முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பொதுவானவை

'தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்'

வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் குழுமம் தன் நெஞ்சார்ந்த இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தியாகப் பெருநாள் செய்தி!

அன்புமிக்க சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இதழியலிலும் எழுத்தியலிலும் முன்னெப்போதையும்விடக் கூடுதல் முனைப்புக் காட்ட வேண்டியக் காலக் கட்டத்தை சமகால முஸ்லிம் சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

தாம் ஏற்றுக் கொண்டிருக்கும் வாழ்க்கை நெறி எத்துணை உன்னதமானது என்பதை அறியாமலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் கோடானு கோடி என்ற உண்மை ஒருபுறம்; இஸ்லாத்தை அரைகுறையாக விளங்கிக் கொண்டுத் தடுமாறும் கூட்டம் மறுபுறம்; இஸ்லாத்தில் இல்லாதவைகளைக் கூடுதலாக விளங்கிக் கொண்டு அவற்றுக்கு இஸ்லாமியச் சாயம் பூச முயலும் கும்பல் இன்னொரு புறம்.

இவையன்றி, பிறப்பால் அனைவரும் சமம் என்ற உண்மையை உரத்து முழங்கும் இஸ்லாத்தின் மீள்எழுச்சியைத் தடுப்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கி விடப் பட்டிருக்கும் 'எழுத்துத் தீவிரவாத'க் கூலிக் கும்பல் இஸ்லாத்துக்கு எதிராக எல்லாவித உத்திகளோடும் புற்றீசல்கள் போலப் புறப்பட்டிருக்கும் இவ்வேளை, இஸ்லாத்துக்கு எதிரானத் திட்டமிட்டத் திரித்தல்களையும் திருகுதாளங்களையும் எதிர் கொண்டு முறியடிக்கவும் சரியான தகவல்களைச் சான்றுகளோடு எடுத்து வைக்கவும் எழுத்துப் போராளிகள் நம் சமுதாயத்துக்கு ஏராளமாகத் தேவைப்படுகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் போராளிகள் எதிர் கொள்ள வேண்டியவர்களாக சல்மான், தஸ்லீம் போன்ற அபகீர்த்தியால் அறியப் பட்ட முஸ்லிம் பெயரைத் தாங்கிய இஸ்லாத்தின் எதிரிகளும் அதிகமாக அறியப் படாதவர்களாகத் தமிழுலகில் சிலரும் உளர்.எழுத்துலகில் முஸ்லிம்கள் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் கட்டாயம் இதனோடு முற்றுப் பெற்று விடவில்லை. எழுத்துலகம் எழுச்சியடைந்த 1950 களிலிருந்து 1990 வரையிலான காலகட்டங்களை எடுத்துக் கொண்டால், உலகளாவிய அளவில் இஸ்லாத்திற்கெதிரான மறைத்தல்கள், திரித்தல்கள் அனைத்தும் இக்காலகட்டங்களில் சக்தி வாய்ந்த ஊடகங்களின் மூலம் பரப்பப்பட்டு, அவற்றால் மக்கள் மனதில் இஸ்லாத்தைக் குறித்தத் தவறான எண்ணங்கள் உறுதியாகப் பதியும் விதத்தில் எழுத்துலகைக் கொண்டு எதிரிகள் சாதித்து விட்டதை அறிந்துக் கொள்ள முடியும்.

ஒரு பின்லாடனின் பெயரைக் கூறி ஆப்கான் அரசையும் இல்லாத பேரழிவு ஆயுதங்களின் பெயரைக் கூறி ஈராக் அரசையும் வீழ்த்தி, இன்று லட்சகணக்கான முஸ்லிம்களின் உயிரையும் உடைமையையும் சீரழித்து, நாட்டையே சின்னாபின்னமாக்கி, அடுத்து எந்த முஸ்லிம் நாட்டின் மீது அட்டூழியத்தை அவிழ்த்து விடலாம் என ஆய்ந்து கொண்டிருக்கும் வல்லரசுகளுக்கு, அவைகள் செய்யும் அட்டூழியத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரண்டு நிறுத்தாததன் காரணம் ஊடகங்களால் விதைக்கப் பட்ட இஸ்லாத்தைக் குறித்த எதிர்மறைத் திரிபுச் சிந்தனைகளே.

"ஒரு வாள் சாதிக்க இயலாததை ஒரு பேனா முனையால் சாதிக்க இயலும்" எனக் கூறுவதன் அர்த்தம் நடைமுறையில் எதிர்மறையாகச் சாதிக்கப்பட்டு இன்று உலக அரங்கில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளது முஸ்லிம் சமுதாயம்.

இந்நிலையிலிருந்துச் சமுதாயத்தை மீட்டு எடுப்பதும் அதே பேனா முனையால் மட்டுமே சாத்தியமாகும் என்பதைச் சமுதாயச் சிந்தனையுள்ள அனைவரும் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

"அக்கிரமக்காரன் முன்பு அநியாயத்தை உரக்க, உறுதியாக எடுத்துச் சொல்வதையே போராட்டத்தில் உயர்ந்தப் போராட்டமாகக்" காணும் இஸ்லாத்தில், நிலையான மறுமை வெற்றியைக் கொய்தெடுக்க அக்கிரமக்காரன் ஃபிர்அவ்னுக்கு எதிராகக் குரலெழுப்பி, போராட்டத்தின் மறுவடிவமாகத் திகழ்ந்த மூஸா(அலை) அவர்களின் போராட்ட வழி முறையை, அல்குர்-ஆன் போதிக்கும் அறவழியை நடைமுறைப்படுத்திக் காண்பிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் தற்காலக் கட்டாயத் தேவையாகும்.

உண்மைகளை மறைத்து, திட்டமிட்டக் கட்டுக் கதைகளைச் செய்திகளாக உலகுக்குத் தரும் பெரும்பாலான ஊடகங்களுக்கு மத்தியில் மறைக்கப் பட்ட உண்மைகளை வெளிக் கொண்டு வரும் மிகச் சில ஊடகங்களும் இல்லாமலில்லை. அவை வெளிக் கொண்டு வந்து வெளிச்சம் போடும் உண்மைகளால் ஏற்படும் நல்ல விளைவுகளையும் அதன் சக்தியையும் கண்கூடாகக் காணும்போது சற்றே மனதுக்கு மகிழ்வேற்படுகிறது!. உதாரணத்திற்கு கத்தரில் இருந்து செயல்படும் 'அல் ஜஸீரா' தொலைக்காட்சி, ஆப்கான் மற்றும் ஈராக் அநியாயமாக அழிக்கப்பட்ட வேளைகளில் நடந்த அக்கிரமங்களை வெளிச்சமிட்டுக் காட்டியது. அக்கிரமக்காரர்களுக்கு இதுவரை அது சிம்ம சொப்பனமாகவே திகழ்கிறது.

அதே போன்று தனது பக்க நியாயத்தை உலகில் எவருமே நடுநிலையாக வெளிப்படுத்தத் தயாரில்லாமல் தனக்கு எதிராக அமெரிக்கா போர் தந்திரங்களைக் கையாண்டு காய்களை நகர்த்திக் கொண்டிருந்த வேளையில் 'ப்ரஸ் டிவி' என்ற பெயரில் ஒளிபரப்பைத் தொடங்கிய ஒரு (ஈரானியத்) தொலைக் காட்சி, தனது பக்க நியாயங்களையும் அமெரிக்காவின் போர் அட்டூழியங்களையும் அநியாயங்களையும் ஆதாரங்களுடன் பட்டியல் போட்டு காண்பித்தது. இன்று அதன் பக்கத்திலுள்ள நியாயங்களைப் பேசுவதற்கும் "அமெரிக்காவின் செயல் தவறானதுதான்" எனக் குரல் எழுப்பும் வகையில் மற்ற முக்கிய நாடுகளைத் தூண்டுவதற்கும் அணி திரளவும் ஒரு தூண்டுகோலாகாத் திகழ்கிறது.

அவ்வளவு தூரம் போவானேன். இந்தியாவில் சங் பரிவாரத்தின் தோற்றம், நோக்கம், செயல்பாடுகளை அறியாதவர்கள் மிகச் சொற்பம். சங் பரிவாரத்தின் அரசியல் பிரிவு பாஜக ஆட்சியில் இராணுவத்திற்குச் சவப்பெட்டி வாங்கியதில் செய்த ஊழலிலிருந்து பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாங்கிய லஞ்சம் வரை, இன்று காவி அரக்கன் நரேந்திரமோடி முஸ்லிம்களைக் குஜராத்தில், மக்களைக் காக்க வேண்டிய அரசு இயந்திரங்களை மக்களுக்கு எதிராக உபயோகித்து, சொந்த மாநில மக்களையே வெறித்தனமாகக் கொன்று குவித்ததையும் தெளிவான ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி அனைத்து மக்கள் முன்னிலையிலும் கயவர்களின் முகமூடியைத் 'தெஹல்கா' தெளிவாக விலக்கிக் காண்பித்தது.

2000க்கு முன்னர்வரை மேற்குலக ஊடகங்களால் மூளைச் சலவை செய்யப் பட்டிருந்த மத்திய கிழக்கு நாடுகள், தற்பொழுது தம்மைத் தாமே சுயபரிசோதனை செய்து கொள்ளத் துவங்கியுள்ளன. அதற்கு உதவியது அல்ஜஸீரா மற்றும் ப்ரஸ் தொலைகாட்சியின் பேனா கரங்களே. அவ்வாறே, இந்திய முஸ்லிம்களின் இரத்தத்தையும் சதையையும் உண்டு வாழும் காவிக் கூட்டமும் மக்கள் பணத்தை உண்டு வாழும் அரசியல்வாதிக் கூட்டமும் கவலையுடன் தங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. இந்த மாற்றத்தை ஏற்படுத்தியதில் தெஹல்கா என்ற பேனா முனைகளுக்கு முக்கியப் பங்குண்டு என்பதை மறுக்க இயலாது.

இதே போன்ற பேனா புரட்சி சமுதாயத்தில் நடைபெற வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்வின் போராட்டமாகப் பேனா முனையை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

சமுதாய அங்கங்களுக்கு இப்புனிதத் தியாகப் பெருநாள் தினத்தின் செய்தியாகச் சத்தியமார்க்கம்.காம் ஒன்றைக் கூறிக் கொள்கிறது:

"எதிர்காலச் சமுதாயத்தின் நன்மைக்காக, உலக மக்களின் அமைதியான சுபிட்ச வாழ்விற்காக ஒவ்வொரு முஸ்லிமும் தன்னைத் தியாகம் செய்துக் கொள்ளத் தயாராகிக் கொள்ளட்டும். அந்தத் தியாகம் பேனா முனையினைக் கொண்டு ஆரம்பமாகட்டும். எடுங்கள் பேனாக்களை; எழுதுங்கள் நியாயங்களை - அக்கிரமக்காரர்களும் பயங்கரவாதிகளும் அடங்கும் வரை அல்லது அழியும் வரை!".

இதயத்திற்கு ஓய்வில்லை மூச்சுக் காற்றுச் சுழலும் வரை;

எழுதுகோல் ஏந்தும் கைகளுக்கு ஓய்வில்லை நீதி நிலைநாட்டப்படும் வரை!


Comments   

M Muhamad
+1 #1 M Muhamad 2014-10-04 07:41
DOUBLE SALAM "EID MUBARAK" TO YOU ALL

'தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்'

"TAQABBAL ALLAHU MINNA WA MINKUM"

MAY ALLAH ACCEPT FROM US AND FROM YOU(OUR GOOD DEEDS )
Quote | Report to administrator
முகம்மது அலி ஜின்னா
0 #2 முகம்மது அலி ஜின்னா 2014-10-04 11:03
அஸ்ஸலாமு அலைக்கும்
தங்களுக்கும் ,மற்றும் அனைத்து சகோதரர்களுக்கும ் எனது நெஞ்சார்ந்த இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
அன்புடன்
Quote | Report to administrator
முகம்மது அலி ஜின்னா
0 #3 முகம்மது அலி ஜின்னா 2014-10-04 11:05
அருமையான கட்டுரை
Quote | Report to administrator
sirajudeen
0 #4 sirajudeen 2014-10-11 15:44
Masha Allah
Quote | Report to administrator
Mohamed Ali jinnah
0 #5 Mohamed Ali jinnah 2015-09-25 09:50
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அன்புமிக்க சத்தியமார்க்கம்.காம்
தள குழுவிற்கு மற்றும் வாசகர்களுக்கு
அன்புடன் இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்