முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பொதுவானவை

நான் முதலிலேயே ஒன்றைத் தெளிவுபடச் சொல்லிவிடுகிறேன்.  நான் RJ பாலாஜியைப் போன்றோ, எழுத்தாளர் ஜெயமோகனைப் போன்றோ பெரிய பொருளாதார மேதை எல்லாம் கிடையாது.  அதேபோல், ‘நாடு நன்றாக இருக்கவேண்டும் என்றால் நான்கு பேர் செத்தால் பரவாயில்லை’ எனச் சொல்லும் தேசபக்தனும் கிடையாது. 

அட குறைந்தபட்சம் மோடியின் இந்த அறிவிப்பு பற்றி புகழ்ந்து பேச டாலர்களில் சம்பளம் வாங்கும் வெளிநாட்டு வாழ் இந்தியன் என்ற தகுதியாவது எனக்கு உண்டா என்றால் அதுவும் கிடையாது.  நான் சராசரியாக என்னைச் சுற்றி நடப்பவற்றை வேடிக்கை பார்த்து, மக்கள் படும் துன்பங்களை வைத்து, நிபுணர்களின் கருத்துக்களை வைத்து விஷயங்களை அனுமானிப்பவன்.  மீனைக் கொன்று வைப்பதுதான் மீன்குழம்பு என்றும், மீனவனைக் கொன்று வைப்பதல்ல மீன்குழம்பு என்ற அளவில் மட்டுமே ஞானம் உள்ள சராசரிக் குடிமகன் நான்.  அந்தக் கண்ணோட்டத்தில் தான், ‘ரூபாய் நோட்டு செல்லாது’ என்ற மோடியின் அறிவிப்பை நான் அணுகியிருக்கிறேன்.

மோடியின் அறிவிப்பை மேலோட்டமாகப் பார்த்தால் ஏதோ மிகத்துணிச்சலான முடிவு போல, யாருமே செய்யத் துணியாத ஒரு நடவடிக்கை போலத் தெரியும்.  ஆனால் அந்த அறிவிப்புக்கு முன்பான, பின்பான தனிமனிதக் கருத்துகள், ஊடக அலசல்கள், சமூகதள விவாதங்கள் எல்லாம் சோகம் கலந்த விசித்திரமும், வேடிக்கையும் நிரம்பியவை.  “மோடி இதைச் செய்தது நல்லதுதான்” , “மோடி இதைச் செய்தது பெரிய தவறு”  “இவ்வளவு பிரச்சினை வரும் என்று தெரிந்துமா மோடி இதைச் செய்தார்?” என பல தரப்பட்ட கருத்துருவாக்கங்கள் மக்களிடையே சுற்றி வருகின்றன.  இது எல்லாவற்றும் மேல் இதுகுறித்து விவாதிக்கும் மக்களும் சரி, ஊடகங்களும் சரி, இதை இந்திய அரசின் அறிவிப்பாகப் பார்ப்பதைவிட மோடியின் முடிவு என்றே அணுகுகிறார்கள்.  இந்திய அரசின் செய்திக் குறிப்புகளிலேகூட மோடி அரசு, மோடியின் அறிவிப்பு என்றுதான் எல்லா இடங்களிலும் வருகிறது.  அதனால் மோடி என்ற தனிமனிதரைப் பற்றிய ஒரு அலசலைச் செய்யாமல் இந்த விஷயத்தை நம்மால் ஆழ்ந்து மட்டுமல்ல - மேலோட்டமாகக்கூட அணுக முடியாது.

இந்தியா என்பது சிங்கப்பூர் அல்ல.  இந்தியா, இங்கிலாந்தோ, கனடாவோ அல்ல.  இந்தியா, பல்வேறு தரப்பட்ட மக்கள் வாழும் பரந்துபட்ட பிரம்மாண்டமான நாடு.  பிற நாடுகள் அடுக்கி வைக்கப்பட்ட சிறிய அலமாரிகள் என்றால், இந்தியா சிதறிக் கிடக்கும் பிரம்மாண்ட நூலகம்.  இந்த நாட்டை திடீரென ஒருநாள் டிவியில் தோன்றி ரஜினி போல பஞ்ச் டயலாக் பேசி ஆளவோ, மாற்றவோ முடியாது.  ஆனால் அதைத்தான் தான் செய்வதாக மோடி காட்டியிருக்கிறார்.  அதற்காகத்தான் அவர் அன்று இரவே பலரால் கொண்டாடவும்பட்டார்.  ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் அவர் மிருக பலத்துடன் ஆட்சிக்கு வந்ததே இந்த அணுகுமுறையால்தான் என்பது புரியும்.

இந்தியாவின் கடந்த இரண்டு, மூன்று தலைமுறைகள் படித்து பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றத் துவங்கியபின் இந்தியச் சமூகம், மதம், சாதிக்கெல்லாம் அப்பாற்பட்டு அடிப்படையில் வகுப்புரீதியாக இருவேறாக பிளவுபட்டிருக்கிறது. வங்கியில் கடன் அட்டை வைத்திருப்பவர்கள்; வங்கியில் கணக்கே இல்லாதவர்கள். இவ்வளவுதான் இந்தியா.  இதில் இந்தப் படித்த கூட்டத்தில் பெரும்பான்மையினருக்கு அரசியல் அறிவு என்பது வாட்சப் பல்கலைக்கழகத்தில் மீம்களை வைத்துப் பயில்வதுதான்.  அவர்களுக்குத் துரித அரசியல், துரித மாற்றம் என்பதில் தான் நம்பிக்கை இருக்கிறது.  இன்ஸ்டண்ட் காப்பித்தூள் போல ‘இன்ஸ்டண்ட் மாற்றத்தை’ யார் அவர்களுக்கு வாக்குறுதியாக வழங்குகிறார்களோ, அவர்களைக் கண்மூடித்தனமாக இவர்கள் ஆதரிக்கிறார்கள்.  அதனால்தான் வாட்சப்பிலும், இணையத்திலும் பரவும் பொய்களை இவர்களால் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் கண்மூடித்தனமாக நம்ப முடிகிறது.  பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவை இல்லை.  எண்பதுகளில் சுட்டுப்போட்டாலும் மோடி போன்ற ஒருவரால் பிரதமராகி இருக்க முடியாது.  குஜராத்தை மக்கள் எக்காலத்திலும் மன்னித்திருக்கவே மாட்டார்கள்.  ஆனால் இப்போதுள்ள சூழலில் மீண்டும் ஒருமுறை மோடி பிரதமர் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  ஏனெனில், அரசியல் அறிவு என்பது ஒரு ஏழையைப் பார்த்து, “நாட்டின் நன்மைக்காக செத்துப்போயேன்.  என்ன வந்துவிட்டது?” என்று எந்தக் கூச்சமும் இல்லாமல் கேட்கும் அளவிலும், “பணமே இல்லாத அவன் எதுக்குய்யா உங்கள் கருப்புப் பண ஒழிப்புக்காக சாகவேண்டும்,” எனக் கேட்பவனை தேசத்துரோகி என விளிப்பதிலும் தான் இருக்கிறது.  மக்களுக்கு, தன் சக மனிதனின் மேல் இருக்கும் இந்த ஃபாசிசம் தான் மோடியின் முதலீடு.

மோடியின் அறிவிப்பு வந்த நாள் முதலே நான் அதை தீவிரமாக எதிர்த்துக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் நண்பர்கள் பலரோ நாட்டுக்காக, நாட்டுக்காக என அம்மை வந்தவன் காய்ச்சலில் அரற்றுவதைப் போல அரற்றியபடியே இருக்கிறார்கள்.  ‘Go cashless’ எனச் சாதாரணமாகச் சொல்கிறார்கள்.  கீரை விற்கும் அம்மாளும், டீ விற்கும் தாத்தாவும் எப்படி ‘Go cashless’ ஆவார்கள் என்ற அடிப்படை அறிவுகூட இல்லை.  இந்த தேசபக்தர்கள் சொல்லும் வகையில் எல்லோரும் நன்றாகக் கற்று, தொழில்நுட்பரீதியாக முன்னேறிவிட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம், கீரை விற்கும் அம்மாளின் 100ரூ வங்கியில் சிக்கிக்கொண்டது என்றால் அவரால் வாடிக்கையாளர் சேவையை எளிதாக அணுக முடியுமா?

உதாரணத்திற்கு, சென்ற வாரம் ரெட்பஸ் (Redbus) செயலியில் ஒரு பஸ் டிக்கெட் புக் செய்தேன். Transaction fail ஆகிவிட்டது.  ஆனாலும் 600ரூபாயை என் கணக்கில் இருந்து எடுத்து விட்டார்கள்.  மீண்டும் முயற்சி செய்தபோது மறுபடியும் Transaction fail ஆனது. ஆனாலும் மீண்டும் 600ரூபாய் எடுத்துவிட்டார்கள்.  ஆக டிக்கெட் எதுவும் புக் செய்யாமலேயே ரெட்பஸ்க்கு எனது 1200ரூ போய்விட்டது.  வழக்கமாக இந்தப் பணம் தானாகவே ஓரிரு நாட்களில் திரும்பிவிடும்.  ஆனால் வரவில்லை.  ரெட்பஸ் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து அந்த ஆங்கிலக் கணினிக் குரல் சொல்லும் 1,8.6,7 என்ற வழித்தட எண்களை எல்லாம் அழுத்தி, இண்டியானா ஜோன்ஸ் போல ஒருவழியாக வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிக்காக 30 நிமிடம் காத்திருந்து அவரைப் பிடித்துவிட்டேன்.   அவர், ‘7 நாட்களில் பணம் வந்துவிடும்’ என்றார்.  8 நாட்கள் ஆகியும் வரவில்லை.  மீண்டும் முதலில் இருந்து எல்லா வேலையும் செய்து வாடிக்கையாளர் சேவை அதிகாரியைக் கேட்டால் இன்னொரு 7 நாள் என்றார்கள்.  செம்ம்ம கடுப்பாகிவிட்டது.  உயர் அதிகாரியிடம் லைனைக் கொடு எனப் பலமுறை ஆங்கிலத்தில் சத்தம் போட்டவுடன் உயரதிகாரி வந்தார்.  அவரிடம் மீண்டும் ஆதி முதல் அந்தம் வரை ஆங்கிலத்தில் விலக்கிய பின், "இரண்டு நாள்ல காசு வந்துரும்," என்றார்.  கடுப்புடன் ஃபோனை வைத்துவிட்டு காசுக்காக காத்திருக்கிறேன்.  இதை ஏன் சொல்கிறேன் என்றால் Go cashless என்பதெல்லாம் சரிதான்.  ஆனால் ஒரு சாமானிய மனிதன் அணுகும் வகையில் இந்தியாவில் சேவைகள் இருக்கிறதா?

வங்கி கணக்கில் 90ரூபாய் இருந்தால் நண்பனிடம் 110ரூபாய் கைமாற்று வாங்கி வங்கியில் போட்டு, அதை 200 ரூபாயாக ஏடிஎம்யில் இருந்து எடுத்துவிட்டு, 110ரூபாய் கைமாற்றை நண்பனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, 90ரூபாயை செலவு செய்கின்றவர்கள்தான் இந்தியாவின் பெரும்பான்மை மக்கள்.   எனக்கு நடந்ததைப் போல, cashless transactionயில் அவர்கள் காசு ஒரு வாரம் மாட்டிக்கொண்டால் அவர்கள் அதிர்ச்சியில் மாண்டே போவார்கள்.

நம்மூரில் 90% வாடிக்கையாளர் சேவை மையங்களில் இந்தியும், ஆங்கிலமும் தான். ஏ.டி.எம்களிலும் இதே நிலைதான்.  வாடிக்கையாளர் மையங்களுக்கு அழைத்தாலே 1 அமுக்குங்கள், 3 அமுக்குங்கள், 7 அமுக்குங்கள், 9 அமுக்குங்கள் என கணிக்குரல் எங்கெங்கோ இழுத்துச் சாவடிக்கும் என அஞ்சியே நான் பெரும்பாலும் ஃபோன் செய்வதில்லை.  நன்றாக ஆங்கிலம் தெரிந்த எனக்கே, படித்த எனக்கே இந்த நிலைமை என்றால் எளியோர் என்ன செய்வார்கள்?

"தம்பி கொஞ்சம் பேசிக்கொடுங்க தம்பி," என வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு அழைத்துவிட்டு தயங்கியபடியே ஃபோனை நீட்டும் எத்தனையோ எளிய மக்களை நான் பார்த்திருக்கிறேன்.  "தம்பி கொஞ்சம் காசு எடுத்துக்கொடுங்க தம்பி… தம்பி கொஞ்சம் ஃபார்ம் ஃபில் பண்ணிக்கொடுங்க தம்பி… இங்கிலிஷ்ல பேசுறாங்க என்னனு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க தம்பி... தம்பி... தம்பி... தம்பி..." என யாரோ ஒரு அம்மாவோ, அப்பாவோ, பெரியம்மாவோ, தாத்தாவோ பாட்டியோ கேட்கும்போதெல்லாம் பாவமாக இருக்கும்.  ரத்தம் கொதிக்கும்.  இந்திய அரசின் திட்டங்களேகூட ‘பேட்டி பச்சாவ்’, ‘ஜன் தன் யோஜனா’, ‘ஜில் ஜங் ஜக்’ என்று பாமர மக்களால் உச்சரிக்கக்கூட முடியாத வகையில்தானே பெயரிடப்படுகின்றன!  மக்கள் பேசும் மொழியில் சேவைகளை வழங்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத அரசு,  தனியார்களை வலியுறுத்த துப்பில்லாத அரசு, எளிய மக்களை, படிக்காத மக்களை cashless ஆகப் போங்கள் எனச் சொல்கிறது.  அதை அப்படியே வழிமொழிந்து கடன் அட்டை வைத்திருக்கும் ஆட்களும் சொல்கிறார்கள்.

நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன். போகுமிடமெல்லாம் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் மோடியிடம் ஐஃபோன் ஒன்றைக் கொடுத்து ஒரே ஒரு ஃபோட்டோ எடுக்கச் சொன்னால் நான்கு நாட்கள் ஆனாலும் முடியாது.   இதுதான் தொழில்நுட்பத்தின் சிக்கல்.  முதுநிலை பட்டதாரிகளான என் பெற்றோருக்கேகூட இதுவரை ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு எட்டாத விஷயம் தான்.  நிலைமை இப்படியிருக்க, இதையெல்லாம் கொஞ்சம்கூட யோசித்துப் பார்க்காமல் காய்கறிக்காரர்கள் கார்டு மிஷின் வைத்துக்கொள்ள வேண்டும், கீரை விற்கும் பெண் Paytm வைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் பேசித் திரிகிறார்கள்.  சக மனிதனைப் பற்றி கொஞ்சம்கூடக் கவலையே இல்லாமல் தன்னை,  தன் வாழ்கை முறையை, தன் தொழில்நுட்ப அறிவை மட்டுமே அளவுகோலாக வைத்து சமூகத்தின் தேவைகளை நிர்ணயிக்கும் இவர்களை என்ன சொல்லி அழைப்பது?  இதே மனநிலையை நீங்கள் மோடியிடமும் பார்க்கலாம்.  அதனால் தான் இவர்களை மோடியின் மூலதனம் என்கிறேன்.

பலமான எதிர்ப்பு வந்தபின் 500ரூ, 1000ரூ நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைப் பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்க ஒரு கேள்வி பதில் பாணியை தீட்டியிருக்கிறார் மோடி.  ஒரு அறிவிப்பைச் செய்தபின், அது அமலுக்கும் வந்தபின் அதைப் பற்றி மக்களிடம் கருத்துக் கேட்க விழையும் பிரதமர் உலகத்திலேயே மோடி ஒருவராகத்தான் இருப்பார். எனினும் அவர் தயாரித்திருக்கும் கேள்விகளில் உதாரணத்திற்கு சில கேள்விகளைச் சொல்கிறேன்,

1. ஊழலுக்கு எதிராகப் போராடியவர்கள் இப்போது கருப்புப் பணம், ஊழல், பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் போராடுகிறார்கள் என நம்புகிறீர்களா?
அ)ஆம்; ஆ)இல்லை.

2. நோட்டுக்களைச் செல்லாது என அறிவித்தது, கருப்புப் பணம், ஊழல், பயங்கரவாதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவும் என நினைக்கிறீர்களா?  அ) உடனடியாக உதவும் ஆ.)சில காலம் சென்றோ, நாட்பட்டோ உதவும் இ.)குறைந்தபட்ச உதவிதான் இருக்கும். ஈ) தெரியவில்லை.

முதல் கேள்வியில் எவ்வளவு விஷமத்தனம் பாருங்கள்.  மோடியின் மக்கள் விரோத அறிவிப்பை எதிர்த்தாலே அது கருப்புப்பண ஆதரவாம். அடுத்த கேள்வியில் இன்னும் ஒருபடி மேலே போய், மோடியின் அறிவிப்பு நாட்டுக்கு “உதவும்” என்று பதில் அளிக்கலாம்.  இல்லை என்றால் “தெரியாது” என பதில் அளிக்கலாம்.  “உதவாது” என்ற தேர்வே கிடையாது.  இதைவிட பட்டாடை உடுத்தி வரும் ஃபாசிசத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?

சரி இதைக் கூட விட்டுவிடுவோம்.  அந்தக் கேள்வி பதில்கள் அவரது ஆண்டிராய்ட் செயலியில் இருக்குமாம்.  அதில் மக்கள் தங்கள் கருத்துகளைச் சொல்லலாமாம்.  இது போன்ற ஒரு கேலிக்கூத்து எந்த நாட்டிலாவது நடக்குமா?  ஏ.டி.எம்களில் வரிசையில் நிற்கும் சாமானிய மக்கள் எல்லோரிடமும், நிற்க முடியாமல் உயிரை விட்டுக் கொண்டிருக்கும் முதியோர்களிடமும், மூத்திரப்பையோடு வந்து க்யூவில் நின்ற வயதானவரிடமும் ஸ்மார்ட் ஃபோன் இருக்குமா?  துணிச்சல் இருந்தால் இதைப் பேப்பரில் அச்சிட்டு பாஜக தொண்டர்களை வைத்து கியூவில் நிற்கும் மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும்.  அப்போதுதானே உண்மை தெரியும்.

தனக்கு ஆதராவாக இருக்கும் ஒரு தரப்பு மக்களை மட்டுமே மனத்தில் வைத்துச் செயல்படும் இந்தப் பாணி மோடிக்கு மட்டுமே சொந்தமானதல்ல.  சில மாதங்களுக்கு முன்பு, “விவசாயிகளே! தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்,” என்று ராஜ்நாத்சிங் விவசாயிகளுக்கு டிவிட்டரில் வேண்டுகோள் வைத்தார்.  தற்கொலை செய்யும் நிலையில் உள்ள எந்த விவசாயி டிவிட்டரில் கணக்கு வைத்திருக்கிறான்?  ‘பேட்டி பச்சாவ்’ என்ற பெண் சிசு கொலைக்கு எதிரான திட்டத்திற்கு ஆதரவாக உங்கள் பெண் குழந்தையுடன் செல்ஃபி எடுத்து இணையத்தில் போடுங்கள் என அறிவிக்கிறார் மோடி.  இணையத்தில் செல்ஃபி போடும் அளவில் வாழ்க்கை நடத்துகின்றவன் எவன் பெண் சிசுக்களை கொலை செய்கிறான்?  

நாம் இவ்வளவு ஆழமாக எல்லாம் யோசிக்க வேண்டாம்.  புதிதாக வந்திருக்கும் 2000ரூ நோட்டைப் பாருங்கள்.  ‘பணப் பதுக்கலுக்கு எதிரான நடவடிக்கை’ என்ற பெயரில் மோடி ஒரு அறிவிப்பைச் செய்கிறார்.  ஆனால் பதுக்குவதற்கு இன்னும் எளிமையாக இருக்கும் வகையில் சிறிய அளவில் 2000ரூ நோட்டுக்களை அச்சடிக்கிறார். (அதில் சிப் இருக்கிறது, ஏவுகணை இருக்கிறது என எஸ்.வீ.சேகர் போன்ற அணு ஆராய்ச்சியாளர்களால் செய்யப்பட்ட பரப்புரைகள் எல்லாம் ஒருபக்கம்). சரி அச்சடித்த நோட்டாவது ஒழுங்காக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.  இந்திய அரசியல் சாசனத்திற்கு மாறாக தேவநகரி எழுத்தில் எண்கள் உள்ளது;  சாயம் போகிறது;  எழுத்துப்பிழை இருக்கிறது;  ஏ.டி.எம்களில் வரும் பல நோட்டுகள் பாதி அழிந்து வருகிறது.  அதாவது கள்ளநோட்டுகளை விடவும் கேவலமாக இருக்கிறது.  இப்படி மகா மட்டமாக ஒரு நாட்டின் நோட்டு இருந்தால் அது அந்த நாட்டின் மரியாதையைக் குலைக்காதா?  முன்பிருந்த தரமான 500ரூ, 1000ரூ நோட்டுக்களை விட மட்டமாக இருக்கும் இந்த 2000ரூ நோட்டுக்களை இன்னும் எளிதாக கள்ளநோட்டாக அச்சடிக்க முடியுமே!

அதுமட்டுமா, எந்தப் பணக்காரன் க்யூவில் தன் பணத்தை மாற்ற நின்று கொண்டிருக்கிறான்?  20% ஆரம்பித்து, 40% வரை கமிஷன் வைத்து கனகச்சிதமாக பழைய நோட்டு மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதே?  திருடர்கள், கருப்புப்பண புரோக்கர்கள் எல்லோரும் ஒரே மாதத்தில் பயங்கர கோடீஸ்வரர்களாக ஆகும் வாய்ப்பை அல்லவா மோடி அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது?  உலகத்தில் யுத்தங்கள் நடக்கும் சமயங்களில்கூட உணவும், நீரும் தான் ரேஷன் முறையில் மக்களுக்கு வழங்கப்படும்.  ஆனால் உலக வரலாற்றில் எங்குமே இல்லாத வகையில் பொதுமக்கள் உழைத்து, சிறுகச் சிறுக சேர்த்த காசு அவர்களுக்கே ரேஷன் முறையில் வழங்கப்படுவது இதுதான் முதல்முறை.  இந்த அவலத்திற்கெல்லாம் க்ரீடம் வைக்கும் வகையில் பேரவலமாக மக்களின் கைகளில் திருடர்கள் போல மை வைக்கும் கூத்தையும் செய்துகொண்டிருக்கிறது மோடி அரசு.  10 மாதங்களாக திட்டமிடும் லட்சணம் இதுதானா?

ஒரு இரவில் 86% இந்தியப் பணத்தை செல்லாது என அறிவிக்கும் ஒரு பிரதமர், குறைந்தபடம் 60% பணத்தையாவது ஏற்கனவே அச்சிட்டிருக்க ஆவண செய்திருக்க வேண்டாமா?  மிகச்சிறந்த நிர்வாகி மோடி என்ற கெட்டிக்காரன் புளுகு ஒரே அறிவிப்பில் பொய் என நிரூபிக்கப்பட்டுவிட்டது அல்லவா?  அப்படி என்றால் இத்தனை கோடி மக்கள் க்யூவில் நின்று செத்தது எல்லாம் வீண்தானே?  ஒரு பயனும் இல்லாத, இன்னும் சொல்லப்போனால் தொலைநோக்குப் பார்வையில் மக்களுக்கும், இந்தியப் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரும் கேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் மோடியின் இந்த நடவடிக்கையால் யாருக்குத்தான் நன்மை?  இப்படி ஆயிரம் கேள்விகளை நம்மால் வைக்க முடியும்.   

இவ்வளவு வெளிப்படையாக, இவ்வளவு தவறாக ஒரு பிரதமர் எல்லாவற்றையும் செய்யும்போதும் அவருக்குப் பலர் முட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதுதான் ஆச்சரியம் தரும் விஷயம்.  இந்துமத வெறியர்களை விடுங்கள்.  அவர்களுக்கு மோடியை விட்டால் ஆள் கிடையாது என்பதால் மோடிக்கு குளிர்கிறது என்றால் சொந்த வீட்டை எரித்துக்கூட குளிர்காயக் கொடுப்பார்கள்.  நான் சொல்வது மோடியை அதிபயங்கரமாக நம்பும் சராசரியான ஆட்களைப் பற்றி.

வெளிநாட்டில் வாழும் தெரிந்த பெண் ஒருவர் மோடியின் அறிவிப்பு வந்த நாளில் இருந்து இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் மிகவும் சந்தோஷமாக தேசபக்தி திளைக்க குதூகலமாக இருந்தார்.  இரண்டொரு நாட்களில் மொத்த நாடும் மோடியின் இந்த திட்டத்தை தூற்றுவதையும், ஊரில் இருக்கும் தன் குடும்பத்தினரின் மூலம் நாட்டு நிலவரத்தையும் தெரிந்துகொண்டு குழப்பமான மனநிலைக்கு வந்துவிட்டார் அந்தப் பெண்மணி.  அவர் மூளையைக் குடையும் ஒரே கேள்வி, “இது தவறான திட்டமென்றால் மோடி எப்படி இதைச் செய்தார்?” என்பதுதான்.  ஏனென்றால் ஆங்கிலப்படங்களில் காட்டுவதைப் போல மோடி என்றால் மிகப்பெரிய நிர்வாகி என்றும், அவரே நினைத்தாலும் அவரால் தவறான முடிவுகளை எடுக்கவே முடியாது என்றும் அந்த மூளை, தொடர் பரப்புரைகளால் பதப்படுத்தப்பட்டிருக்கிறது.  நம்மூரில் ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளைஞர்கள் பலரின் நிலையும் இதுதான்.  இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் வரலாற்றைப் பார்க்க வேண்டும்.

உலக வரலாற்றில் ஹிட்லரின் காலத்தை, பரப்புரை ஆட்சி (Propagandist rule) என்பார்கள். ஹிட்லர் என்பவர் தனிப்பெரும் சக்தி என்றும், நாட்டில் பாலும் தேனும் ஓடுகிறது என்றும், ஹிட்லர் என்ன செய்தாலும் அது நாட்டின் நன்மைக்குதான் என்றும் தொடர் பரப்புரைகளால் மீண்டும் மீண்டும் நம்ப வைக்கப்பட்டார்கள் மக்கள்.  அதன்பிறகு அதே பாணியை பின்பற்றிக் கொண்டிருப்பது மோடி தான்.  மோடியின் இந்தப் பரப்புரை திட்டத்திற்குப் பெரிதும் உதவி செய்தவை இந்திய ஊடகங்கள்.  அர்னாப் கோஸ்வாமி போன்றவர்கள் ராகுல் காந்தியை ஆரம்பம் முதலே கோமாளி போலவும், மோடியை மக்களை மீட்க வந்த இரட்சகர் போலவும் சித்தரித்ததன் பலன்தான் இது.  ராகுல் என்ன செய்தாலும் அது கேலி செய்யப்பட்டது.  மோடி மூச்சுவிட்டாலும் அது தூக்கிக் கொண்டாடப்பட்டது.  பல பழைய நகைச்சுவை துணுக்குகள் எல்லாம் ராகுலைக் கிண்டல் செய்து வாட்சப்பில் வலம் வந்தன.  அந்த துணுக்குகளில்கூட மோடி கதாநாயகனாக சித்தரிக்கப்படுவார்.

சமீபத்தில் ஒரு ஓய்வுபெற்ற பேராசிரியரோடு அலுவலகம் ஒன்றின் வரவேற்பரையில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  டிவியில் ராகுல் ஆங்கிலத்தில் மோடியின் அறிவிப்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது அந்தப் பேராசிரியர், “இவர் எப்போதுதான் தெளிவாகப் பேசப்போகிறாரோ?” என நக்கல் செய்தார்.  அதாவது ராகுல் என்ன பேசுகிறார் என்பதைக் கேட்காமலேயே அந்தப் பேராசிரியரால் ராகுலை நக்கல் அடிக்க முடிகிறது.  ஆனால் Mrs (மிசஸ்) என்பதை M-R-S (எம்.ஆர்.எஸ்) எனத் தவறாக மேடையிலேயே வாசிக்கும் மோடியின் மீது இப்படியான கேலி கிண்டல்கள் இல்லை.  இதுதான் சூழ்ச்சி நிறைந்த ஊடகத் திரிபின் வெற்றி.

இதை வெகு சிரத்தையுடன் பாஜக இணைய அணி தொடர்ந்து செய்து வந்ததன் பலன்தான் அந்த வெளிநாட்டுவாழ் பெண் போல பலர் உருவாகக் காரணம்.  ஒரு கட்டத்தில் மோடியை சூப்பர்மேன் என்றே நம்பத் துவங்கிவிட்டார்கள்.  இப்போது மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில், இவ்வளவு மோசமான ஒரு அறிவிப்பை மோடி வெளியிட்டிருப்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.

ஏதேதோ முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது அதிர்ச்சியில் உறைந்துபோய், “மோடி எப்படி இதைச் செய்தார்?” எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  உண்மையில் இந்தக் கேள்வியின் பதில் மிகவும் எளிது.  இப்படி ஒரு அறிவிப்பை மோடியால் மட்டும் தான் செய்ய முடியும்!!  ஏனெனில் இதற்கு மக்களைப் பற்றி சிறிதும் அக்கறை இல்லாத தன்மையும், அளவுகடந்த தன்முனைப்பும், ஃபாசிசமும், தன்னையே அளவுக்கதிகமாக நேசித்து பெருமைப்படும் நார்சிச மனநிலையும் வேண்டும்.  அது உலகில் இப்போது மோடிக்கு மட்டுமே உண்டு!

நண்பர் ஒருவரின் வீட்டில் பணிபுரியும் வயதான அம்மாவுக்கு இன்னமும் 500ரூ, 1000ரூ நோட்டுக்கள் செல்லாது என்ற விஷயம் தெரியவில்லை.  தன்னிடம் உள்ள சில்லறையில் பொருட்கள் வாங்கிக் கொள்கின்றவர் அவர்.  மீதிக் காசை எப்போதும் 500, 1000களாக மாற்றி சேர்த்து வைத்துக் கொள்ளும் வழக்கம் உடையவர். நாங்களும் ஒவ்வொரு முறையும் அவரிடம் மோடியின் அறிவிப்புக் குறித்துப் புரியவைக்க முயலும் போதெல்லாம், “நோட்டு எதுவும் கிழியல தம்பி.  நான் பத்திரமால்ல வச்சிருக்கேன்… அப்புறம் எப்படி செல்லாம போகும்?” எனக் கேட்கிறார்.  கருப்புப் பண ஒழிப்பு, பயங்கரவாதம் என்றெல்லாம் அவரிடம் காரணம் சொல்ல முற்பட்டால், “கருப்புப் பணமா? என்கிட்ட என்னாத்த கருப்புப் பணம்?” எனக் கேட்டுவிட்டு நாங்கள் விளையாட்டுக்கு வம்பிழுப்பதாக எண்ணி வெற்றிலைக் கறை தெரிய சிரிக்கிறார்.  இப்படியே இது தொடர்ந்து கொண்டிருந்தால் டிசம்பர் 31 அன்று அவரிடம் இருக்கும் சில 500, 1000 நோட்டுகள் மோடி, ஸ்டைலாக அறிவித்ததைப் போல வெற்றுத்தாள் ஆகிவிட்டது என்பது அவருக்கு தெரியவரும்போது நெஞ்சைப் பிடித்தபடி சாய்வார்.  அவரிடம் உள்ள சேமிப்பை எப்படியாவது பெற்று அதற்கு பதில் புது நோட்டுகளை அவருக்கு பெற்றுத் தர வேண்டும்.  ரொம்பவும் நச்சரித்துக் கேட்டால் எங்கள் மீதே அவருக்கு சந்தேகம் வந்தாலும் வந்துவிடும்.

இப்படியான அறியாமை நிரம்பிய கோடிக்கணக்கான மக்கள் நிரம்பியதுதான் இந்தியா.  இப்படிப்பட்ட இந்தியாவில்தான் திடீரென ஒருநாள் திரையில் தோன்றி, “இன்று இரவு பண்ணிரண்டு மணி முதல் உங்கள் 500ரூ, 1000ரூ நோட்டுகள் வெற்றுத்தாள்கள்,” என அறிவித்தார் மோடி.  அதனால்தான் மயக்க மருந்து கொடுக்காமல் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை என இந்த நடவடிக்கையை குறிப்பிட வேண்டியிருக்கிறது.  மயக்க மருந்து கொடுக்கப்படாமல் செய்யப்படும் எந்த அறுவை சிகிச்சையும் மரணத்தில் தான் முடியும் என்பது சொல்லித் தெரியவேண்டியதல்ல.  இந்தக் கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை 56 பேர் மோடியின் உத்தரவினால் மாண்டிருக்கிறார்கள்.  நீங்கள் இதைப் படிக்கும்போது எண்ணிக்கை கண்டிப்பாக உயர்ந்திருக்கும்.

சில மாதங்களில் நிலைமை சரியாகிவிடும் எனத் தோன்றலாம்.  ஆனால் கண்டிப்பாக இல்லை.  இந்திய ரூபாயின் மீதான உலக நாடுகளின் நம்பிக்கையை, இந்திய மக்களின் நம்பிக்கையை மோடியின் அறிவிப்பு வேருடன் அறுத்து எறிந்திருக்கிறது. சராசரி மக்களின் உயிரிழப்பு, நேரமிழப்பு, பொருளிழப்பு, மன நிம்மதி இழப்பு என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தின் மீது பாய்ச்சப்பட்டிருக்கும் கத்திதான் இந்த அறிவிப்பு.  பணப்பரிமாற்றத்தை நம்பியே நடக்கும் சிறு, குறு வியாபாரங்கள் எல்லாம் வரலாறு காணாத அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன.  ஏற்கனவே மிகப்பெரிய பணப்பரிமாற்றங்களுக்கு அமெரிக்க டாலர்களை பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார்கள்.  வடகிழக்கு மக்கள் பூட்டான் பணத்தை உபயோகிக்கிறார்கள்.  இணை பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முற்றிலும் முடக்கும் ஒன்று.

இதையெல்லாம் குறிப்பிட்டுதான் மோடியின் நடவடிக்கை எவ்வளவு பெரிய ஆபத்தை இந்தியாவுக்கும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் உண்டாக்கிக் கொண்டிருக்கிறது என விளக்குகிறார்கள் பொருளாதாரம் படித்த உண்மையான பொருளாதார நிபுணர்கள்.  இந்தியாவின் பொருளாதாரம் பலவீனமடையும் போது மக்கள் மத்திய அரசின் மீது நம்பிக்கை இழப்பார்கள்.  ஏற்கனவே தொக்கிக் கொண்டிருக்கும் வடகிழக்கு மாகாண மக்கள் மத்திய அரசின் மீது வெறுப்பில் இருக்கும் நேரத்தில், இந்த நடவடிக்கை அவர்களை முற்றிலும் அந்நியப்படுத்தி இருக்கிறது.  அகண்ட பாரதம் என்றெல்லாம் நீட்டி முழக்கும் இந்துத்துவவாதிகள், இருக்கும் இந்தியாவையே கூறுபோடும் வேலையைத் தான் ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் மோடி என்கிற பூதம் தன்னைப் பிரதமராக்கிய மக்கள் எனும் அலாவுதீன்களை மட்டுமல்லாமல், இந்தியா எனும் விளக்கையும் சேர்த்தே விழுங்கிக் கொண்டிருக்கிறது.  வகிக்கும் பதவிக்குத் தகுதியே இல்லாத மோடியும் அவரது அமைச்சரவையும் பதவி விலகுவதோ, அல்லது பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவதோதான் இந்தச் சூழலில் இந்தியாவை ஓரளவேணும் காப்பாற்றும்.  தேர்தலுக்கு இன்னும் மூன்றாண்டுகள் இருக்கும் சூழலில், இதை பாஜகவோ, நீதிமன்றமோ செய்யும் என்ற நம்பிக்கை மட்டுமே இன்னும் மிச்சமிருக்கிறது. மற்றபடி ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறலாம்.  இந்தப் பேரழிவை தேசநலன் என்ற பெயரில் ஆதரிப்பது மட்டுமல்ல, இந்தப் பேரழிவை அமைதியாக வேடிக்கை பார்ப்பதும்கூட நிகழ்கால ஊடகங்களில் எப்படிப் பதியப்பட்டாலும், இந்திய வரலாற்றில் நிச்சயம் தேசத் துரோகமாகவே பதிவு செய்யப்படும்.

நன்றி : டான் அசோக்
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

(உயிர்மை கட்டுரை)

Comments   

Mahalakshmi G
+1 #1 Mahalakshmi G 2016-12-17 18:35
Dear Ashok

Thanks for this valuable post.

Suggest what an Indian citizen should do for this ?
Quote | Report to administrator
Indian
-1 #2 Indian 2016-12-20 04:32
// Suggest what an Indian citizen should do for this ? //
-----------------------------

Similar to Indian Muslims, you must sacrifice your life for the nation.

Bharat Mata KI Jay...
Quote | Report to administrator
Indian
-1 #3 Indian 2016-12-22 05:24
இந்திய முஸ்லிம்களைப் போன்று பாரத்மாதாவுக்கா க உயிர், உடல், உரிமை, சொத்து பத்து அனைத்தையும், ஒவ்வொரு குடிமகனும் தியாகம் செய்ய வேண்டும்.

அப்படி தியாகம் செய்ய முடியாதவர் தேசத்துரோகிகள். அவர்களுக்கு இந்த நாட்டில் வாழ எந்த அருகதையும் கிடையாது. அவர்கள் நாட்டை விட்டு வெளியேறட்டும். இல்லாவிட்டால் துரத்தியடிக்கப் படுவர்.
Quote | Report to administrator
S.Khalifullah
+2 #4 S.Khalifullah 2016-12-28 14:40
Mr.Ashok's logical logical approach is excellent. BJP members/sympath izers will never agree that Modi is wrong, since they are just like the old lady pointed out by you. However more than 90% of Non BJP will agree with your views and Modi will be out of power in the next election. It is our fate of all Indians to wait for the next election.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்