முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பொதுவானவை

hijriஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும். மாபெரும் இஸ்லாமியப் பேரணி, முஸ்லிம் மணமக்களைப் பல்லாண்டு வாழ்த்தி, ஹஜ்ஜிலிருந்து திரும்பியவர்களுக்கு என்று வாழ்த்து அச்சிட்டு ஊர்ப்பக்கம் போஸ்டர்கள் ஒட்டியிருப்பார்கள் அதிலும் “ஹி“ புள்ளி ஆண்டு எண் என்று இருக்கும். பெரிய எழுத்திலான ஆங்கில ஆண்டு விபரங்களுடன் அதைவிடச் சிறிய அளவில் ஹிஜ்ரீ விபரங்களும் குறிப்பிட்டிருப்பார்கள்.

நம்மில் மிகப் பெரும்பாலானவர்கள் அதைப் படித்துவிட்டு, ஹிஜ்ரீ விபரங்களை மட்டும் காஃபி ஃபில்டரில் கவனமாய் வடிகட்டிவிட்டு நிகழவிருக்கும் விசேஷத்தின் ஆங்கில ஆண்டு, மாதம், நாள் ஆகியனவற்றை மனதில், டைரியில், காலண்டரில், சுவற்றில், செல்ஃபோனில் இப்படி எங்காவது குறித்து வைத்துக் கொள்வோம்.

நோன்பு, அதைத் தொடரும் பெருநாள், ஹஜ் இதெல்லாம் ஹிஜ்ரீ ஆண்டுடன் சம்பந்தப்பட்டவை என்பது மட்டும் ஏறக்குறைய நம் அனைவருக்கும் தெரியுமே தவிர மற்றபடி அதற்குப் பெரிய முக்கியத்துவம் எதுவும் நம் வாழ்க்கையில் கிடையாது.

ஆங்கில ஏகாதிபத்தியம் பரவி, உலக நாடுகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளை ”நல்லதுக்கும் கெட்டதுக்கும்” ஆதர்ச நாயகனாய் ஏற்றுக் கொண்டபின் அவர்களது காலண்டரும் உலகிலுள்ள பெரும்பாலான சமூகத்திற்கு அடிப்படையான நாள்காட்டியாகி விட்டது. முஸ்லிம் சமூகங்களும் “ஊரோடு ஒத்துவாழ்” என்று அப்படியே ஏற்றுக் கொண்டன. “ஹேப்பி நியூ இயர்” என்றால் அது சனவரி 1!

என்றாலும், சம்பிரதாயமோ, அவசியமோ, முஸ்லிம்களே அக்கறை செலுத்தாவிட்டாலும் அவர்களுடைய வாழ்வில் ஹிஜ்ரீ ஓர் அங்கம். அதனால்தான் விட்டகுறை தொட்ட குறையாக போஸ்டர்கள், காலண்டர்கள், அழைப்பிதழ்கள் என்று ஹி.!

ஹிஜ்ரீ துவங்கி ஆயிரத்து நானூற்று நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. அது ஏன், எப்படி என்பதை அறிந்து கொள்ள ஹிஜ்ரா பரிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஹிஜ்ரா?

அனைவருக்கும் புலம்பெயர்தல் தெரிந்திருக்கும். அதுதான் அரபு மொழியில் ஹிஜ்ரா. பிறமொழிகளில் migration, புலம்பெயர்தல் என்று யதார்த்தமாய்க் கையாளப்படுவதைப் போலன்றி ஹிஜ்ரா என்றதுமே அந்த வார்த்தைக்கு இஸ்லாமிய வழக்கில் பெரும் முக்கியத்துவம், புனிதம் வந்து ஒட்டிக் கொள்கிறது. காரணம் இருக்கிறது.

கையை இறுகப் பற்றிக்கொண்டால் சற்றே பின்னோக்கிச் சென்று மக்காவை எட்டிப்பார்த்துவிட்டு வந்துவிடலாம்.

அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மதுக்கு அப்பொழுது 40 வயதிருக்கும். அனாச்சாரத்தில் மூழ்கிக் கிடந்தது அரேபியா. அவற்றையெல்லாம் பார்த்து வெறுத்து ஓதுங்கி, மனைவியும் மக்களுமாய்த் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார் அவர். திடீரன்று ஒருநாள் வானத்திலிருந்து வந்திறங்கினார் வானவர் தலைவர் ஒருவர் - ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்). "எல்லாரையும் எல்லாவற்றையும் படைத்தவன் யார்?" என்ற ஒற்றைக் கேள்விக்கான விடை தேடிக் குகையில் அமர்ந்திருந்த முஹம்மதுவைத் தட்டியெழுப்பி, கட்டிப்பிடித்து இறுக்கித் தழுவி, ”இன்றிலிருந்து தாங்கள் இறைத்தூதர்” என்ற செய்தியையும் குர்ஆன் வசனங்கள் ஐந்தையும் அறிவித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

முஹம்மது, நபித்துவம் வழங்கப்பெற்ற தூதரானார்கள், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஆரம்பித்தது மனித குலத்தில் ஒரு திருப்பம்.

சிலை வணக்கம், அது சார்ந்த சாஸ்திரம், சம்பிரதாயம் இது எதுவும் கிடையாது, ஒரே ஒருவன்தான் இருக்கிறான். அவன்தான் அனைத்தையும் படைத்தான், பரிபாலிக்கிறான், முடித்து வைப்பான், தீர்ப்பு வழங்குவான், மறுமை துவங்கும் என்றெல்லாம் பேச ஆரம்பித்ததும்,  பலர் சிரித்தார்கள், மிகச் சிலர் “அப்படியா? ஏக இறைவன் ஒருவன்தானா? நீங்கள்தான் அவனது நபியா? எனக்கு நியாயமாய்ப் படுகிறது, ஏற்றுக்கொண்டேன்,” என்றார்கள்.

சிரித்தவர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. நாளாக நாளாகக் கோபம் பெருக்கெடுத்தது. “இதென்ன இந்த மனிதர் புதிதாய்க் குழப்பம் விளைவிக்கிறார்? இவரை ஏற்றுக் கொண்டவர்களைக் கொடுமைப் படுத்தினால் வழிக்கு வருவார்கள்,” என்று துவங்கியது கொடுமை. அது எழுத்தில் எழுதி மாளாத கொடுமை!

“ஒரே இறைவன், முஹம்மதே இறுதி நபி,” என்று சொன்ன காரணத்திற்காக ஒருவரை, அதுவும் ஒரு பெண்ணை, அவருடைய பிறப்புறுப்பிலேயே ஈட்டி செருகிக் கொல்லுமளவுப் பெருங்கொடுமை தலைவிரித்தாடியது மக்காவில்.

இஸ்லாத்தை ஏற்ற சின்னஞ்சிறுக் கூட்டம், மக்கா நகரில் வாழ்ந்து கொண்டிருந்த பென்னம்பெரிய கூட்டத்தினரிடம் மிதி, உதை பட்டது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்கள். பொறுமையின் எல்லைக்கு விரட்டப்பட்ட அவர்களில் சிலர், நபியவர்கள் அனுமதியின் பேரில் சொத்து, சுகம், நிலம் ஆகியனவற்றை மக்காவில் விட்டுவிட்டு, எடுத்துச் செல்ல முயன்ற சுமையோடு அபீஸீனியா நாட்டிற்கு புலம்பெயர்ந்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் அன்றுதான் ஆரம்பித்தது ஹிஜ்ரா. முதல் ஹிஜ்ரா.

நாமறிந்த புலம் பெயர்தலெல்லாம் இன்றும் சர்வ சாதரணமாய் நடப்பதுதான். தொழிலுக்காக, வேலைக்காக, சொகுசுக்காக, திருமணத்திற்காக இப்படியான ஏதோ ஒரு காரணத்திற்காக நாள்தோறும் ஊர்தோறும் புலம்பெயர்தல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதிலெல்லாம் ஏதும் விசேஷமில்லை.

ஆனால் இஸ்லாத்தில் ஹிஜ்ரா என்பது மட்டும் சிறப்பு! தனிச் சிறப்பு!

இறைவன் ஒருவனே என்று ஏற்றுக்கொண்டு அவனைத் தொழ, வழிபட என்று ஆரம்பிக்கும்போது தனிமனித சுதந்தரம் என்பதெல்லாம் கெட்ட சொல்லாய் மாறி, அட்டூழியம் நிகழ்கிறதே, வழிபாட்டு உரிமையெல்லாம் தடுக்கப்படுகிறதே, அதற்கு இணங்கிவிடாமல், இறைவனுக்காகத் தனது அனைத்தையும் துறந்து அந்தத் தனிமனிதன், தனது உறவுகள், உடமைகள், சொத்துகள் என அனைத்தையும் துறந்து, தான் பிறந்த மண்ணிலிருந்து  வெளியேறுவதுதான் ஹிஜ்ராவிற்கு தனிச் சிறப்பைப் பெற்றுத் தருகிறது. அவனுக்காக, அந்த ஒரே இறைவனுக்காக, சட்டென்று அனைத்தையும் உதறிவிட்டுக் கிளம்பிவிடுவதுதான், உலக மகாச் சிறப்பைப் பெற்றுத் தருகிறது.

எந்த அளவிற்கு?

குழந்தையாய், பிறந்த பச்சிளங் குழந்தையாய் புதிதாய் ஆகிவிடுகிறான் அம்மனிதன். அப்படியானால் அதுவரை அவன் செய்திருக்கக்கூடிய பாவம், தீங்கு? அதெல்லாம் துடைத்து எறியப்பட்டு, புதிசாய், புத்தம் புதிசாய் அவனுக்கு மறுபிறப்புத் தொடங்குகிறது. அதனால்தான் ஹிஜ்ரா புனிதம். ஏக இறைவன் நிர்ணயித்த புனிதம்.

முதலில் ஒரு குழு அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரா மேற்கொண்டது என்று பார்த்தோமா? அதற்கடுத்து முஸ்லிம்கள் மற்றொரு குழுவாய்க் கிளம்பி மதீனாவுக்குச் சென்றார்கள். அந்த முஸ்லிம்களுக்கெல்லாம் அது மிகப்பெரும் சிறப்பையும் தரத்தையும் அளித்தது. பட்டமாய் ஒட்டிக்கொண்டது. ஹிஜ்ரா அவர்களின் தரச் சான்றிதழாய் மின்னியது. ஆஸ்கர், நோபல், இத்தியாதி என்று எதுவும் அதற்கு நிகரில்லை.

மக்காவிலோ நாளொரு வேதனையும், பொழுதொரு சோதனையுமாகத்தான் முஸ்லிம்களுக்கு வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது. 13 ஆண்டுகள் ஆகியும் அது முடிவிற்கு வரவில்லை. மாறாய், குரைஷிகளின் அட்டகாசம் பெருகிக் கொண்டு இருந்தது.

இந்நிலையில் மதீனாவில் உள்ள மக்கள் நபியவர்களுடன் அகபா உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு அங்கு இணக்கமான சூழ்நிலை உருவானதும் சிறுகச் சிறுக முஸ்லிம்கள் அந்நகருக்கு ஹிஜ்ரத் மேற்கொள்ள ஆரம்பித்தனர். நபியவர்கள் மட்டும் காத்திருந்தார்கள். ஆனால் நிலைமை நாளுக்குநாள் மோசமாகி, அவர்களைக் கொல்வதற்கே குரைஷிகள் தயாராகிவிட, நபியவர்களுக்கு இறைவனிடமிருந்து அனுமதி வந்தது. “புலம்பெயருங்கள்!”

தோழர்கள் வரலாற்றில் வாசகர்கள் படித்திருக்கலாம். இங்கு அதைச் சற்று விளக்கமாகப் பார்த்துவிடுவோம்.

oOo

அபூபக்ருவின் இல்லத்திற்குக் காலையிலோ மாலையிலோ நபியவர்கள் வருகை என்பது தவறாத வழக்கம். அந்தளவு தோழமை. மிகவும் அலாதியான தோழமை. இருவருக்கும் இடையே இருந்த அணுக்கம் ஓர் அழகிய உன்னதம். ஆனால் அன்று நண்பகல் நேரம். மக்காவில் மக்கள் வீட்டினுள் அடங்கிக் கிடந்தனர். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் அந்நேரத்தில் அபூபக்ருவின் வீட்டிற்கு வந்தார்கள் நபியவர்கள். அந்நேரம் அங்கு அவரின் இரு மகள்கள் அஸ்மா, ஆயிஷா - ரலியல்லாஹு அன்ஹுமா - மட்டுமே இருந்தனர்.

"விஷயம் வெகுமுக்கியம் போலிருக்கிறது. இல்லையெனில் இந்நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் வரமாட்டார்களே" என்று ஆச்சரியத்துடன் அவரை வரவேற்றார் அபூபக்ரு.

அவரது கட்டிலில் அமைதியாக அமர்ந்து "உங்களுடன் உள்ள இவர்களை ஒதுங்கிக் கொள்ளச் சொல்லுங்கள்" என்றார்கள் நபியவர்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இவர்கள் என்னுடைய மகள்கள்தாம். என்ன விஷயம்?"

"நான் புலம்பெயர எனக்கு அனுமதி கிடைத்துவிட்டது"

"அல்லாஹ்வின் தூதரே, தோழமை?" நானும் உங்களுடன் வர அனுமதியுண்டா என்பதை அப்படிக் கேட்டார் அபூபக்ரு.

"ஆம்! தோழமை"

அழுதார் அபூபக்ரு; ஆனந்தத்தால் அழுதார்! மகிழ்ச்சியிலும் இப்படி அழமுடியுமா என்பதை ஆச்சரியத்துடன் பார்த்தார் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.

"அல்லாஹ்வின் தூதரே! இதோ என்னுடைய இரு ஒட்டகங்கள். இத்தருணத்திற்காகவே நான் தயார்ப்படுத்தி வைத்திருந்தேன்"

"அவற்றிக்கான விலைக்கே நான் பெற்றுக் கொள்வேன்" என்றார்கள் முஹம்மது நபி.

இதென்ன பேச்சு? அப்படியெல்லாம் இல்லை, "இது நான் தங்களுக்கு அளிக்கும் நன்கொடை" என்றார் அபூபக்ரு.

"ஓ அபூபக்ரு! இந்தப் பயணம் அல்லாஹ்விற்காக மேற்கொள்ளப்படும் பயணம். அதற்கு உண்டாகும் செலவை நான் எனது பணத்திலிருந்த அளிக்கவே விரும்புகிறேன். ஏனெனில் எனது செலவிற்கு உண்டான வெகுமதியை நான் இறைவனிடம் ஈட்ட விரும்புகிறேன்"

இறைவனின் தூதர், இறைவனுக்காகத் தான் அடைந்த துன்பம், மேற்கொள்ளப் போகும் அசாத்தியச் சோதனைகள் என்பதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. இறைவனின் அளவற்ற வெகுமதி – அதை எவ்வகையிலெல்லாம் ஈட்ட முடியுமோ அவ்வகையிலெல்லாம் ஈட்டுவதற்கு முன்நின்றார் அந்த மாமனிதர் - ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!

பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைக் கிடுகிடுவென செய்தார்கள் அஸ்மாவும் ஆயிஷாவும். உணவை எடுத்து வைத்து உண்பதற்கான விரிப்பு அடங்கிய பயண மூட்டை தயாரானது. அந்த மூட்டையின் பையை எதைக் கொண்டு கட்டுவது என்று யோசித்த அஸ்மா தமது இடுப்பு வார்த்துணியை இரண்டாகக் கிழித்து அதில் ஒன்றைக்கொண்டு கட்டினார். அன்றிலிருந்து அவருக்கு, "தாத்துந் நிதாக்கைன் - வாரிரண்டு வனிதை" என்று பட்டமே ஏற்பட்டுவிட்டது.

மக்காவில் தன்னைக் காணவில்லை என்றதும் குரைஷிகளுக்கு நிச்சயமாய் மதீனா நினைவிற்கு வரும்; மதீனாவுக்குச் செல்வோர் அனைவரும் பயணிக்கும் பாதையைத் தவிர்ப்பதே உசிதம்; அதற்கு மாற்றுவழி தெரியவேண்டும். அதற்கென அப்துல்லாஹ் இப்னு உரைகத் என்பவரை நியமனம் செய்து கொண்டார்கள் நபியவர்கள். அப்துல்லாஹ் ஒரு மிகத் தேர்ந்த வழிகாட்டி. முஸ்லிம் அல்லன் என்றபோதிலும் நம்பிக்கைக்கு உரியவன். அவனிடம் இரு ஒட்டகங்களையும் ஒப்படைத்து, "இதைப் பாதுகாப்பாக பராமரிக்கவும் குறிப்பிட்ட நாளன்று குறிப்பிட்ட இடத்திற்கு இவற்றை ஓட்டிக் கொண்டு வரவும்" என்றும் தகவல் அறிவிக்கப்பட்டது.

நபியவர்கள் புலம்பெயர்ந்து மதீனாவுக்குச் செல்ல உருவான திட்டம் அலீ, அபூபக்ரு மற்றும் அவர் குடும்பத்தினர் - ரலியல்லாஹு அன்ஹும் - தவிர வேறு யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

இரவு கவிழ்ந்தது. முஹம்மது நபியை அவரது வீட்டில் புகுந்து கொலை புரிய குரைஷிகளின் கூட்டணிக் கூட்டம் பதுங்கிவர, அலீயைத் தமது கட்டிலில் உறங்க வைத்து, குரைஷிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தமது வீட்டிலிருந்து வெளியேறினார்கள் நபியவர்கள். அபூபக்ருவின் வீட்டிற்கு வர, அவர் தயாராய்க் காத்திருந்தார். அவரது வீட்டின் பின்புறமிருந்த ஒரு சிறு வாயிலின் வழியே இருவரும் வெளியேறினார்கள். அங்கிருந்து உடனே மதீனா கிளம்பாமல் மக்காவிலிருந்து மதீனா நகருக்குச் செல்லும் பாதையின் நேரெதிர்த் திசையில் - யமனுக்குச் செல்லும் வழியில் - இருவரும் பயணித்து தவ்ருக் குகையை அடைந்து, பதுங்கிக் கொண்டார்கள்.

குகை என்றவுடன் நம் கற்பனையில் மலை, மலையில் ஒரு பொந்துதான் தோன்றும். தவ்ருக் குகை அப்படியில்லை. ஒரு குழிபோல் ஆழமாயிருக்கும். அங்குதான் மறைந்திருந்தார்கள் முஹம்மது நபியும் அபூபக்ரும்.

நபியவர்கள் தப்பித்துவிட்டார்கள் என்பதை அறிந்த குரைஷிகள் கூட்டம் மக்காவெங்கும் தேடிப்பார்த்து அவர்களைக் காணவில்லை என்றதும் வழித்தட வித்தகர்களையெல்லாம் திரட்டிக் கொண்டு முஹம்மது எந்தப் பாதையில் தப்பித்திருப்பார் என்று தேடத் துவங்கியது. தேடித்தேடி பின்பற்றி, சரியாகத் தவ்ருக் குகை அமைந்துள்ள மலையின் அடிவாரம்வரை வந்துவிட்டது அக்குழு.

அபூபக்ரு நிமிர்ந்து பார்த்தால் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கும் அவர்களுடைய கால்கள் தெரிந்தன. திகிலில் வருந்தி கண்ணீர் விட்டார் அபூபக்ரு.

"ஏன் அழுகை?" என்பதுபோல் அவரை இதமாய்ப் பார்த்தார்கள் நபியவர்கள். அபூபக்ரு கிசுகிசுப்பான குரலில் கூறினார்.

"அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மேல் ஆணையாகக் கூறுகிறேன். நான் எனக்காக அழவில்லை. தங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது மட்டுமே என் அச்சம்"

திடமான ஆறுதல் வார்த்தைகள் வெளிப்பட்டன நபியவர்களிடமிருந்து "வருந்தாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்" அல்லாஹ் அபூபக்ரின் உள்ளத்திற்கு சாந்தியை அருளினான்.

மேலே நின்று கொண்டிருந்தவர்களின் கால்களைப் பார்த்தபடி மெல்லிய குரலில் கூறினார், "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் யாராவது அவர்களது கால்களைக் குனிந்து பார்த்தாலே போதும், நம்மைக் கண்டு விடுவார்கள்"

"இருவருடன் துணைக்கு மூன்றாவதாக அல்லாஹ் இருக்க என்ன கவலை அபூபக்ரு?" எத்தகைய உறுதி அது? எத்தகைய ஆழ்மன நம்பிக்கை அது?

இதற்குள் மேலே நின்று கொண்டிருந்த ஒருவன் கூறினான், "நாம் இந்தக் குகைக்குள் இறங்கி அங்கு என்ன இருக்கிறது என்று பார்த்துவிடுவோம்."

அதைக் கேட்ட உமைய்யா இப்னு ஃகலஃப் ஏளனமாய்ச் சிரித்து, "இந்த இடுக்குக்குள் மனிதர்கள் புகுந்திருக்கவே முடியாது" என்றான். ஆளரவமற்ற பாழடைந்த குகை என்ற எண்ணத்தை எதிரிகளின் மனத்தில் அல்லாஹ் ஏற்படுத்த எவ்வளவு நேரமாகும்?

ஆனால் அபூஜஹ்லுக்கு மட்டும் குறுகுறுப்பு இருந்து கொண்டேயிருந்தது. "அல்-லாத் மற்றும் அல்-உஸ்ஸாவின் மீது சத்தியமாகச் சொல்கிறேன், முஹம்மது இங்குதான் எங்கேயோ இருக்கிறார். நம்மைப் பார்த்துக் கொண்டும் நாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டும் இருக்கிறார். அவருடைய மந்திர வித்தைதான் நாம் அவரைக் காணமுடியாமல் நம் கண்களைக் கட்டிப் போட்டுவிட்டது"

அபூபக்ருக்கு அப்துல்லாஹ் என்றொரு மகன் இருந்தார். சிறப்பான புத்திக் கூர்மையுள்ளவர். இந்த நிகழ்வின்போது அவர் பதின்ம வயதுச் சிறுவர். பிரமாதமான உளவுவேலை புரிந்தார் அப்துல்லாஹ். பகலெல்லாம் குரைஷியர்களுடனேயே வலம் வந்து அடுத்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், அவர்களுடைய திட்டம் என்ன, எவ்வளவு குடைச்சலில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் அறிந்து கொள்வது அவர் வேலை. இரவு படர்ந்ததும் குரைஷியர் கண்களில் படாமல் தவ்ருக் குகைக்கு வந்துவிடுவார். மக்காவின் நிகழ்வுகளையெல்லாம் அவர்களுக்கு அறிவித்துவிட்டு இரவு முழுவதும் அவர்களுடனேயே குகையில் தங்கிக் கொள்வார். பிறகு பொழுது புலரும் முன்னரே கிளம்பி தனது வீட்டிற்கு வந்துவிடுவார். இவருக்கு இந்தப் பணி என்றால், ஆமிர் இப்னு ஃபுஹைரா என்பவருக்கு வேறொரு பணி இருந்தது.

அபூபக்ரிடம் பணியாளாக இருந்தார் ஆமிர் இப்னு ஃபுஹைரா. அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்த தோழர். இரவானதும் ஆட்டு மந்தையொன்றை மேய்ச்சலுக்கு ஓட்டுவதுபோல் ஓட்டிக் கொண்டு தவ்ருக் குகைக்கு வந்துவிடுவார். ஆட்டுப்பால் நபியவர்களுக்கும் அபூபக்ருக்கும் உணவாகிவிடும். பிறகு விடிந்ததும் அப்துல்லாஹ் கிளம்பிச் சென்றவுடன் தமது மந்தையை ஓட்டிக்கொண்டு ஆமிர் மக்கா வந்துவிடுவார். அதிலொரு தந்திரமும் இருந்தது. வழித்தட வித்தகர்கள் இருந்தார்கள் என்று பார்த்தோமல்லவா? குரைஷிகளுக்கு ஏதேனும் சிறு சந்தேகம் ஏற்பட்டு அப்துல்லாஹ்வின் வழித்தடத்தைப் பின்பற்றிவிட்டால்? எனவே அப்துல்லாஹ் குகைக்கு வந்து திரும்பிய வழித்தடத்தையெல்லாம் வீடுதிரும்பும் ஆடுகள் கலைத்துக் கொண்டே வந்துவிடும். இத்தகைய எளிய உத்திகள் ஆத்திரத்தில் புத்திமட்டுப் போன எதிரிகளை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.

இவ்விதமாய் மூன்று இரவுகள் கழிந்தன. அதற்கு அடுத்தநாள் காலை முன்னரே பேசி வைத்துக் கொண்டபடி வழிகாட்டி அப்துல்லாஹ் இப்னு உரைகத் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு தவ்ருக் குகைக்கு வந்துவிட்டான். அவர்களுடன் ஆமிர் இப்னு ஃபுஹைராவும் சேர்ந்து கொள்ள, இஸ்லாமிய வரலாற்றுப் பயணம் துவங்கியது - ஹிஜ்ரீ பிறந்தது.

ஆனால், ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.

oOo

ஸஃபர் மாதம் 27இல் துவங்கியது பயணம். ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப்பின் ரபீஉல் அவ்வல் 23ஆம் நாள் யத்ரிப் வந்தடைய அந்நகரம் மதீனத்துந் நபவீ - நபி புகுந்த பட்டணம் – என்ற புதுப்பெயருடன் புதுவரலாற்றிற்குத் தயாரானது. நவீன போக்குவரத்து இல்லாத காலகட்டமில்லையா? தவிரவும் பின்தொடரும் மக்கத்துக் குரைஷிகளிடமிருந்து தப்பிக்க சுற்றுவழியில் பயணித்து அவர்கள் ஒட்டகத்தில் மதீனா வந்தடைய ஒருமாத காலம் ஆகிப்போனது.

ஹஜ்ஜுக்குச் செல்ல நேரிடும்போது, மக்கா-மதீனா நாலரை மணி நேர பஸ் பிரயாணத்தின்போது எட்டரை மணி நேரம் அதிகப்படியாகக் காத்திருக்க நேர்ந்தால், நபியவர்களின் அந்தப் பயணத்தை அசைபோட்டுக் கண்ணை மூடிக்கொண்டால் தூங்கிவிடலாம். கனவில் ஓரிரு சொட்டு நீரும் சுரக்கலாம்.

அதன்பிறகு, மக்காவிலிருந்து ஏனைய முஸ்லிம்கள் சிறுகச் சிறுக மதீனா வந்து சேர்ந்தார்கள். பிற்பாடு, அபீஸீனியாவிலிருந்த மற்ற முஸ்லிம்களும் மதீனாவிற்குக் கிளம்பி வந்துவிட்டார்கள்.

அப்பொழுதும் ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.

நபியவர்களின் மறைவிற்குப் பிறகு அபூபக்கரு ரலியல்லாஹு அன்ஹு ஏறத்தாழ இரண்டரை ஆண்டு ஆட்சி செலுத்திவிட்டு மறைய, அப்பொழுதும் ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.

பிறகு கலீஃபாவாய்த் தலைமை ஏற்றுக்கொண்டார் உமர் ரலியல்லாஹு அன்ஹு. இந்த முதல் இரண்டு கலீஃபாக்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமும் அதன் ஆளுமையும் அரேபியா நாட்டு எல்லையைக் கடந்து பரவ ஆரம்பித்தன. இஸ்லாமிய வரலாறும் வளர ஆரம்பித்தது! வரலாறு வளர்ந்தால் குறிக்கப்படவேண்டுமில்லையா? அப்பொழுது அவர்களிடம் தேதி உண்டு, மாதம் உண்டு. ஆண்டு?

அப்பொழுதும் ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.

உமர் பின் கத்தாப் ஆட்சி செலுத்த ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டிருக்கும். ஒருநாள் அவருக்குக் கடிதம் ஒன்று வந்தது. எழுதியவர் எத்துணைப் பெரிய ஒரு விஷயத்திற்குத் தனது கடிதம் வித்திடப்போகிறது என்பதை அப்பொழுது அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது, அது வெறும் குசலம் விசாரிக்கும் கடிதமா, நிர்வாகம் சம்பந்தப்பட்டதா என்பதெல்லாம் இங்கு முக்கியமில்லை. ஷஅபான் மாதம் இத்தனாம் தேதி என்று குறிப்பிட்டு கடிதம் எழுதப்பட்டிருந்தது.

கடிதத்தைப் படித்த உமர், “ஷஅபான் மாதம் என்றால்? கடந்த ஷஅபானா? அடுத்த ஆண்டின் ஷஅபானா? இந்த ஆண்டின் ஷஅபானா?,” என்றார்.

எந்த ஆண்டு என்று தெரிய வேண்டாமா? எப்படி நிர்ணயிப்பது? மக்காவிலிருந்து மதீனா புலம்பெயர்ந்த முஹாஜிரீன் தோழர்களையும், மதீனாவின் அன்ஸாரீத் தோழர்களையும் ஆலோசனைக்கு அழைத்தார் உமர்.

“நம் மக்களுக்காக ஆண்டு நிர்ணயம் செய்ய வேண்டும். எங்கிருந்து நம் வரலாற்றை ஆரம்பிப்பது? உதவுங்கள்.”

ஒருவர் ”ரோமர்களின் ஆண்டை உபயோகித்துக் கொள்ளலாமே” என்று தெரிவித்தார்.

”அட, அவர்கள் துல்கர்ணைன் காலத்திலிருந்து அல்லவா கணக்கு வைத்துள்ளார்கள். நமக்கு அது சரிபட்டு வராது,” என்று அந்த ஆலோசனை நிராகரிக்கப்பட்டது.

மற்றொருவர் பாரசீகர்களின் ஆண்டை உபயோகிக்கலாமே என்றதும், ”அது சரி, அவர்களுக்கு ஒவ்வொரு முறை ஒரு மன்னன் தேர்ந்தெடுக்கப்படும் போது, கர்ம சிரத்தையாய் முந்தைய மன்னனின் ஆண்டுக் கணக்கை கழித்துக் கட்டுவதுதான் வேலை. அதெல்லாம் சரிப்படாது,” என்று சொல்லிவிட்டார்கள். நமது அரசியல் கட்சிகளை மெச்சிக்கொள்ளலாம் போலிருக்கிறது. முந்தைய அரசின் திட்டங்களைத்தான் சொதப்புகிறார்கள். நல்லவேளையாக காலண்டரில் கைவைப்பதில்லை!

”எதற்கு அங்கேயும் இங்கேயும் தேடிக்கொண்டு? நமக்கு வாழ்வும், வழிகாட்டலும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்த வந்தது. இதையும் அவர்களிடமிருந்து பெற வேண்டியதுதான்,” என்று ஆலோசிக்க ஆரம்பித்தார்கள்.

”ஆம், அதுதான் சரி,” என்ற கருத்து வலுப்பெற்றதும் நபியவர்களின் வரலாற்றிலிருந்து நான்கு முக்கிய நிகழ்வுகளைத் தோழர்கள் குறிப்பிட்டனர்.

ஒன்று, நபியவர்கள் பிறந்த ஆண்டு, அடுத்தது அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தைத் துவங்கிய ஆண்டு, அடுத்தது அவர்களது ஹிஜ்ரா, கடைசியாக அவர்கள் இறந்த ஆண்டு. இதில் எந்த நிகழ்வை அடிப்படையாக அமைத்துக் கொள்வது என்று அடுத்தபடியாகத் தொடர்ந்தது விவாதம்.

நபியவர்கள் எந்த ஆண்டு பிறந்தார்கள் என்பதில் தோழர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அதைப் போலவே அவர்கள் எந்த ஆண்டு தனது பிரச்சாரத்தைத் துவக்கினார்கள் என்பதிலும் அவர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தது.

அவர்கள் இறந்த ஆண்டு என்றாலோ அதை அவர்களால் நினைத்தே பார்க்க முடியவில்லை. அது அவர்களுக்கு ஆற்றமாட்டா துயர். அவர்களின் இழப்பு அவர்களுக்கு சோகத்தை மீட்டெடுக்கும் ஒரு நிகழ்வு. அன்றைய நாள் அவர்களுக்கு உலகமே இருண்டு போனதைப் போலான ஒன்று. எனவே அந்த எண்ணம் கைவிடப்பட்டது.

“மக்காவிலிருந்து மதீனாவிற்கு நபியவர்கள் புலம் பெயர்ந்ததே நமக்கெல்லாம் மிக முக்கிய நிகழ்வு. நமது வரலாறு அங்கிருந்துதான் பெரிய திருப்புமுனையை அடைந்தது. அங்கிருந்து ஆரம்பிப்போம்,” என்று இறுதியில் ஒரு முடிவிற்கு வந்தார்கள்.

அலீ ரலியல்லாஹு அன்ஹுவிடம் கலந்தாலோசித்தார் உமர். “ஷிர்க்கில் மூழ்கியிருந்த நகரைவிட்டு நபியவர்கள் வெளியேறிய நாளிலிருந்தே முஸ்லிம்களின் ஆண்டிற்கான ஆரம்பம் அமையவேண்டும், அதுவே சரியானதாக இருக்கும்” என்பது அலீயின் ஆலோசனை.

அப்படியே முடிவானது!

ஆனால், நபியவர்களின் ஹிஜ்ரா பயணம் துவங்கியதோ ஸஃபர் மாதம். அது இஸ்லாமிய ஆண்டின் இரண்டாம் மாதம். அவர்கள் மதீனாவில் நுழைந்ததோ ரபீஉல் அவ்வல். அது மூன்றாம் மாதம். பிறகு முஹர்ரம் எப்படி முதல் மாதமாக தேர்ந்தெடுக்கப்பட்டது?

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அதற்கான காரணத்தை விவரித்துள்ளார்கள். ”ஸஃபர் மாதம் பிரயாணம் துவங்கியிருந்தாலும், புலம்பெயர்வதற்கான உறுதியான தீர்மானம் முஹர்ரம் மாதமே உருவாகியது. ஹிஜ்ரா மேற்கொள்ள முன்னோடியாய் அமைந்த இரண்டாம் அகபா உடன்படிக்கை துல்ஹஜ் மாதம் நிகழ்வுற்றது. அதற்கடுத்த மாதமான முஹர்ரமில்தான் ஹிஜ்ரா எண்ணம் உறுதியானது. எனவே அதுவே இஸ்லாமிய ஆண்டிற்குப் மிகப் பொருத்தமான முதல் மாதமாக இருக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டது.”

ஹிஜ்ரீ ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.

உமர் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக ஆட்சி செலுத்திய காலகட்டம் இஸ்லாமிய வரலாற்றின் பொற்காலம். அதில் ஹிஜ்ரீ ஆண்டின் நிர்ணயம் மிக முக்கியத் தீர்மானம். எல்லை தாண்டி விரிவடைந்து கொண்டிருந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திலுள்ள முஸ்லிம்களை ஒருங்கிணைக்க அது பேருதவி புரிந்தது.

இன்று ஹிஜ்ரீ 1440ஆம் ஆண்டு என்றால் அது வெறும் எண் அல்ல. அதன் துவக்கத்தில் இஸ்லாமிய வரலாற்றின் வேர் படர்ந்திருக்கிறது; தியாகங்களின் வரலாறு ஒளிந்திருக்கிறது!

-ஆக்கம் : நூருத்தீன்

Comments   
muhsin
-1 #1 muhsin 2010-12-08 08:23
alhamdhuliiah
Quote | Report to administrator
abu hudhaifa
0 #2 abu hudhaifa 2010-12-08 23:09
எல்லோருக்கும் இனிய இஸ்லாமிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
சென்ற வருடம் செய்ய முடியாமல் போன நல்லரங்களையும், செய்யத்தவறிய குர்ஆன் ஹதீஸ் கூறும் அம்சங்களையும்,ந ல்லமுறையில் பயன் படுத்தாமல் விட்டு விட்ட ரமழானையும்,தான தர்மம் சுன்னத் நஃபில் போன்ற இறைவனின் நெருக்கத்தை பெற்றுத்தரும் சுபகாரியங்களையு ம் இவ்வருடம் செய்ய உறுதி எடுத்துக்கொள்வோ மாக.சென்ற வருடம் ஹஜ் செய்ய நாடி போக முடியாமல் போனவர்களுக்கு இவ்வருடம் அப்பாக்கியத்தை அல்லாஹ் நல்குவானாக.உம்ர ா&ஹஜ் செய்ய இதுவரை நாட்டமே கொள்ளாத மக்களுக்கு அல்லாஹ் இவ்வருடம் நாட்டம் கொள்ள கிருபை செய்வானாக.

மொத்தத்தில் சென்ற வருடம் அறுவடை செய்தவற்றை இவ்வருடமும் தொடர்ந்து அறுவடை செய்யவும்,விடுப ட்டுப்போனதை இவ்வருடம் தக்கவைத்துக்கொள ்ளவும் துணை போகும் ஆண்டாக இவ்வாண்டை நாமனைவரும் பயன் படுத்திக்கொள்ள அல்லாஹ் நற்கிருபை செய்வானாக.
Quote | Report to administrator
M.S.K
0 #3 M.S.K 2010-12-09 09:53
Dear Brother( Abu Huthaifaa)s

Please refer the below link about such greetings and comment May Allah guide us.

// இஸ்லாமிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். //

onlinepj.com/.../...
Quote | Report to administrator
ravoof
+1 #4 ravoof 2010-12-11 13:38
can you please let me know is there any valid proof of hadith for spider net spread over on the cave in which prophet (pbuh) was hiding?

To my understanding, that particular thing is considered to be doubtful, since i have heard that souce of hadith is not sahih.

Can you explain me for the sake of Allah?

Thanks
Quote | Report to administrator
நூருத்தீன்.
0 #5 நூருத்தீன். 2010-12-12 04:37
வரலாற்றாசிரியர் கள் முஸ்னத் இமாம் அஹ்மதில் உள்ள கீழ்க்கண்ட குறிப்பின் அடிப்படையில் அந்த நிகழ்வை விவரித்திருக்கிறார்கள்.

Imam Ahmad related from Ibn Abbaas (RA):
"The polytheists followed the trail of the Messenger of Allah (pbuh). Then when they reached the mountain - Mount Thaur - they became confused, and so they climbed the mountain (to search it and to gain a better view of surrounding lands). Upon passing the cave (wherein the Prophet (pbuh) and Abu Bakr (RA) where hiding), they saw upon its door a spider's web. And they said, ' Had he entered here, a spider would not have woven (a web) over its door.'"

Musnad Imam Ahmad (1/348 )

அல்லாஹ்வே முற்றும் அறிந்தவன்.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்