாமி மதத்தின் காரணம் கூறி உச்சநீதிமன்றத்தில் தடையேற்படுத்திய அண்மை நிகழ்வு, இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

கேரள பெண்சமூகத்தில் திப்பு சுல்தான் நடைமுறைப் படுத்திய மற்றொரு சீர்திருத்தம்தான், பெண்களின் மேலாடை விஷயத்தில் தலையிட்டதாகும். இந்து சமுதாயத்தில் உயர்ஜாதி நம்பூதிரிப் பெண்களைத் தவிர வேறு எவருக்கும் இடுப்புக்கு மேல் ஆடை அணிவது கூடாத செயலாக இருந்தது. அவ்வாறு நம்பூதிரிப் பெண்களைத் தவிர மற்ற பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடைஅணிவது, மிகப்பெரிய மதவிரோதச் செயலாக நாயர் பெண்களும் இன்னபிற தாழ்த்தப் பட்ட பெண்களும் கருதி வந்தனர்.

அதனைக் குறித்து எழுத்தாளர் அனந்த கிருஷ்ணன் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

"நாயர் சமுதாயத்தில் (கீழ்ஜாதியினரில்) ஆணும் பெண்ணும் உடம்பின் மேல்பாகத்தை மறைப்பது தங்களின் எஜமானர்களுக்கும் பிரபுக்களுக்கும் செய்யும் மிகப் பெரிய எதிர்ப்பாக கருதப்பட்டிருந்தது".

அப்போதைய சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வேதங்களையும் உபயோகித்து கீழ்ஜாதிமக்களை அந்த அளவுக்குத் தவறான சிந்தனையில் உயர்ஜாதியினர் ஊறவைத்திருந்தனர். இடுப்புக்கு மேல் உடம்பை மறைக்காத பெண்களின் நடைமுறை, சாதாரண வாழ்க்கையை மிக அலோங்கலப்படுத்தும் என்றும் மக்களின் முன்னேற்றத்துக்கு அது பெரிய தடையாக இருக்கும் என்றும் திப்பு புரிந்து கொண்டார். அதன் காரணமாக, இத்தகைய ஜாதி சம்பிரதாயத்தை விட்டொழிக்க வேண்டும் என்றும் எல்லாப் பெண்களும் கட்டாயமாக தங்களின் மார்புகளை மறைக்க வேண்டும் என்றும் திப்பு சுல்தான் கண்டிப்பாக உத்தரவிட்டார். ஆனால், தன்னுடைய சீர்திருத்த முயற்சிகள் அனைத்தும் மக்களின் சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்கும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குமான முயற்சிகள்தாம் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்து, தமது சீர்திருத்த முயற்சிகளை மக்கள் ஏற்றுக் கொள்மாறு செய்வது திப்புவுக்கு மிகக்கடினமானதாக இருந்தது.

தங்களின் கருத்துத் தெரிந்த காலம் முதல் தாங்கள் கடைபிடித்து வந்த ஆச்சார முறைகளை மீறுவதற்குக் கீழ்ஜாதி மக்கள் ஒருபோதும் தயாராகவில்லை. திப்புவின் சீர்திருத்தக் கட்டளைகள் அனைத்தும் அவர்களுக்கு மதமாற்ற முயற்சிகளாகவே உயர்ஜாதியினரால் திரித்துக் காட்டப் பட்டன. குறிப்பாக, இடுப்புக்கு மேல் உடம்பு முழுவதையும் மறைக்கும் விதத்திலான மேலாடை அணிவது, முஸ்லிம் பெண்கள் ஆடைக்கு ஒப்பானதாக இருந்ததால், அவ்வாறு மேலாடை அணிவதையே மதமாற்றத்திற்கு ஒப்பானதாக அவர்கள் கருதினர்.

அக்காலத்தில் மட்டுமன்றி தற்போதைய வரலாற்று ஆசிரியர்களிலும் பெரும்பாலோர், திப்பு இந்து மதச் சம்பிரதாயங்களில் மாற்றம் ஏற்படுத்த முயன்றதாக குற்றம் சுமத்துவதுண்டு. ஆனால், வரலாற்றை நடுநிலையாக உற்று நோக்கினால், இக்குற்றச்சாட்டு அநியாயமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் அனைத்தும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அனைவரையும் சமமானவர்களாக ஆக்கி,  அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதற்குமான முயற்சியாகவே இருந்தன. அதற்கு, கி.பி. 1785இல் மலபார் கவர்னருக்குத் திப்பு எழுதிய கடிதம் ஆதாரமாகத் திகழ்கிறது.

திப்புவின் சீர்த்திருத்தக் கட்டளைகள் மதமாற்ற முயற்சிகளாகவும் இந்து மதத்தை அழிப்பதற்கான முயற்சிகளாகவும் திரிக்கப்பட்டதை அறிந்த திப்பு தன் நிலைபாட்டை மலபார் கவர்னருக்குக் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்:

"மலபாரில் சில பெண்கள் தங்களின் மார்புகளை மறைக்காமல் திரிவதைப் பார்த்தபோது எனக்கு வருத்தம் ஏற்பட்டது. அக்காட்சி வெறுப்பையும் நாகரீக, பண்பாட்டு சிந்தனைகளுக்கு எதிரான தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. சன்மார்க்க சிந்தனைக்கு நிச்சயமாக அது எதிரானதுதான். இப்பெண்கள் ஒரு தனிப்பட்ட பரம்பரையில் உள்ளவர்கள் எனவும் அவர்களின் சம்பிரதாயப்படி, அவர்கள் தங்கள் மார்புகளை மறைப்பது கூடாத காரியம் எனவும் நீங்கள் எனக்கு விளக்கமளித்தீர்கள். நான் அதனைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். நீண்டகால சம்பிரதாயம் காரணமாகவா, அல்லது ஏழ்மையின் காரணமாகவா அவர்கள் தங்கள் மார்புகளை மறைக்காமல் இருக்கின்றனர்?

ஏழ்மையின் காரணமாகவே அவர்கள் தங்களின் மார்புகளை மறைக்காமல் இருக்கின்றனர் எனில், அவர்களுடைய பெண்கள் தங்களின் கவுரவத்திற்குக் களங்கம் ஏற்படாவண்ணம் கண்ணியமாக உடையணிவதற்குரிய உதவிகளை நீங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

அதற்கு மாற்றமாக நீண்டகால பழக்கமுடைய, கைவிடக் கூடாத சம்பிரதாயம் என்பது காரணம் எனில், அவர்களுடைய தலைவர்களிடையே நெருக்குதல் கொடுத்து இந்த (அரை நிர்வாணச்) சம்பிரதாயத்தை இல்லாமலாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அவர்களின் மதத் தத்துவங்களுக்கு எவ்வகையிலும் கேடுவிளைவிக்கா விதத்தில், சமாதானமான முறையிலான உபதேசத்தின் மூலமாக மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்" (கேரள முஸ்லிம்களின் போராட்ட வரலாறு - பேராசிரியர்: கெ.எம்.பகாவுத்தீன், பக்கம் 118,119.)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பகுதி - 1 | பகுதி -2 | பகுதி - 3 | பகுதி - 4

Comments   

ELIYAS
0 #1 ELIYAS 2012-01-22 19:36
useful article.I want more history for Tipu sultan.(IN TAMIL)
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்