முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

கதை

மீரா பள்ளியிலிருந்து ஒலித்த ஃபஜர் தொழுகைக்கான பாங்கு தெளிவாகக் காதில் விழுந்தது. படுக்கையை விட்டு எழுந்து தொழுகைக்காக துரிதமாக தயாராகிக் கொண்டிருந்தேன்.  சட்டையைப் போட்டுக் கொண்டு செருப்பை மாட்டவும், என் மனைவி தேநீர் கொண்டு வரவும் சரியாக இருந்தது. தேநீரை அருந்தி விட்டு பள்ளி செல்வதற்காக தெருவில் இறங்கி சின்னத் தெரு அருகே செல்லும்போது, "அஸ்ஸலாமு அலைக்கும் அப்துல்லா, நல்லாயிருக்கிறிங்களா தம்பி?" என்ற கணீர் குரலால் தன்னியல்பாக நடையை சற்று குறைத்து பதில் ஸலாம் சொல்லவைத்தது.

"நல்லாயிருக்கேன் ஆரிப் பாய்! நீங்க எப்படி இருக்கிங்க? மகனிடம் இருந்து பணம், போன் எல்லாம் வந்துகிட்டு இருக்கா?"

"அல்ஹம்துலில்லாஹ் நல்லவிதமாக வருது வாப்பா, நீங்க பயணம் போறதா நேத்து இங்கே சிலர் பேசிக்கிட்டாஹ, நம்மகிட்டே கூட ஓரு வார்த்தை சொல்லலையேனு ரோசனையாப் போச்சு!"

"ஆமாம் பாய்! ரெண்டு நாளு கழிச்சி பயணம் போறேன். உங்ககிட்டே சொல்லாம போவேனா?"

ஆரிப் பாய் எங்கள் தெரு முனையில் பலவருடங்களாக தேநீர் கடை வைத்திருப்பவர். அவரின் ஒரே மகன், சவூதியில் அஃப்லாஜில் வேலை பார்க்கிறான். நான் விடுமுறையில் ஊர் வந்து சவூதி திரும்பும் போதெல்லாம் என்னிடம் கடிதமோ, பொருட்களோ ஏதேனும் கொடுத்து அனுப்புவார்.

ஊரில் அநேக டீக் கடைகள் காலத்திற்குத் தகுந்தாற் போல் மாற்றம் கண்டாலும்,  இவர் கடை மட்டும் அன்று பார்த்த நிலையில்தான் இன்றும் இருந்தது. இவர் கடையில் தான் ஃபஜர் தொழுகை முடித்துவிட்டு டீ குடிக்க ஓரு கூட்டமும், ஊர் பலாகழுவ (புறம் பேசுவது) ஒரு கூட்டமும் கூடும். என் நண்பர்கள் அநேக பேர் இங்குதான் கூடுவார்கள்.

 

ஆரிப் பாய் என் பயணத்தை பற்றி விசாரித்தவுடன் என் நினைவுகள் சில வாரங்கள் பின்னோக்கிச் சென்றன.  "காலடித் தடங்களில்/ ஞாபகத் துணுக்குகள்/சிந்தியபடி மனம்" என்று ஒரு கவிஞன் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. ஏற்கனவே பல முறை விடுமுறையில் ஊர்வந்து திரும்பச் சென்றிருந்தாலும், இந்த தடவை ஏனோ சவூதிக்கு மீண்டும் செல்ல மனசு கொஞ்சம் முரண்டு பிடிக்கவே செய்தது. நானும் பலமுறை யோசனை செய்தும் மனசு இடம் கொடுக்கவேயில்லை. "வேண்டாம், போகாதே!" என உள்மனசு சொல்லிக்கொண்டே இருந்தது.

பள்ளியில் இகாமத் சொல்வது காதில் விழுந்ததும் நினைவுகள் கலைந்தன. தொழுது விட்டு வரும்போது பாய் கடையில் கூட்டம் கூடியிருந்தது. அந்தக் கூட்டத்தில் என் நண்பன் உசேன் மரைக்கானும் தென்பட்டான். ஊரில் பலசரக்குக் கடை வைத்திருக்கும் இவன் எப்பவும் ஆரிப் பாய் கடையில் டீ குடித்து விட்டுத்தான் தன் கடையைத் திறப்பான். என்னைப் பார்த்தவுடன் "என்ன மாப்ளே! நமக்கு பண்டாரா போடாம எஸ்கேப் ஆகலாமுனு கடை பக்கமே வரமாட்டேங்குறியா... ஏர்போர்ட் திரும்பும் போது கூப்புடு, கட்டாயம் நானும் வர்றேன்!" என்றான்.

லேசாக ஒதுங்க ஆரம்பித்த நினைவுகள், உசேன் கிளறி விட்டதால் மீண்டும் என்னைச் சுற்றி வட்டமடித்தன. எண்ணங்கள் அசைபோட நடந்து வீட்டிற்குள் நுழைந்தேன். என் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் குழப்பங்களுக்குத் தீர்வு காண உம்மா வாப்பா என்னருகில் இருக்கும் நேரமாக பார்த்து மெல்ல சேதியைச் சொன்னேன். "இந்தத் தடவை நான் சவூதிக்கு திரும்பப் போக விரும்பல-மா, இங்கே எதாவது தொழில் தொடங்கி, செய்யலாமுனு நினைக்கிறேன்" சொல்லி முடித்த பின்னர் சற்று நேரம் கனத்த மெளனம் நிலவியது. உம்மாதான் முதலில் வாய் திறந்தார்கள்.  வாப்பா வின் மவுனம் எப்போதும் பார்ப்பதுதானே!

"என்னதொழில் செய்யபோறே காசு-பணம் அதிகமா ஆகுமே; வச்சிருக்கியா? பொண்டாட்டிகிட்டே சொன்னியா அஹ என்னசொன்னாஹ? அப்புறம் உன் விருப்பம்"

இதையெல்லாம் ஜமால் டைலர் தச்சிக் கொடுத்த வாசல் மறைப்பு பின்னால் நின்று பார்த்து கொண்டு இருந்த மனைவி கையால் சைகை செய்தாள். கிட்டே வரும்படி.  போனவுடனேயே "உம்மாவுக்கும் மகனுக்குமிடையே என்னதான் அப்படி அரைமணிநேரமா பேச்சு?"

"இல்லே... இந்தத் தடவை பயணம் போக விரும்பல!"

"என்னா......து பயணம் போகலையா..? இங்கே இருந்துக்கிட்டு என்ன செய்றதா உத்தேசம்?" பவர் பிளாண்ட் வெடித்து விட்ட மாதிரியான அதிர்ச்சி அவள் கேள்வியில் தெறித்தது.

பதில் சொல்லத் தெரியவில்லை.  அறையின் உள்ளே திரும்பிப் பார்த்தேன்.

பிள்ளைகள் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தார்கள். மூத்தவள் நஸீஹா அப்படியே என் ஜாடை. நன்றாகப் படிக்கிறாள். இளையவள் ஆபிதா ரொம்பவும் செல்லம். அவளுக்கு உம்மாவின் பெயரைத் தான் வைத்தேன். அவள் மழலையை இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். "வாப்பா, நீ நாளக்கி சவுதி போனீயா?" என்பாள் - போறீயா என்பதை அவள் மொழியில் போனீயா என்பதை உணர்ந்து மற்றவர்கள் சிரிக்கும் போது எனக்குள் முள் தைக்கும். இன்னும் இரு வருடங்கள் இவர்களை விட்டும் தூரமாகப் போவதை நினைத்தால் வலித்தது.  அதே சமயம், மனைவி சொன்ன யதார்த்தமும் உறைத்தது. "ரெண்டு பொட்ட புள்ள வச்சீருக்கிங்க! ஞாபகத்தில் இருந்தால் சரிதான்!"

சின்ன புள்ளைகளுக்கு பூச்சாண்டி காட்டி சோறூட்டும் பழக்கம் இவளுக்கு. என்னையும் மிரட்டுகிறாள். ஆனாலும், இப்போது எனக்கே என் தடுமாற்றம் வியப்பைத் தருகிறது.

பல முறை பயணம் வந்து திரும்ப செல்லும் நான், இந்த முறை மட்டும் முரண்டுப் பிடிக்க காரணம் என்ன? எப்போது ஊர் வந்தாலும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடும் நான் இந்தத் தடவைதான் நண்பர்களுடன் சேர்ந்து காதர் அலி நானா தெரு "முச்சந்தியிலும்" யாசீன் நானா வீட்டு "திண்ணையிலும்" உட்கார்ந்து நேரத்தைச் செலவிட்டு இருக்கிறேன். ஒருவேளை அதன் பாதிப்பாக இருக்குமோ? மனது பலவிதமாகச் சிந்தித்தாலும் விடை மட்டும் மனசுக்குப் புலப்படவேயில்லை. இன்னும் எத்தனை காலத்திற்கு இந்தத் தொங்கோட்டம்?

மனதை ஒரு வழியாக தேற்றிக் கொண்டு பயணத்துக்கு ரெடியாகி சொந்த பந்தங்களிடத்தில் பயணம் சொல்லியாகி விட்டது.  இன்று நள்ளிரவில் கிளம்பினால் தான் விடிகாலை ஏர்போர்ட் செல்ல முடியும்.. நண்பன் சபீரிடத்தில் காருக்கும் சொல்லி விட்டேன். பாத்திமா ஹல்வாக் கடையின் இனிப்பு வகைகள் சொந்தங்களிடமிருந்து அன்பளிப்பாக வந்து குவிந்து கொண்டிருந்தன. எது மாறினாலும் இந்த பழக்கம் மட்டும் இன்னும் மாறாமல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இரவு பத்து மணிவரை வராமல் இருந்தவர்களெல்லாம் வந்து எப்படியோ நான் முரண்டு பிடித்த விசயத்தை அறிந்து கொண்டு அறிவுரையை அள்ளி அள்ளி தந்துச் சென்றார்கள்.  இரவுச் சாப்பாடு முடிந்து சிறிது நேரம் படுத்தாலும் தூக்கம் தூரத்திலேயே இருந்து கொண்டு அருகில் வர மறுத்தது.

மணி நள்ளிரவு ஒன்றை நெருங்கும் நேரத்தில் நண்பன் உசேனிடத்திலிருந்து போன் வந்தது. ஏர்போர்ட்டுக்கு கிளம்பிப்போகும்போது தன்னை வீட்டில் வந்து கூப்பிடும் படி சொன்னான். இரவு ஒன்றரை மணியளவில் டிரைவர் சபீர் காரைக் கொண்டு வந்து விட்டான். மனைவி தந்த தேத்தண்ணியை குடித்துவிட்டு கிளம்பத் தயாரானேன். வாப்பா-உம்மா மற்றும் உறவினர்கள் எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு சஃபர் துஆ ஓதிவிட்டு கிளம்பினேன்.

வீட்டின் முன்னால் கார் நகர ஆரம்பிக்கையில் விழியோரோம் கண்ணீர் வரவா என கேட்டது. அது என்ன காவேரி தண்ணீரா தடுப்பதற்கு..? வந்தது வழிந்தது கன்னத்தை நோக்கி.

"வேறு யாரையாச்சிம் கூப்பிடனுமா நானா?" எனக் கேட்டு என் சிந்தனையை மாற்றினான் டிரைவர் சபீர்.  உசேன் வீட்டுக்குப் போகும்படி சொன்னேன். பக்கத்து தெருதான். அவனையும் அழைத்துக் கொண்டு ஊர் எல்லை தாண்டி ஏர்போர்ட் நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம்.

காரிருள் சூழ்ந்த இரவில் காரின் முன் விளக்கு வெளிச்சம் ரோட்டை கழுவிக் கொண்டே வந்தது. பெரியமதகு பகுதியைக் கார் கடக்கையில் என்னையறியாமல் திரும்பிப் பார்த்தேன். பாலத்தில் வரி வசூலிக்கும் பணியாள் தன் கொட்டகையில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த மாதிரி தெரிந்தது. கொடுத்து வைத்தவன். ஊரிலேயே சம்பாதிக்கிறான். ஹும்! பிள்ளைகள் பெண்டாட்டியை நினைத்தால் நினைத்த நேரத்தில் பார்த்துக் கொள்ளும் அதிர்ஷ்டசாலி!  தடுமாற்றம் அதிகரிப்பது போன்று உணர்ந்தேன். மனதை ஆசுவாசப்படுத்த, நீண்ட பெருமூச்சு ஒன்றினை விட்டு லேசாக சீட்டில் தலை சாய்த்தேன்.

கடலூர் - பாண்டிச்சேரி தாண்டிச் சென்று திண்டிவனம் ராஜேஸ்வரி டீக்கடையில்தான் கார் நின்றது. சவூதி திரும்பும் போது ஒரு டீயை இங்கே குடிப்பது வழக்கம். இறங்கி டீ குடித்துவிட்டு மீண்டும் பயணம். அதிகாலை ஐந்து மணியளவில் ஏர்போர்ட்டு அருகே இருக்கும் பள்ளியில் ஃபஜர் தொழுகைக்காக வண்டியை நிறுத்த சொன்னேன். இறங்கி பாத்ரூம் போய்விட்டு ஒளுச் செய்ய எத்தனிக்கையில் சட்டைப் பையிலிருந்த போன் ஒலித்தது. வாப்பாவிடமிருந்து தான்.

"எங்கேப்பா போய்கிட்டு இருக்கே?"

விவரத்தைச் சொன்னேன்.

"ஒண்ணுமில்லைப்பா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கண்ணு முழிச்ச சுஹைல் (என் அக்கா மகன்) மாமா பயணம் போயிட்டாங்களான்னு கேட்டான் - போயிட்டாங்கப்பா ன்னு சொன்னேன்.  அவன் நேத்து ஸ்கூலுக்குப் போகும்போது அவன்கிட்டே போஸ்ட்மேன் லெட்டர் ஒன்னைக் கொடுத்தாராம். சுஹைல் திரும்பி வர நேரமாயிட்டதால அதைக் கொடுக்க மறந்துட்டேன்னு சொல்லி ஓரு கடிதம் கொடுத்தான்."

"ம்.. சரி! என்ன லெட்டர்?" குரல் வற்றிப்போய் சுரத்தின்றி கேட்டேன்.

"நீ ஒரு சேல்ஸ்மேன் வேலைக்கு இன்ட்டர்வியூ அட்டெண்ட் பண்ணியிருந்தயில்லே, அங்கருந்து தான்ப்பா கடிதம் வந்திருக்கு! ஜாப் கன்ஃபர்மேஷன் லட்டர்னு போட்ருக்குப்பா! அதைச் சொல்லலாமுனுதான் போன் போட்டேன்"

சவூதி போய் சேர்ந்தவுடன் போன் செய்.. ஒழுங்கா சாப்பிடு என்று ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்தார். என் காதில் எதுவும் விழவில்லை. மனதில் இனம் புரியாத சந்தோஷம். தடுமாறிக் கொண்டிருந்த உடலும் மனமும் மெல்ல மெல்ல அமைதியானதை உணர்ந்தேன்.

தொழுகையை முடித்துக் கொண்டு காரை நோக்கிச் சென்றேன். இது எதுவும் தெரியாத நண்பன் உசேன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். டிரைவர் சபீர் பக்கத்திலிருக்கும் டீக்கடையில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தான். உசேனை எழுப்பி மூவரூம் சேர்ந்து டீ குடித்தோம்.

ஏர்போர்ட் வளாகத்திற்குள் நுழைய சபீர் தயாராகிய நிலையில் வண்டியை ஊரை நோக்கித் திருப்பச் சொன்னேன். சபீர் அதிர்ச்சியாகி "ஏன் நானா பாஸ்போர்ட்டை வச்சிட்டு வந்துட்டீங்களா?"கேள்வி எழுப்பினான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லே - நான் சொல்றபடி செய்ங்க.  ஊருக்குத் திரும்புவோம்" என்றேன் திடமாக!

உசேன் என்னைத் திட்டித் தீர்த்தபடி காரில் உட்கார்ந்தான்.  சவூதி விசா வேண்டும் என்று துடிப்பவனுக்கு, ஏர்போர்ட் வரை சென்றும் நான் சவூதிக்குப் போகாமல் திரும்ப வந்தால் அதிர்ச்சியாகத் தானே இருக்கும்?

வாப்பா போன் செய்து சொன்ன சேல்ஸ்மேன் வேலையில் பெரிதாக ஒன்றையும் சாதித்து விட முடியாது தான். ஆனால், குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு சென்று வாழும்(!) என்னைத் தடுத்து நிறுத்திட ஒரு தீப்பொறி கிடைக்காதா என நப்பாசையில் இருந்தேன். அது கிடைத்து விட்டது. இந்த வேலை சரியில்லை என்றாலும், இதைவிடச் சிறந்த வேலையோ, சொந்த தொழிலையோ செய்து கொள்ள முடியும் என்பதை அந்த தீப்பொறி சொல்லி விட்டது.

வழியில் பார்த்த வரி வசூலிக்கும் ஆளைப் பார்த்து நன்றி சொல்லணும்.  இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை உணர்த்த சவூதி செல்லத் துடிக்கும் உசேன் போன்ற என் ஊர் இளைஞர்களை அழைத்து "குடும்பம் சூழ இங்கேயே நம்மாலும் பிழைத்து வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!" என்று வகுப்பெடுக்கணும்.

இறுக்கமாக மூடியிருந்த கார் கண்ணாடியை இறக்கி விட்டுக் கொண்டு சுதந்திரமாக உள்ளே புகுந்த காற்றை சுகமாக உள்ளிழுத்தேன்.  மனம் லேசாயிருந்தது. இருள் சூழ்ந்திருந்த வானமும் வெளுத்து பளிச் சென்ற கதிர்கள் சுடர் விட ஆரம்பித்திருந்தன.

- ஹம்துன் அஷ்ரஃப்

Comments   
JAFAR SADIQ
+1 #1 JAFAR SADIQ 2013-03-19 13:37
Solla vendiya karuthukku azhgaaga iyalbaagavaum suvaarasyamaaga vum karpanai kalandhu miga azhaagaaga ezudhiyirikkira ar. Aanaal thirumbi sendra piragu kidaikkum pudhiya velai sariyillaamanal ponal nam kadhai kandhaldhaan.
Quote | Report to administrator
JAFAR SADIQ
+1 #2 JAFAR SADIQ 2013-03-19 13:41
Miga azhagaana kadhai. Solla vendiya karuthukkur etraar pol karpanai kalandhu azhagaaga ezuthiyullaar. Aanaal, thirumbi sendra piragu., kidaitha velai sariyillaiyendr aal KADHAI kandhalaagi vidum. Adhudhaan iyalbaana vaazkkai.
Quote | Report to administrator
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
+1 #3 பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ 2013-03-19 13:58
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

எங்கள் பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியத்தின் (www.mypno.com) ஆசிரியர்களின் ஒருவரான பாசத்திற்குரிய சகோதரர் ஹம்துன் அஷ்ரஃப் அவர்கள் வாழ்க்கையின் எதார்த்த நிலையை படம் பிடித்து காட்டியிருக்கிற ார்.

மண் மணம் மாறாமல் சொல்லும் அதே வேளையில் வெளிநாட்டு வாழ்க்கையின் மறுபக்கத்தையும் தெளிவாக எடுத்துரைகிறார் .

அவருக்காவது விமானம் ஏறுவதற்கு முன் உள்நாட்டு பணிக்கான உத்தரவு கிடைத்தது. வெளிநாட்டு அகதிகளாக வாழும் எத்தனையோ இலட்சம் பேருக்கு இது போன்று கிடைக்குமா? என்பதுதான் சிந்தனையில் கொண்டு வர வேண்டிய செய்தி!

கதையாசிரியருக்கு வாழ்த்துக்கள்! இன்னும் நிறைய வாழ்ககையின் எதார்த்தங்களை கதைகளாக கொண்டு வாருங்கள்!

வெளியிட்ட சத்திய மார்க்கம் தள குழுவினருக்கும் பாராட்டுகள்!

அன்புடன்,
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
Quote | Report to administrator
abdul wahab
+2 #4 abdul wahab 2013-03-19 14:25
alhamdulilla arumaiyana nikaivu, ennudaiya kadanthakalthin nikaivo entru enna thontriyathu aanal naaan saudi chellammal nam nattinileye busines aarambithu alhamdulilla nalla vithamakka nadakkintrathu. nammudaiya sakotharukallum unarnthal nallathu.
Quote | Report to administrator
ஷேக் முஹமது ஷாஜஹான்
+1 #5 ஷேக் முஹமது ஷாஜஹான் 2013-03-19 14:53
இருப்பதை வைத்துக் கொண்டு நிறைவான வாழ்க்கை என்பது இந்தியக்குடும்ப ங்களிடையே
குறைந்து போனதால்தான் பறப்பதற்கு ஆசைப்பட்டு ஒரு தற்காலிக/நீண்ட
துறவு வாழ்க்கையை பேண வேண்டியதாக போகிறது இந்த காலத்தில்..
வயிற்று மட்டும் போதும் எனில் உள்ளூரிலேயே இருக்கிறது ஓராயிரம்
வழிகள்.. மேலான வசதிகள் என்பதாலேயே இந்த புலம்பெயர்தல்
அவசியமாகிறது.. நாயகன் எடுத்திருக்கும் முடிவு நல்ல முடிவுதான்..ஆனால்
வீடு அதை எப்படி எடுத்துக் கொள்கிறது என்பது தெரியாமல் போவதால்
இந்த சிறுகதை பல்வேறு நபருக்கு பல்வேறு அபிப்ராயங்களை தோற்றுவிக்கலாம்.

நாயகன் வீட்டுப் பின்னணி (வசதி வாய்ப்புகள்) விவரிக்கமல் போனது இந்த சிறுகதையின் மையக்கருவுக்கு சற்று பலவீனத்தைத் தருகிறது.இரண்டு
பொண்ணுங்களை வச்சிருக்கோம் என்ற ஒற்றை வரியில் கொஞ்சம்
சொல்லிப் போனாலும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக அதை சொல்லியிருக்க
கதையின் முடிவுக்கு அது ஒரு வீரியத்தையோ நம்பிக்கையையோ
விதைத்திருக்கலாம்..

மற்றபடி ஒரு சிறுகதைக்கு தேவையான பாத்திரங்கள்,காட்சியமைப்புகள்
எல்லாவற்றிலும் நீங்கள் பாஸ்தான்.. வாழ்த்துகள் சகோதரர்..இன்னும
நிறைய எழுதுங்கள்.. எழுத எழுதத்தான் சிறப்பான சிறுகதைக்கென்ற
முடிச்சுகள் பிடிபடும்.புலப்படும்...

உங்கள் சிறுகதையில் வரும் தொங்கோட்டம் என்ற வார்த்தை அனேகம்
பேருக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை ஹஜ் உம்ரா செய்தவர்களைத் தவிர
இது போன்ற சிறப்பு வார்த்தைப் பிரயோகங்கள் உபயோகிக்கும் போது
அங்கு ஒரு நட்சத்திரமிட்டு கீழே அதைப்பற்றி விளக்கம் சொல்லியிருக்கலாம்

எங்கள் அன்பு நண்பர் கவிஞர் இப்னுஹம்துனின் குழந்தை உண்ட
சோறு கவிதையில் வளைகுடா வாழ்க்கையில் எங்களுக்கு வாய்த்தது வரமா
சாபமா என்று கேட்டிருப்பார் அதை இனி நீக்கும் தவமாய் இந்த சிறுகதையின்
முடிவு எல்லோர்க்கும் உணர்த்தும் என நம்பிக்கை இருக்கிறது

வாழ்த்துகள்...

ரியாத் - சவூதி அரேபியாவிலிருந்து
உங்கள் கதையின் நாயகனைப் போல் ஒருவன்
Quote | Report to administrator
Thamim
+1 #6 Thamim 2013-03-19 18:56
"அஷ்ரப்" அவர்களின் எழுத்தை விமர்சிக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை,கதையை படிக்கும்போது நம் கண்முன்னே சம்பவத்தை ஓடவைக்கும் திறன் ஒரு சிலருக்கே உண்டு,வெளிநாட்ட ில் வேலை பார்க்கும் ஒவ்வொரு சகோதரர்களும் பயணம் புறப்படும் அந்த நாள் எவ்வளவு பெரிய வேதனை என்பதை நான் நன்கு அறிவேன்..Really Good Story..!!!
Quote | Report to administrator
அய்மான்
+1 #7 அய்மான் 2013-03-19 19:48
கதை நல்லாருக்கே!

இதுதான் இவருடைய முதல் கதையா?

இல்ல.. இதுக்கு முன் நெறய எழுதியிருக்காரா ?
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
+1 #8 சத்தியமார்க்கம்.காம் 2013-03-20 01:48
அஸ்ஸலாமு அலைக்கும்.

இளம் எழுத்தாளர் ஹம்துன் அஷ்ரஃபின் இந்தக் கன்னி ஆக்கத்திலுள்ள நிறை-குறைகளை எடுத்தெழுதிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

ஓர் ஆக்கத்தில் அதன் கரு முக்கியப் புள்ளி. புள்ளியை நேர்த்தியாக வைத்திருக்கும் சகோ. ஹம்துன் அஷ்ரஃபுக்கு வாழ்த்துகள்! இன்னும் இன்னும் எழுதப் பிரார்த்தனைகள்!
Quote | Report to administrator
சபீர் அஹ்மது
+1 #9 சபீர் அஹ்மது 2013-03-20 23:39
கதை சொல்லும் பாங்கு அருமை. அதிகம் எழுதுங்கள் சகோ. (நான் உங்கள் டிரைவர் சபீர் அல்ல)
Quote | Report to administrator
noorul haq sukarno
+1 #10 noorul haq sukarno 2013-03-23 23:28
அன்பிற்குரிய நண்பர் ஹம்துன் அப்பாஸ் அவர்களின் சகோதரர் ஹம்துன் அஷ்ரப் அவர்களின் சிறுகதை அருமை ஒரு எதார்த்த ,
எளிய தமிழ்மனம் கமழும் எளியநடை .இன்றைய இளையசமுதாயம் சிந்த்திக்கவேண் டிய இந்த தருணத்தில் வெளியிட்டதுக்கு
வாழ்த்துக்கள் இதுபோன்ற நம்சமுதயத்தில் கலை எடுக்கவேண்டிய விசியங்கள் நிறைய இருக்கு தொடருங்கள் நம்முடைய அவாவும்
துவவும் உங்களுக்காக .
Quote | Report to administrator
Nisar
+1 #11 Nisar 2013-04-04 09:53
MIGA NANDRA IRUNTHATHU.nAAN UM KADAI PADIKUM BODHU VELINAANDU POGA KOODATHU ENDRA MANA OTTATHIL THAN PADITHEN.AASIRI YAR ADAI MIGA ARUMAIYAGA MUDITHAR.NAM NAATIL VAIPUGAL ADIGAM THEDINAL UNDU ENBATHAI AZAGAGA SOLLIIRUKIRAR.
Quote | Report to administrator
A.Ahamed HajaShareef
+1 #12 A.Ahamed HajaShareef 2013-04-10 08:33
வீட்டின் முன்னால் கார் நகர ஆரம்பிக்கையில் விழியோரோம் கண்ணீர் வரவா என கேட்டது. அது என்ன காவேரி தண்ணீரா தடுப்பதற்கு..? வந்தது வழிந்தது கன்னத்தை நோக்கி. miga aalamana varigal........
Quote | Report to administrator
நாடோடி
+1 #13 நாடோடி 2014-12-19 11:32
// இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை உணர்த்த சவூதி செல்லத் துடிக்கும் உசேன் போன்ற என் ஊர் இளைஞர்களை அழைத்து "குடும்பம் சூழ இங்கேயே நம்மாலும் பிழைத்து வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!" என்று வகுப்பெடுக்கணும ். //
-----------

தயவு செய்து இது போன்ற கதைகளை எழுதி மண்வாசனையை கிளப்பி வேதனையைக் கிளறி, முஸ்லிமாக பிறந்த ஒரே காரணத்தால் வேலை கிடைக்காமல் வாழ்வுரிமை மறுக்கப்பட்டு வேறு வழியே இல்லாமல் பிழைக்க அரேபியா ஓடிய என் போன்ற லட்சக்கணக்கான துர்பாக்கியசாலி முஸ்லிம் சகோதரர்களின் கண்களை குளமாக்க வேண்டாம். அல்லாஹ் போதுமானவன்.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்